மோட்டார் வாகன பயிற்சிநெறி சம்மாந்துறையில்





( வி.ரி. சகாதேவராஜா)


கபொத சாதாரண தரம் பயின்ற மாணவர்களுக்கு வரப்பிரசாதமான மோட்டார் வாகன பயிற்சிநெறி ( auto mobile )சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரியில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரியின் அதிபர் சதாசிவம் தியாகராஜா மேற்கொண்ட பெருமுயற்சியின் காரணமாக இலங்கையில் சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரிக்கு மாத்திரம் இதற்கான 
விசேட அனுமதி  வழங்கப் பட்டுள்ளது.

இதற்கான விசேட அனுமதியினை தொழில்நுட்ப பயிற்சி திணைக்கள பணிப்பாளர் நாயகம் எஸ். ஜெகத் வழங்கியுள்ளார்.

கல்வி அமைச்சால் நடைமுறைப்படுத்தப்படும் 13 + திட்டத்தின் கீழ் மோட்டர் வாகன தொழில்நுட்ப கற்கை நெறியின் அங்குரார்ப்பண வைபவம் நேற்று முன்தினம் (03.09.2024) சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது .

ஒன்றரை வருட பயிற்சி நெறியான இதற்கு சம்மாந்துறை வலயத்தைச் சேர்ந்த சம்மாந்துறை முஸ்லிம் மத்திய தேசிய பாடசாலை, நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயம்,தாருஸ்ஸலாம் மகா வித்தியால மாணவர்கள் 25 பேர் கற்கைநெறிக்கு தெரிவு செய்யப்பட்டார்கள். 

அங்குரார்ப்பண நிகழ்வில் நிகழ்வு கல்லூரி அதிபர் சதாசிவம் தியாகராஜா தலைமையில் நடைபெற்றது.

பிரதம விருந்தினராக சம்மாந்துறை  வலயகல்விப் பணிப்பாளர்  செபமாலை மகேந்திரகுமார் கலந்து சிறப்பித்தார்.
சிறப்பு விருந்தினராக சம்மாந்துறை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் கலந்து கொண்டார்.

பயிற்சி நெறிக்கு பொறியியலாளர் எம்.ஹம்ஸா பொறுப்பதிகாரியாக செயற்படுகிறார்.

இப் பயிற்சி நெறியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு மாதம் பத்தாயிரம் ரூபா கொடுப்பனவாக வழங்கப்படவிருக்கிறது. ஏனைய போக்குவரத்து சலுகைகளும் வழங்கப் படவிருக்கிறது.
சமகாலத்தில் சர்வதேச ரீதியாக இப்பயிற்சி நெறிக்கு அதிக கிராக்கி நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது