ஓவல் மைதானத்தில் இலங்கையின் அபார வெற்றி






 இங்கிலாந்து அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியீட்டிய இலங்கை அணி பத்து வருடங்களின் பின்னர் இங்கிலாந்து அணியுடன் வரலாற்று டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது. எனினும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 2-1 என்ற அடிப்படையில் கைப்பற்றியது. 


ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக தனஞ்ஜய டி சில்வா தலைமையிலான இலங்கை அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தது. தொடரின் முதல் இரு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முன்னதாகவே தொடரை வென்ற நிலையில் மூன்றாவது போட்டி கடந்த வெள்ளிக்கிழமை த ஓவல் மைதானத்தில் ஆரம்பமானது. 


போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. அதன்படி முதலில் துடுப்படுத்தாடிய இங்கிலாந்து அணி 325 ஓட்டங்களுக்கு சகலவிக்கெட்களையும் இழந்தது. பதிலுக்கு முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய இலங்கை அணி 263 ஓட்டங்களை சேர்த்தது. அதன் அடிப்படையில் 62 ஓட்டங்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து அணி இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சை தாக்குக்கு பிடிக்க முடியாது 156 ஓட்டங்களுக்குள் சுருண்டு போனது. 


அதன்படி இலங்கை அணி வெற்றிக்காக 219 என்ற இலகுவான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. குறித்த இலக்கை நோக்கி பதிலுக்கு ஆடிய இலங்கை அணி ஆரம்பம் முதல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பெத்தும் நிசங்க சதம் கடந்து இலங்கையின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார். இறுதியில் இலங்கை அணி 2 விக்கெட்களை மாத்திரம் இழந்த நிலையில் வெற்றி இலக்கை அடைந்தது.


இலங்கை அணி இறுதியாக 2014 ஆம் ஆண்டு இங்கிலாந்து மண்ணில் வைத்து இங்கிலாந்துடன் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்ததன் பின்னர் தற்போது பத்து ஆண்டுகள் கழித்து இங்கிலாந்துடன் வரலாற்று டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது.