வாக்குறுதிகளை அள்ளி வீசும் ஜனாதி வேட்பாளர்கள்,வருவாயை ஈட்டுவது எப்படி என்பது பற்றி கூறவில்லை




 


எதிர்வரும் 2024 இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து முக்கிய வேட்பாளர்களும் தேர்தல் வாக்குறுதிகளில் வரிச்சுமையைக் குறைப்பதாக உறுதி அளித்திருக்கின்றனர்.


கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கையை வளமான நாடாக மாற்றும் வகையில் அடுத்த 5 வருடங்களில் நிறைவேற்றப் போவதாகக் கூறும் வாக்குறுதிகள் பற்றிய தகவல்கள் அவற்றில் இடம்பெற்றுள்ளன.


ஆனால், தங்கள் வாக்குறுதிகள் மற்றும் கொள்கைகளைச் செயல்படுத்த எவ்வளவு பணம் செலவாகும், அதற்கான பணத்தை எவ்வாறு ஈட்டுவது என்று ஜனாதிபதி வேட்பாளர்கள் குறிப்பிடவில்லை. ஆனால், வரி திருத்தங்கள், அரசுத் துறைகளின் செயல்திறன் மற்றும் புதிய திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம் வருமானத்தை ஈட்ட அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.


ஆனால், இலங்கையின் ஜனாதிபதி வேட்பாளர்கள் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான பணத்தை எப்படி ஈட்டுவார்கள்?


விளம்பரம்


பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.


இலங்கை ஜனாதிபதி தேர்தல்பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,2019-ஆம் ஆண்டின் ஈஸ்டர் தாக்குதல், அதன் பிறகான கோவிட் தொற்றுநோய், ஆகியவற்றுக்குப் பிறகு இலங்கைப் பொருளாதாரம் பின்னடைவைச் சந்தித்தது

இலங்கையின் பொருளாதார நிலை

கடுமையான கடன் நெருக்கடி மற்றும் வெளிநாட்டுக் கையிருப்புப் பற்றாக்குறையை எதிர்கொண்ட இலங்கை, அதிலிருந்து படிப்படியாக மீண்டு வருகிறது.


சர்வதேச நாணய நிதியத்துடன் செய்யப்பட்ட கடன் திட்டத்தின் படி, அரசு வருமானத்தை அதிகரிப்பதற்காகத் தற்போதைய இலங்கை அரசாங்கம், மாதம் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் பெறும் தொழிலாளர்களிடமிருந்து 8%-36% PAYE வரி (Pay As You Earn வரி) அறிமுகப்படுத்தி VAT சதவீதத்தை அதிகரித்து வரி வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.


2019 ஜனாதிபதித் தேர்தலின் போது அமெரிக்க டாலர் ஒன்றின் பெறுமதி சுமார் 200 இலங்கை ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 300 ரூபாயாக உள்ளது. கடந்த ஆண்டு 370 ரூபாயாக இருந்தது.


2019-ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது 120 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் தற்போது 300 ரூபாயைத் தாண்டியுள்ளது.


2022-ஆம் ஆண்டின் துவக்கத்தில் எதிர்கொண்ட கடுமையான அந்நியச் செலாவணி நெருக்கடியின் காரணமாக இறக்குமதிகள் கட்டுப்படுத்தப்பட்டன. வாகனங்களின் இறக்குமதி மேலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.


பல தொழில் வல்லுநர்கள் அதிக வரி காரணமாக சிரமப்படுகின்றனர். சிலர் வேறு நாடுகளுக்கு இடம்பெயர்கின்றனர்.


2019-ஆம் ஆண்டின் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல், அதன் பிறகான கோவிட் தொற்றுநோய், ஆகியவற்றுக்குப் பிறகு பின்னடைவைச் சந்தித்த இலங்கை சுற்றுலாத் துறை படிப்படியாக மீண்டு வருகிறது.


