அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் நிலைமையினை கருத்தில் கொண்டு தமிழ் கட்சிகள் ஓரணியில் இறங்க வேண்டும்!




  



வி.சுகிர்தகுமார்   


 அம்பாரை மாவட்டத்தில் தமிழ் கட்சிகள் மற்றும் குழுக்கள் அனைவரும் ஒரு பொதுச்சின்னத்தில் தேர்தலில் போட்டியிட வேண்டும் என அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச அனைத்து இந்து ஆலயங்களின் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நேற்று அக்கரைப்பற்றில் இடம்பெற்ற ஒன்றியத்தின் கூட்டத்தின்போதே இத்தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
அம்பாறை மாவட்டமானது மூவின மக்கள் வாழும் செறிந்து வாழும் பிரதேசம். இதில் மூன்றாம் நிலையில் வாழும் தமிழ் மக்கள் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வது ஒற்றுமையின்றேல் மிகவும் சவால் மிக்கது.
இதனை பெற்றுக்கொள்வதற்கு நாம் அனைவரும் ஒரு அணியில் தேர்தலில் களம் இறங்க வேண்டும். இந்த உண்மை யாவரும் அறிந்தது கடந்த தேர்தல்கள் மூலம் நாம் கற்றுக்கொண்ட பாடமாகவும் அமைந்துள்ளது.
இதன் அடிப்படையில் தமிழ் கட்சிகள் மற்றும் குழுக்கள் அனைவரும் விட்டுக்கொடுப்புடன் ஒரு பொதுச்சின்னத்தில் கீழ் அம்பாறை மாவட்ட தமிழ் இனத்திற்கு சேவை செய்யக்கூடியவர்களை நிறுத்தி தமிழ் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாத்துக் கொள்ள முன்வருமாறும் தமிழ் கட்சிகள் மற்றும் குழுக்கள் அனைவரிடமும் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச அனைத்து இந்து ஆலயங்களின் ஒன்றியம், இந்து அமைப்புக்கள் சார்பில் உத்தியோகபூர்வ  அறிக்கை மூலமாக கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.