ராஜபக்ஸ ஆட்சியை வீழ்த்திய போராட்டக்காரர்கள் அநுரவிடம் எதிர்பார்ப்பது என்ன?




 


இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடி காரணமாக கொழும்பு நகரின் காலி முகத்திடலில் நீண்ட போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் இந்த ஆட்சி மாற்றத்தை எப்படி பார்க்கின்றனர்? புதிய ஜனாதிபயிடமிருந்து அவர்கள் எதிர்பார்ப்பது என்ன?


இலங்கையில் புதிய அரசியல் மாற்றத்தை எதிர்பார்த்து கடந்த காலங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.


இந்த நிலையில், இலங்கை சுதந்திரமடைந்த காலம் முதல் மாறி மாறி இரண்டு தரப்பினர் ஆட்சிப் பீடத்தில் ஏறுவதை மாற்றியமைக்கும் வகையில் தேசிய மக்கள் சக்தி இம்முறை ஆட்சிப் பீடத்தில் ஏறியுள்ளது.


இலங்கையில் 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் ஊடாக நாட்டின் 8-வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவியேற்ற கோட்டாபய ராஜபக்ஸவின் ஆட்சியானது, பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து 2022-ஆம் ஆண்டில் மக்கள் போராட்டத்திற்கு மத்தியில் வீழ்த்தப்பட்டது.


ஊழல், மோசடி, வீண்விரயத்தைத் தவிர்க்கும் வகையிலான ஆட்சியொன்று அவசியம் என மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்திருந்தனர்.


இந்த ஊழல், மோசடி, வீண்விரயம் ஆகியவற்றைத் தவிர்க்கும் வகையிலான பரப்புரைகளைத் தொடர்ச்சியாக தேசிய மக்கள் சக்தி முன்வைத்து வந்தது.


இதனூடாக, நடைபெற்று முடிவடைந்த ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கிய அநுர குமார திஸாநாயக்கவை மக்கள் தேர்வு செய்திருக்கின்றனர்.


இந்நிலையில், ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுக்கொண்ட அநுர குமார திஸாநாயக்கவின் முதற்கட்டச் செயல்பாடுகள் குறித்து மக்கள் போராட்டம் நடத்திய மக்கள் என்ன சொல்கின்றனர்?


இதனை அறிந்துகொள்ள, மக்களின் எதிர்பார்ப்பு, இந்த ஆட்சி மாற்றத்தின் ஊடாகப் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா, அவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்று காலி முகத்திடல் போராட்டத்தை நடத்திய போராட்டக்காரர்களிடம் பிபிசி தமிழ் வினவியது.



'இனப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு'

மக்கள் போராட்ட முன்னணியின் தேசியச் செயற்குழு உறுப்பினரான ராஜ்குமார் ரஜீவ்காந்த் பிபிசி தமிழிடம் கூறுகையில், “அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் மீது எங்களுக்கு விமர்சனங்கள் இருந்தன. இந்த நாட்டிலுள்ள இனப் பிரச்னைக்கான நிரந்தரத் தீர்வுதான் எங்களின் எதிர்பார்ப்பு.


“இதற்காகத் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தைத் தாண்டி சிந்திக்க வேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கின்றது,” என்றார்.


அதேபோல, தென்னிலங்கை மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை, குறிப்பாக ஊழல் தடுப்பு தொடர்பான தங்களது கோரிக்கைகளை புதிய ஜனாதிபதி நிறைவேற்ற வேண்டும் என ராஜ்குமார் கூறுகிறார்.


“அடிமட்ட மக்களின் பிரச்னைகள் முன்நோக்கிக் கொண்டு வரப்பட வேண்டும். அதற்கான தீர்வுகள் எட்டப்பட வேண்டும்," என்றும் அவர் கூறுகின்றார்.


இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு - புதிய ஜனாதிபதி பதவியேற்ற மறுநாளே நடவடிக்கை

இலங்கை புதிய ஜனாதிபதி சட்டமியற்றுவதில் சிக்கல் - நாடாளுமன்றத்தில் காத்திருக்கும் சவால்

24 செப்டெம்பர் 2024

மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய செயற்குழு உறுப்பினரான ராஜ்குமார் ரஜீவ்காந்த்

படக்குறிப்பு,மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய செயற்குழு உறுப்பினரான ராஜ்குமார் ரஜீவ்காந்த்

'நான்கு தேசிய இனங்கள்’

மேலும் பேசிய அவர், “சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐ.எம்.எஃப்) இருந்து 16 தடவை நாங்கள் சென்று திரும்பியிருக்கின்றோம். ஐ.எம்.எஃப்-இடம் இருந்து விலக வேண்டும். இறைமை, பிணை முறியாளர்களின் நலனைக் காப்பதற்காகவே ஐ.எம்.எஃப் நடவடிக்கைகளுக்கு முன்பிருந்த அரசாங்கம் ஒத்துழைப்பை வழங்கியிருந்தது. அவர்களுக்கு திருப்பிச் செலுத்தும் கடனில் மக்களின் வரிப்பணம் இருக்கின்றது. மக்களுக்கு இந்த சுமையைச் சுமத்த வேண்டாம் எனக் கூறுகின்றோம்,” என்றார்.