இவ்வாறான பின்னணியில் புதிதாக தெரிவு செய்யப்படவுள்ள ஜனாதிபதி, தனது தேர்தல் வாக்குறுதிகளையும் கொள்கைகளையும் செயல்படுத்தி, நாட்டில் போதுமான வருமானத்தைப் பெற்று நாட்டை முன்னேற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.


இந்நிலையில், நாட்டின் வருமானத்தை அதிகரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் முன்வைக்கும் திட்டங்கள் என்ன?


இலங்கை ஜனாதிபதி தேர்தல், ரணில் விக்கிரமசிங்கபட மூலாதாரம்,PMD Sri lanka

படக்குறிப்பு,ரணில் விக்கிரமசிங்க

ரணில் விக்கிரமசிங்கவின் 'சாத்தியமான இலங்கை'

தற்போதைய இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 'புலுவன் ஸ்ரீலங்கா' என்ற தனது தேர்தல் அறிக்கையில் புதிய வணிகப் பொருளாதார முறையை முன்மொழிந்துள்ளார். இந்த வணிகப் பொருளாதார அமைப்பின் கீழ், பல்வேறு துறைகளை மேம்படுத்தி வருமானம் ஈட்ட முன்மொழியப்பட்டுள்ளது.


அடுத்த 5 ஆண்டுகளில் சுற்றுலாப் பயணிகளின் வருகையை 25 லட்சத்தில் இருந்து 50 லட்சமாக அதிகரித்தல்

தேசிய செல்வ நிதியை நிறுவுதல்

1,000 ஏக்கரில் புதிய முதலீட்டு மண்டலங்களை நிறுவுதல்

மீன் ஏற்றுமதி வருமானத்தை இரட்டிப்பாக்கி 30 கோடி டாலர் ஆக்குவது

வருடாந்திரப் பால் உற்பத்தியை 38 கோடி லிட்டரிலிருந்து 82 கோடி லிட்டராக உயர்த்துதல்

காலநிலை மாற்ற நிதியை நிறுவுதல்

கார்பன் வரியை அறிமுகம் செய்தல்

இலங்கை ஜனாதிபதி தேர்தல், சஜித் பிரேமதாசபட மூலாதாரம்,Sajith Premadasa

படக்குறிப்பு,சஜித் பிரேமதாச

'அனைவருக்கும் வெற்றி': சஜித் பிரேமதாச

எதிர்க்கட்சித் தலைவரும் சமகி ஜன பலேவேக கூட்டணியின் சஜித் பிரேமதாச முன்வைத்திருக்கும் ‘சமத ஜயக்’ என்ற தேர்தல் அறிக்கையில் சமூகச் சந்தைப் பொருளாதாரத்தின் மாதிரி முன்மொழியப்பட்டுள்ளது.


அரசின் வருவாயை அதிகரிப்பதற்கு வரியை உயர்த்துவது மட்டும் தீர்வாகாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

வருவாயை அதிகரிக்கவும், செலவுகளைக் குறைக்கவும், மாசுபாட்டைக் குறைக்கவும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதல்

அனைத்து மாவட்டங்களிலும் 25 புதிய தொழில் மண்டலங்களை நிறுவுதல்

இலங்கையின் சுற்றுலாத் துறையை நாட்டுக்கு அந்நியச் செலாவணி ஈட்டித் தரும் முன்னணித் துறையாக மாற்றுதல்

அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்க முக்கிய சட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல்

5 ஆண்டுகளில் 10 லட்சம் வீடுகளுக்கு சூரிய ஆற்றல் அளித்தல்

நியாயமற்ற வரி கட்டமைப்புகளைத் திருத்துதல்

காரணி சந்தை சீர்திருத்தங்களைச் செயல்படுத்துதல்

இலங்கை ஜனாதிபதி தேர்தல், அனுரகுமார திஸாநாயக்கபட மூலாதாரம்,ANURAKUMARA DISANAYAKE

படக்குறிப்பு,அனுரகுமார திஸாநாயக்க

அனுரகுமார திஸாநாயக்கவின் 'செழிப்பான நாடு, அழகான வாழ்க்கை'

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவின் 'செழிப்பான நாடு, அழகான வாழ்க்கை' என்ற தேர்தல் அறிக்கையில் உற்பத்திப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது மிகவும் முக்கியமானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.


