உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஓய்வு பெறுகிறார்





(  நமது நிருபர் )

36 வருட கால கல்விச் சேவையிலிருந்து சம்மாந்துறை வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா நாளை (27)வெள்ளிக்கிழமை தனது அறுபதாவது வயதில்  ஓய்வு பெறுகிறார்.

சம்மாந்துறை வலயத்தில் 26 வருடங்களாக மேலாக சேவையாற்றி வெள்ளி விழாக் கண்ட ஒரே ஒரு உதவிக் கல்விப் பணிப்பாளரும், சம்மாந்துறை வலய கல்வி சார் உத்தியோகத்தர்கள் நலன்புரி ஒன்றியத்தின் தலைவருமான விபுலமாமணி வித்தகர் வி.ரி.சகாதேவராஜா( ஜே.பி)  காரைதீவைச் சேர்ந்தவராவார்.

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் மிகவும் நெருங்கிய பற்றாளனான இவர் பத்து வருடங்கள் காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் ஆசிரியராகவும் சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனையில் 26 வருடங்கள் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும் சேவையாற்றியுள்ளார் .

நாளை மறுநாள் சனிக்கிழமை இவரது அறுபதாவது அகவை பிறந்த நாளாகும்.
 
பேராதனை பல்கலைக்கழக கலைத்துறை பட்டதாரியான இவர் மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலையில்  பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியராவார். பட்டப்பின் கல்வி டிப்ளோமோ மற்றும் கல்வி முதுமாணிப் பட்டம் பெற்றவராவார்.

இலங்கை அதிபர் சேவையின் முதலாந்தர அதிபராவார். கல்வி சமய சமூக பொருளாதார ஆன்மீக செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்.

இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத் தலைவராக அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத் தலைவராக இவ்வாறாக பல அமைப்புகளின் சமூக செயற்பாட்டாளராக பணியாற்றி வருகிறார்.