மலையகத் தமிழர்கள், இலங்கைத் தமிழர்கள், முஸ்லிம் மக்கள், சிங்கள மக்கள் என்ற நான்கு தேசிய இனங்களும் அடையாளப்படுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்துகிறார்.


“அதேபோன்று, மதச்சார்பின்மையைக் கடைபிடிக்க வேண்டும். மதமற்ற நாடு அல்ல. மதச்சார்பின்மையைக் கடைபிடிக்க வேண்டும். அரசியலமைப்பில் இருக்கின்ற 9-வது சரத்தை நாங்கள் முற்றாக எதிர்க்கின்றோம்" எனவும் ராஜ்குமார் ரஜீவ்காந்த் வலியுறுத்தினார்.


'பொறுத்திருந்து பார்க்க வேண்டும்'

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியானது, நல்லாட்சியா இல்லையா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் என காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்ட டானிஸ் அலி தெரிவிக்கின்றார்.


''இலங்கை அரசியலில் இதுவரை ஒரு தரப்புதான் ஆட்சி செய்தது. ஒரு குடும்பம்தான் ஆட்சி செய்தது. கொள்கை ரீதியில் நாங்கள் இடதுசாரி கொள்கையில் இல்லை. எனினும், இந்த நேரத்தில் மாற்றமொன்று தேவைப்பட்டது.


"அந்த மாற்றம் கிடைத்துள்ளது. நாம் போராட்டம் செய்ததைப் போன்றே, தேசிய மக்கள் சக்தி மக்களோடு மக்களாக இருந்தே தேர்தல் பிரசாரத்தைச் செய்தது. இந்தப் பிரசாரத்திலேயே மக்கள் ஆட்சியை விரும்பிய மக்கள் வாக்களித்துள்ளனர். இது நல்லாட்சியா இல்லையா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்," என அவர் கூறுகின்றார்.


சிறுபான்மையினருக்கு தீர்வு கிடைக்குமா?

காலி முகத்திடல் போராட்டத்தின் ஊடாகக் கோரிய விஷயங்கள், தற்போது ஆட்சிப் பீடம் ஏறியுள்ள தேசிய மக்கள் சக்தி மூலம் நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகின்றதா என காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பிபிசி தமிழ் வினவியது.


இந்தக் கேள்விக்கு காலி முகத்திடல் போராட்டத்தின் பின்னர் அந்தப் போராட்டக்காரர்களால் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் போராட்ட முன்னணியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் சட்டத்தரணி சுஷ்திகா அருணலிங்கம் பிபிசி தமிழுக்கு பதிலளித்தார்.


“முறைமை மாற்றம், சிறுபான்மை மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என நாங்கள் கேட்டோம். முறைமை மாற்றம் என்பது ஒரு நீண்ட கால விஷயம். இது ஒரு மாதத்தில் கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை,” என்றார்.


குறிப்பாக, இந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும் என்ற தங்கள் வாக்குறுதியை அடுத்து வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின் ஊடாக செய்யக்கூடிய ஒரு விஷயம் எனக் குறிப்பிட்ட அவர், அதனை புதிய ஜனாதிபதி நிறைவேற்ற வேண்டும் எனக் கூறினார்.


“பொருளாதார, அரசியல், கலாசார ரீதியான மாற்றங்கள் ஏற்பட வேண்டும். அது இந்த ஒரு தேர்தலில் வந்துவிடும் என நாங்கள் நம்பவில்லை," என அவர் குறிப்பிடுகின்றார்.


இலங்கை ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸ தோல்விக்கு என்ன காரணம்?

23 செப்டெம்பர் 2024

இலங்கையின் புதிய ஜனாதிபதி இந்தியாவை விட சீனாவுடன் அதிக நெருக்கம் காட்டுவாரா?

23 செப்டெம்பர் 2024

மக்கள் போராட்ட முன்னணியின் நிறைவேற்று குழு உறுப்பினர் சட்டத்தரணி சுஷ்திகா அருணலிங்கம் பட மூலாதாரம்,SUSTHIKA ARULLINGAM

படக்குறிப்பு,மக்கள் போராட்ட முன்னணியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் சட்டத்தரணி சுஷ்திகா அருணலிங்கம்

தமிழர் பிரச்னைக்குத் தீர்வு?

