செட்டிபாளையத்தின் வரலாற்று நூல் வெளியீட்டு விழா!




 


( விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா)


 "செட்டிபாளையம் கிராம மக்களின் வாழ்வும் வளமும்"( The life and prosperity of Chettipaalayam people) என்ற நூலின் வெளியீட்டு விழா கடந்த (16) திங்கட்கிழமை  செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந் நூல் உருவாக்கத்திற்கும் வெளியீட்டிற்கும் இணைப்பாளராக திருவருள் நுண்கலை மன்றம் செயற்பட்டது.

ஓய்வுநிலை அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மேலதிக செயலாளர் கலாநிதி சிதம்பரப்பிள்ளை அமலநாதன் தொகுத்த இந் நூலின் வெளியீட்டு விழா,
 கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி மூ.  கோபாலரெத்தினம் தலைமையில் நடைபெற்றது .

பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் கலந்து சிறப்பித்தார்.

சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்  அஜித் ரோகண கலந்து சிறப்பிக்க, கௌரவ அதிதிகளாக பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் த.ஸ்ரீதரன் மன்முணை தென் எருவில் பற்று உதவி பிரதேச செயலாளர் சத்திய கௌரி தரணிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நூல் ஆய்வுரைகளை கிழக்கு பல்கலைக்கழக சமூக விஞ்ஞான துறைப் பேராசிரியர் வே. குணரெத்தினம் மற்றும் கட்புல தொழில்நுட்ப கலைத்துறை தலைவர் கலாநிதி சு.சிவரெத்தினம் ஆகியோர் நிகழ்த்தினார்.

 இறுதியில் முதல் பிரதி ஏனைய பிரதிகள் அதிதிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

ஏற்புரையை நூலாசிரியர் ஓய்வுநிலை அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மேலதிக செயலாளர் கலாநிதி சிதம்பரப்பிள்ளை அமலநாதன் நிகழ்த்தினார்.

நூல் அறிமுகம்.

செட்டிபாளையம் கிராம மக்களின் வாழ்வும் வரலாறும் எனும் வரலாற்று நூல் 706 பக்கங்களைக் கொண்டது. 
மட்டக்களப்பு சரித்திரத்தினை அறிய முற்படும் எவரும் செட்டிபாளையம் கிராமத்தவர்களின் பங்களிப்பை புறந்தள்ளி வரலாற்றை தெரிந்து விட முடியாது. மட்டக்களப்பு மாவட்டத்தின் பூர்வ சரித்திரம் இக்கிராமத்தில் ஏட்டு வடிவில் பன்னெடுங்காலமாக பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. இவ்வேடுகளின் முழுமையான பங்களிப்புடன் மட்டக்களப்பு மான்மியத்தை உருவாக்கியதாக  அதன் ஆசிரியர் FXC நடராஜா குறிப்பிடுகின்றார்.  ஏட்டுச்சுவடி விடயத்தானங்களுக்கான புலமைத்துவ பின்னணி கொண்டவர்களாக இக்கிராமத்தவர் அறியப்படுகின்றனர். இவ்வாறு தொன்ம வரலாற்றை தன்னகத்தே கொண்ட பழம்பெரும் கிராமமாகவும் கல்வி கலை கலாச்சாரம், பண்பாடு இலக்கியம் அரசியலென பல்துறை சார்புகளை இலங்கை தேசத்திற்கு மிளீரச் செய்யும் எழில் மிகு கிராமம் செட்டிபாளையம் எனலாம்.

செட்டிபாளையம் கிராமத்தின் வரலாறு செட்டிபாளையம் கிராமத்தின் வாழ்வும் வளமும் என்னும் தலைப்பின் கீழ் புவியியல்,கல்வி, வாழ்வாதாரம், அனர்த்தம், பண்பாடு, கலை, மருத்துவம், சோதிடம், விளையாட்டு, மொழி, தமிழ்ப் பணி, ஆத்மீகம், அரசியல், மாண்மியமும், குடி அமைப்பும் ஆகிய பதினைந்து துறைகளின் ஊடாக பதினாறு கட்டுரைகள் மூலம் இக்கிராமத்தின் வரலாறு பதினெட்டு துறைசார்ந்த பிரதான ஆசிரியர்களால் ஆய்வு செய்யப்பட்டு நூல் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.