மரபுக்கவிதை, நூல் வெளியீடுகள்,வெளியீடு





ஆலையடிவேம்பு நிருபர் வி.சுகிர்தகுமார்  


 சித்தானைக்குட்டி சுவாமிகளின் ஆசிர்வாதத்தினை பெற்ற அம்பாரை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பனங்காட்டு மண்ணில் பிறந்து 30 வருடகாலமாக சுவிற்சலாந்து நாட்டில் வாழ்ந்துவரும் சமூக சேவையாளரும், தமிழ் கலை இலக்கியவாதியுமான பாவலர்மணி திருமதி. சரளா விமல்ராசாவின்  நான்கு மரபுக்கவிதை நூல்கள் நேற்று 31ஆம் திகதி அவரது தாய் மண்ணான அக்கரைப்பற்று 'சுவாமி விபுலாந்தா சிறுவர் இல்லம்' மண்டபத்தில் மிகவும் பிரமாண்ட முறையில் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.
அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றம் மற்றும் பிரான்ஸ் கம்பன் கழகம் இணைந்து இறைபணிச்செம்மல் த.கயிலாயபிள்ளை தலைமையில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களின் பிரதிநிதியாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்வழங்கல் போக்குவரத்து கிராம அபிவிருத்தி உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர் கலாநிதி எம். கோபாலரெத்தினம் கலந்து கொண்டதுடன் விசேட அதிதிகளாக அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.அதிசயராஜ் தென்கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் பீடாதிபதி எஸ்.குணபாலன் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் அனுசியா சேனாதிராஜா உலகத்தமிழ் கலை இலக்கிய மற்றும் பண்பாட்டு பேரவையின் இலங்கைக்கான தலைவர் சு.சிவபாலன் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் கவிஞர்கள் சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
பாவலர்மணி திருமதி. சரளா விமல்ராஜ் பல நூல்களை இதுவரையில் வெளியிட்டிருந்தாலும் இவ்வாறு நான்கு மரபுக்கவிதை நூற்களையும் தொகுத்தாக்கி தனது தாயார் அமராவதியின் 80ஆவது பிறந்த தினத்தில் இலங்கையில் ஒரே நாளில்; வெளியிடுவது என்பது இதுவே முதல் முறை.
இவ்வாறு அவரால்; தமிழர் பண்பாட்டிலக்கியம் கமழும் 'விருத்தமாயிரம்' தன் மண்ணைப் புகழ்பாடும் 'பனங்காட்டு அந்தாதி' குருவிற்கு மரியாதை செய்யும் 'பாட்டரசர் புகழ் கலி விருத்தம்' சிந்தை மகிழும்'சிந்து பாடுவோம்' ஆகிய நான்கு பெறுமதிமிக்க நூல்கள் பிரதம அதிதியால் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.
பின்னர் முதல் பிரதி கலாநிதி கோபாலரெத்தினம் அவர்களுக்கு வழங்கப்பட்டதுடன் ஏனைய அதிதிகளுக்கும் வழங்கப்பட்டது. இதேநேரம் நூலாசிரியர் உலகத்தமிழ் கலை இலக்கிய மற்றும் பண்பாட்டு பேரவையின் இலங்கை கிளையினரால் கௌரவிக்கப்பட்டதுடன் அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தினரால் பாசுகவி எனும் பட்டம் வழங்கி பெருமைப்படுத்தப்பட்டார்.
நூல் அறிமுக உரையினை கவிஞர் க.யோகானந்தம் வழங்க ஆய்வுரைகளையும் வாழ்த்துரைகளையும் சாமஸ்ரீ ஏ.எல்.கிதுர்முகமட் மற்றும் பொன் லோகநாதன் கவிஞர் தம்பிலவில் ஜெகா பாவேந்தல் பாலமுனை பாறுக் ஓய்வு நிலை அதிபர் மு.கருணாநிதி ஓய்வு நிலை விரிவுரையாளர் நா.செல்வநாதன் ஓய்வு நிலை ஆசிரியர் சா.புண்ணியமூர்த்தி வழங்க நன்றியுரையை இந்து இளைஞர் மன்ற உபதலைவர் க.கிருஸ்ணமூர்த்தி கூறினார்.
நிகழ்வில் நூலாசிரியரின் தாயார் கௌரவிக்கப்பட்டதுடன் அவரது நண்பர்கள் குழாமினராலும் கௌரவிக்கப்பட்டார்.
நிகழ்வில் ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களின் வாழ்த்துச் செய்;தியினை செயலாளர் கலாநிதி கோபாலரெத்தினம் வாசித்ததுடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் ஆகியோராலும் பாராட்டப்பட்டார்.
இரத்தத்தில் ஊற்றெடுத்த கலை இலக்கியவாதியான பாவலர்மணி திருமதி. சரளா விமல்ராஜ் அவர்கள் இதற்கு முன்னரும் பல வரலாற்றுச் சிறப்புமிக்க நூல்களை வெளியிட்டு வெளிநாடுகளிலும் தன் திறமையினை நிரூபித்து பாராட்டுகளைப் பெற்று இலங்கைத் தமிழர்களுக்கு பெருமை சேர்த்தவர்.
அத்தோடு வெளிநாடுகளில் வழங்கப்படும் பல விருதுகளுக்கும் இவர் சொந்தக்காரர் என்பது நம் நாட்டிற்கும் பிறந்த மண்ணிற்கும் புகழை தேடி தருகின்றது.
கலை இலக்கிய ஆர்வலர் மட்டுமல்லாது தனது சொந்த செலவில் பல சமூகசேவைகளையும் செய்துவரும் இவர்'உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப்பேரவை'யின் சுவிற்சலாந் நாட்டுக் கிளையின் தலைவருமாக செயலாற்றி வருகின்றார்.
புலம்பெயர்ந்து சுவிஸ்நாட்டில் கணவருடன் வாழ்ந்து அந்த நாட்டிலேயே கணவரை இழந்து பெண்ணொருவராக தனித்து நின்று தன் பிள்ளைகளுக்கு கல்வி ஊட்டி சமூகத்தில் நற்பிரஜைகளாக வளர்த்தெடுத்ததோடு நின்று விடாமல்  அதன் பின்னராக பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுத்து தளராத முயற்சி சிறப்பான சிந்தனையுடன் கலை இலக்கியத்தில் நுழைந்து இப்படிப்பட்ட சமய சமூக பணிகளையும் துணிந்து முன்னெடுப்பது பாராட்டப்பட வேண்டியதே!