தமிழர் பிரச்னைக்கு இந்த ஆட்சியின் ஊடாகத் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதா என மக்கள் போராட்ட முன்னணியின் நிறைவேற்று குழு உறுப்பினர் சட்டத்தரணி சுஷ்திகா அருணலிங்கம் பிபிசி தமிழ் வினவியது.


''சிறுபான்மை மக்களின் உரிமை மற்றும் தேசிய இனப் பிரச்னைக்கான தீர்வு போன்ற விஷயங்கள் இருக்கின்றனவா என்று தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தைப் பார்த்தோம். அந்தக் கொள்கைப் பிரகடனத்தில் அதற்கான தீர்வுகள் எதுவும் வழங்கப்படவில்லை. 13-வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவோம் என்றுகூட அதில் போடப்படவில்லை.


“அதனால், இவர்களின் ஆட்சியில் சிறுபான்மை மக்களின் உரிமைப் போராட்டத்திற்கும், அரசியல் அபிலாஷைகளுக்கும் ஒரு தீர்வு வரும் என்றுகூட நான் நம்பவில்லை,” என்றார் அவர்.


இருந்தபோதிலும், முன்னைய காலங்களில் இருந்த அரசாங்கங்களைப் போன்று இனவாத ரீதியாகச் செயற்பட மாட்டார்கள் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.


“கடந்த ஆட்சியாளர்களால் செய்யப்பட்ட சட்டவிரோதக் குடியேற்றம், பௌத்தமயமாக்கல் போன்றவற்றை இவர்கள் செய்ய மாட்டார்களா அல்லது தொடர்ச்சியாக இதனைச் செய்வார்களா என்பதைப் பார்த்தே ஒரு முடிவுக்கு வர வேண்டும்," என சுஷ்திகா அருணலிங்கம் தெரிவித்தார்.


புதிய அரசின் மீதான நம்பிக்கை

காலி முகத்திடல் போராட்டத்தின்போது, போராட்டக்காரர்களால் எதிர்பார்த்த முறைமை மாற்றம் இந்த ஆட்சியில் கிடைத்துள்ளது என நம்புகின்றீர்களா என போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரரான தாஹா ஈன்ஸ்டீனிடம் பிபிசி தமிழ் வினவியது.


"மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் எதிரொலி மற்றும் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். பூர்த்தி செய்யக்கூடிய வகையில் அவருடைய காய் நகர்வு இருக்கின்றது.


"அவர்கள் நியமிக்கின்ற அமைச்சுக்கள் மற்றும் அரச இயந்திரங்களில் பொறுப்பாளர்களைப் பார்க்கின்றபோது நம்பிக்கை வருகின்றது. இது சரியான பாதையில் செல்லும் அரசாங்கம் என்று நம்புகின்றோம்," என தாஹா ஈன்ஸ்டீன் தெரிவிக்கின்றார்.


கடந்த தேர்தலில் வெறும் 3% வாக்கு மட்டுமே பெற்ற இவர், இம்முறை வென்றது எப்படி?

23 செப்டெம்பர் 2024

அநுர குமார திஸாநாயக்க பின்னணி, தமிழர் பிரச்னையில் அவரது நிலைப்பாடு என்ன?

23 செப்டெம்பர் 2024

காலி முகத்திடல் போராட்டக்காரர் தாஹா ஈன்ஸ்டீன்

படக்குறிப்பு,மக்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் என நம்புகிறார் தாஹா ஈன்ஸ்டீன்

போராட்டக்காரர்களின் அடுத்த நடவடிக்கை?

இலங்கை எதிர்நோக்கிய பொருளாதார நெருக்கடியை அடுத்து 2022-ஆம் ஆண்டு நாட்டில் பாரிய போராட்டங்கள் நடத்தப்பட்டன.


இந்தப் போராட்டங்களை அடுத்து, அப்போதைய ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ஸ, நாட்டை விட்டு தப்பிச் சென்ற நிலையில், ரணில் விக்ரமசிங்க புதிய ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.


ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்ட நிலையில், நாடு எதிர்நோக்கிய பாரிய பொருளாதார நெருக்கடி வழமைக்குத் திரும்ப ஆரம்பித்தது.


எனினும், இலங்கை அரசியல் கட்டமைப்பில் முறைமை மாற்றமொன்று அவசியம் என்ற கோரிக்கை தொடர்ச்சியாக வலுப்பெற்று வந்த நிலையில், தேசிய மக்கள் சக்தி மீதான நம்பிக்கை இலங்கை மக்கள் மீது வலுப் பெற்றது.


ஊழல், மோசடி, வீண்விரயத்திற்கு எதிராகத் தொடர்ந்து குரல் எழுப்பி வந்த தேசிய மக்கள் சக்தி மீதான நம்பிக்கை காரணமாக, இம்முறை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் ஊடாக அநுர குமார திஸாநாயக்க தேர்வு செய்யப்பட்டார்.


காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டோரின் குழுவொன்று ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட நிலையில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் களமிறங்குவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.