மாளிகைக்காடு செய்தியாளர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் அவர்கள் அடிக்கடி சாய்ந்தமருதூரையும், மக்களையும் கூட்டங்களில் கொச்சைப் படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.கடந்த தேர்தல் காலங்களில் கூட விட்டு வைக்காமல் நீங்கள் சாய்ந்தமருது பள்ளிவாசல் கும்பல் என்று கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. இதற்கு முன்னரும் பல கூட்டங்களில் உங்களின் சாய்ந்தமருது மக்கள் மீதான வெறுப்பையும் குரோத மனப்பான்மையும் வெளிப்படுத்தி உள்ளீர்கள் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சாய்ந்தமருது அமைப்பாளர் ஏ.எல்.எம்.சலீம் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவரது அறிக்கையில் மேலும், உங்களை 2001 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நான்காம் திகதி இதே பள்ளிவாசல் முன்றலில் மறைந்த மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் உங்களுக்கு வழங்கப்பட்டதற்கு கைமாறாக செய்கிறீர்கள் போலும். கிழக்கு மாகாணத்தில் சாய்ந்தமருது ஒரு பழமை வாய்ந்த ஊர் என்பதுடன் மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி, மத்திய முகாம் என்று பல ஊர்களில் நெருங்கிய குடும்பமாக உள்ள தாய் ஊர், சுமார் 50,000க்கும் மேற்பட்ட வாக்காளர்களை அம்பாறை மாவட்டத்தில் கொண்டுள்ளது என்பதை தாங்கள் மறந்து செயற்படுவது கட்சியின் அழிவை நோக்கிய பயணத்தில் முக்கிய மைல்கல் என்பதனை உணர மறுக்கின்றீர்கள்.
2015 ஆம் ஆண்டில் தாங்கள் தலைமையில் பிரதித் தலைவர் எச்.எம்.எம்.ஹரீஸ் உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் ஒன்றிணைந்து, சாய்ந்தமருது மாளிகைக்காடு பள்ளிவாசல் சமூகத்தை உள்ளூராட்சி அமைச்சரிடம் அழைத்துச் சென்று நகர சபைக்கான வேண்டுகோளை கையளித்து இதனை உடனடியாக செய்ய வேண்டும் என்று உங்கள் மு.கா.பட்டாளம் முன்னிலையில் அன்றைய அமைச்சர் கரு ஜயசூரிய அவர்களிடம் கேட்டீர்கள்.
அதன் பின்னர் 2015 ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி அன்றைய பிரதமர் முன்னாள் ஜனாதிபதி ரணிலைக் கூட்டி வந்து எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற கூட்டத்தில் சாய்ந்தமருது உள்ளூராட்சி சபையை தேர்தல் முடிந்த கையுடன் பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்தீர்கள். பின்னரான காலப்பகுதியில் அது சம்பந்தமான 50 க்கும் மேற்பட்ட கூட்டங்களை பள்ளிவாசல் சமூகத்துடன் நடத்தி ஏமாற்றினீர்கள்.
மேடைகள் உங்கள் நக்கல் நையாண்டி என்பது மேலும் தொடர்வது முஸ்லிம் காங்கிரஸை அரவணைத்த முதலாவது ஊர் என்ற அடிப்படையிலும், உங்களுக்கு தலைவர் முடி சூட்டிய ஊர் என்ற அடிப்படையிலும் சட்ட நடவடிக்கை கூட எடுக்கக் கூடிய செயல் என்பதை நீங்கள் ஒரு சட்ட மேதையாக இருந்தும் மறந்து கிழக்கிலங்கையின் பழமை வாய்ந்த சாய்ந்தருதூரை திட்டித் தீர்ப்பது நியாயமற்றது என்பதை உணர்ந்து மேடையில் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பதை கூறிக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment
Post a Comment