வரி விகிதங்களை நியாயமான முறையில் திருத்துவது, வரி தளத்தை விரிவுபடுத்துதல்

தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் சுற்றுலாத் துறை வளர்ச்சி மூலம் அந்நியச் செலாவணி கையிருப்பை மேம்படுத்துதல்

ஒரு ஏக்கர் விவசாய நிலம் மூலம் 30 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுதல்

தேசியத் தேயிலை உற்பத்தியை 40 கோடி மெட்ரிக் டன்களுக்கு மேல் உயர்த்துவது

ஒரு ஹெக்டேருக்கு 6 மெட்ரிக் டன் அரிசி தயாரித்தல்

2028-க்குள் அலங்கார மீன் மற்றும் அலங்கார நீர்வாழ் தாவர ஏற்றுமதி வருமானத்தை 25% அதிகரித்தல்

2030-க்குள் தகவல் தொழில்நுட்பத் துறையின் ஆண்டு வருவாயை 500 கோடியாக உயர்த்துதல்

இலங்கை ஜனாதிபதி தேர்தல், நாமல் ராஜபக்ஸபட மூலாதாரம்,NAMAL RAJAPAKSHA

படக்குறிப்பு,நாமல் ராஜபக்ஸ (வலது)

நாமல் ராஜபக்ஸவின் 'உங்களுக்காக ஒரு வளர்ந்த நாடு'

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஸ, ‘உங்களுக்காக ஒரு வளர்ந்த நாடு’ என்ற தனது தேர்தல் அறிக்கையின் மூலம் அரச வருமானத்தை அதிகரிப்பதற்கான திட்டங்களை முன்வைத்துள்ளார்.


சுங்கம், வருமான வரி, மற்றும் கலால் துறையின் குறைபாடுகளை உடனடியாகச் சரிசெய்து, அரசு வருவாயை உருவாக்குதல்

அந்நியச் செலாவணியைப் பெறுவதற்கான சிறப்பு முதலீட்டு வசதிகளை அறிமுகப்படுத்துதல்

அந்நியச் செலாவணி வருவாயை அதிகரிக்கச் சிறப்புச் சுற்றுலா ஊக்குவிப்புத் திட்டத்தைச் செயல்படுத்துதல்

வருமான வரி செலுத்தும் தனிநபர்கள் மற்றும் வணிகங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், எளிமையான வரி முறையை அறிமுகப்படுத்துதல்

அடுத்த தசாப்தத்தில் 1,800 கோடி டாலர் அளவிலான உற்பத்தியை உருவாக்க, விவசாயம், மீன்வளம், விலங்கு மற்றும் வனவியல் தொடர்பான தொழில்களை மேம்படுத்துதல்

இரண்டாம் நிலைத் துறை உற்பத்தி மூலம் அடுத்த பத்தாண்டுகளில் 4,500 கோடி டாலர்கள் அளவுக்கான உற்பத்தி மதிப்பைப் பொருளாதாரத்தில் சேர்த்தல்

தகவல் தொழில்நுட்ப மண்டலங்களை நிறுவுதல்

இலங்கை ஜனாதிபதித் தேர்தல்

இந்த ஆண்டு இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் 38 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் தங்களது தேர்தல் அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளனர்.


ஆனால், இந்த வேட்பாளர்கள் வரி சீர்திருத்தங்கள், வெளிநாட்டு முதலீடுகள், மற்றும் திட்டங்கள் மூலம் நாட்டுக்கு எவ்வளவு வருவாயை எதிர்பார்க்கிறார்கள் என்பதைக் குறிப்பிடவில்லை.