ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சியில் இணைந்து கொண்ட மொட்டு, மர, மயில் பிரமுகர்கள் !




 




ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பிலான தெஹிவளை- கல்கிசை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் அடங்களாக கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள் மற்றும் பிரமுகர்கள் ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சியில் இணைந்து கொள்ளும் நிகழ்வு அக்கட்சியின் தலைவர் கலாநிதி அன்வர் எம் முஸ்தபா தலைமையில் ராஜகிரியவில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று (05) நடைபெற்றது.

முன்னர் ஏனைய அரசியல் கட்சிகளுடன் இணைந்திருந்த இந்தப் புதிய உறுப்பினர்கள், கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களிலும் தமது பிரசன்னத்தை வலுப்படுத்துவதற்காக ஸ்ரீலங்கா ஜனநாயகக் கட்சியில் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்து ஸ்ரீலங்கா ஜனநாயகக் கட்சி அங்கத்துவத்தையும் பெற்றுக்கொண்டனர்.

இதன்போது ஸ்ரீலங்கா ஜனநாயகக் கட்சி ஆதரவளித்துள்ள ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதி செய்வதில் தங்கள் முழு ஈடுபாட்டையும், தனது ஆதரவையும் வழங்க உறுதியளித்துள்ள அவர்கள் ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி சார்பில் பிரச்சார நடவடிக்கைகளிலும் ஈடுபட உள்ளனர் என்று ஸ்ரீலங்கா ஜனநாயகக் கட்சியின் பிரச்சார செயலாளர்.ஏ.எல்.ஏ. ஹுபைல் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா ஜனநாயகக் கட்சியின் தவிசாளர் பொறியியலாளர் என்.ரீ. சிராஜுதீன், தேசிய அமைப்பாளர் எம்.எம். சஹீர்த்தீன், அரசியல் செயற்குழு உறுப்பினர் பொறியியலாளர் மோசஸ் மரியதாசன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.