சஜித்தின் தோல்வி ஹக்கீமின் வாயிலேயே இருக்கிறது




 



மாளிகைக்காடு செய்தியாளர்


எதிர்வரும் 21ம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் தோல்வியை தழுவ போகிறார் என்பதை தெரிந்து கொள்ள பல நேரங்களோ அல்லது பல காரணங்களோ தேவையில்லை. ஒரே ஒரு காரணம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் எப்போது சஜித்துக்கு ஆதரவாக நின்று அவரை வெல்ல வைக்கபோகிறேன் என்று கூறினாரோ அந்த நிமிடமே அவர் தோற்று முடிந்தது என ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி தலைவர் கலாநிதி அன்வர் எம். முஸ்தபா தெரிவித்தார்.

சம்மாந்துறையில் இடம்பெற்ற இயலும் ஸ்ரீலங்கா பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில், ஏனென்றால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடைய தலைவர் 2000 ஆம் ஆண்டிலிருந்து எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்கிறாரோ அந்த வேட்பாளர் படுதோல்வியையே சந்தித்து வந்துள்ளார். தபால் வாக்களிப்புக்கு பின்னர் வந்து ஆதரவளித்த நல்லாட்சி அரசை தவிர மற்ற எல்லா அரசாங்கமும் தோற்றே இருக்கிறது.

மக்கள் ஜனாதிபதி ரணிலின் பக்கம் இருப்பதனால் இந்த முறை சஜித் பிரேமதாசா அவர்கள் தோற்கின்றார் என்பது உறுதியாகியுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் தேதி நாட்டை சுபிட்சத்துக்கு கொண்டு செல்ல வேண்டுமா அல்லது வங்குறொத்து நிலைக்கு கொண்டு செல்ல வேண்டுமா? என்பது தொடர்பான தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்ற நிலையில் இந்த சம்மாந்துறை மண்ணில் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கின்றோம்.

இந்த சம்மாந்துறை மக்கள் இந்த கூட்டம் நடக்கும் பொது மைதானத்தை மறக்க மாட்டார்கள். உங்களுக்கும் நன்றாக ஞாபகம் இருக்கும். கேஸ் சிலிண்டர் எடுப்பதற்காக வயதானவர்கள் மயங்கி விழுந்த சம்பவங்கள் சம்மாந்துறையில் மட்டுமல்ல நாட்டின் பல பாகங்களிலும் பதிவாகியது. இதனை நினைவில் கொண்டு நாங்கள் வாக்களிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அளிக்கப்படுகின்ற வாக்குகள் இந்நாட்டை சுபிட்சமான நிலைக்கு கொண்டு செல்லும்.

சம்மாந்துறையில் 50,000 மேற்பட்ட வாக்குகள், எத்தனையோ விளையாட்டு கழகங்கள், எத்தனையோ விளையாட்டு வீரர்கள், பொது அமைப்புக்கள் இருந்தாலும் ஒரு பொது விளையாட்டு மைதானம் இல்லாத நிலையில் இந்த மைதானத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த இளைஞர்களுக்கு எதிர்வரும் காலங்களில் ஒழுங்கான எதிர்காலத்தை 21 ஆம் தேதி வெற்றிக்குப் பின் ஜனாதிபதி ரணிலினால் சாத்தியமாகும் என்பதை நினைவில் கொண்டு வாக்களியுங்கள் என்றார்.