தமிழர் பிரதேசங்களில் வாக்களிப்பு விகிதம் குறைவு!





 ( வி.ரி.சகாதேவராஜா)


 அம்பாறை மாவட்டத்தில் குறிப்பாக தமிழர் பகுதிகளில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு வீதம் காலையில் குறைவாக காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது என்று பவ்ரல் தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் கந்தையா  சத்தியநாதன் தெரிவித்தார்.

 அதேவேளை ஏனைய முஸ்லிம் சிங்கள பகுதிகளில் காலையிலேயே கூடுதலான மக்கள் வாக்களித்ததை காண முடிந்தது என்றார் .

பவ்ரல் தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகள் காலையில் சேவைக்குடியிருப்பு பவ்ரல் சேவோ தலைமையகத்தில் போதிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு ஆரம்பமாகியது.

அதேவேளை இன்றைய தினம் பெரிய நீலாவணையில் ஒரு குறிப்பிட்ட வேட்பாளரின் பிரசுரங்கள் விநியோகம் இடம்பெற்றதை நேரடியாக காணக்கூடியதாக இருந்தது .அதனை சென்று தடுத்திருந்தோம். 
அதேவேளை எமது குழுவினர்  திருக்கோவில் பிரதேசத்திற்கு சென்ற பொழுது அங்கே தேர்தல் பிரச்சார சுவரொட்டிகள் அகற்றப்படாமல் இருந்ததை அங்கே அவதானிக்க முடிந்தது.

அது அவ்வாறிருக்க இதுவரை எந்த ஒரு தேர்தலிலும் இல்லாத அளவு மிகவும் குறைவாக அதாவது 11 முறைப்பாடுகளே இம்முறை தமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக இணைப்பாளர் கந்தையா சத்தியநாதன் மேலும் தெரிவித்தார் .

எமது பவ்ரல்  தேர்தல் கண்காணிப்பு குழுவினர் மாவட்டத்தின் சகல பகுதிகளிலும் சென்று தேர்தலை மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றார்கள் என்றும் தெரிவித்தார்.