சட்டவிரோத போதைப்பொருள் பாவனைத் தடுப்பு தொடர்பான பதாகைகள்





 Rep/Faslin


சட்டவிரோத போதைப்பொருள் பாவனைத் தடுப்பு தொடர்பான பதாகைகள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் திறந்து வைப்பு

சட்டவிரோத போதைப்பொருள் பாவனை, விற்பனை மற்றும் உற்பத்தி சம்மந்தமான முறைப்பாடுகள் மற்றும் அதன் பாதிப்பிற்கான உளவளத்துனை, சிகிச்சை, புனர்வாழ்வு தொடர்பான தகவல்களைத் தெரிவிக்கத் தொடர்பு கொள்ளவேண்டிய நிறுவனங்கள் மற்றும் தொடர்பு இலக்கங்களைக் காட்சிப்படுத்தும் பதாகைகள் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜே. முரளிதரணினால் இன்று (09) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் திறந்து வைக்கப்பட்டது.
இதில் சட்டவிரோத போதைப்பொருள் பாவனை, விற்பனை மற்றும் உற்பத்தி தொடர்பான தகவல்களை உடனுக்குடன் சம்மந்தப்பட்ட திணைக்களத்திற்கு தெரியப்படுத்தும் துரித இலக்கமான 1927 இனைக் காட்சிப்படுத்தும் பதாகை, மற்றும் அதனோடு தொடர்புடைய திணைக்களங்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள் கொண்ட பதாகைகள் என்பன இதன்போது அரசாங்க அதிபரால் திறந்து வைக்கப்பட்டன.
மேலும் போதைப் பொருள் பாவனையிலிருந்து விடுபடல், அதன் பாவனை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளுக்கு சிகிச்சை மற்றும் உளவளத்துனை ஆலோசனைகள், புனர்வாழ்வு போன்றவற்றைப் பொற்றுக் கொள்ளவும் இப்பதாதைகளால் வழிகாட்டப்பட்டுள்ளன.
சாரணிய இயக்கத்தின் ஜனாதிபதி விருக்கான நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியின் சாரணிய மாணவன் வினுசியாமின் முன்னெடுக்கப்படும் சமுகசேவை திட்டம், போதையொழிப்பு விழிப்புனர்வு நிகழ்ச்சிகள் மற்றும் அவசர இலக்கங்களைக் காட்சிப்படுத்தும் வேலைத்திட்டம் என்பன மாவட்ட செயலக போதைப் பொருள் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவுடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன். இதன் ஒரு அம்சமாகவே இப்பதாதைகள் மாவட்ட செயலகத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது மாவட்ட செயலக நிருவாக உத்தியோகத்தர் கே. மதிவண்ணன், மாவட்ட செயலக போதைப் பொருள் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவின் மாவட்ட இணைப்பாளர் கலாநிதி. ப. தினேஸ் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.