டெக்னோபார்க் திறப்பு விழா...




 



ஜே.கே.யதுர்ஷன் 

பிராந்திய செய்தியாளர்

*கிழக்கு பல்கலைக்கழகத்தில் டெக்னோபார்க் திறப்பு விழா...


இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 'தொழில்நுட்ப வளாகம்”  மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது. 

இத் தொழில்நுட்ப வளாகமானது, கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் அவர்களின் முயற்சியில், The Gate Institute  நிறுவன அணுசரனையுடன்  உருவாக்கப்பட்டுள்ளது. 

இன்று இடம்பெற்ற இவ்வளாக திறப்பு விழாவில், இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பிரதித் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சந்தன பி.உடவத்த பிரதம விருந்தினராகவும், உபவேந்தர் மற்றும் பணிப்பாளர்களுக்கான குழுவின் தலைவரும் இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழக உபவேந்தருமான  பேராசிரியர் சஞ்ஜீவனி கினிகத்தர மற்றும் இலங்கை வவுனியா பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் அருளம்பலம் அற்புதராஜா ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்தனர்.


இல. 50, புதிய கல்முனை வீதி, மட்டக்களப்பில் அமைந்துள்ள, கிழக்குப் பல்கலைக்கழக தொழிநுட்ப வளாகமானது, தொழில் நிறுவனங்களின் அபிவிருத்தியில் தொழிநுட்ப அடிப்படையிலான கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதை பிரதான நோக்கமாகக் கொண்டு மேலும்  பல்வேறு உப நோக்கங்களையும், குறிக்கோள்களையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அவற்றுள், கிராமப்புற இளைஞர்களுக்கு பயிற்சிகளை வழங்கி அவர்கள் வருமானம் ஈட்டுவதற்கும், அவர்களின் பொருளாதார மற்றும் சமூக நிலையை மேம்படுத்துவதற்கும் வழிகாட்டுதல்,  வெற்றிகரமான வணிக முயற்சிகளை தோற்றுவிப்பதனூடாக பிராந்தியத்தில் வேலை வாய்ப்புகளையும், வருமானத்தையும் அதிகரிக்கச் செய்தல், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் மனப்பாங்கை விருத்தி செய்வதன் மூலம் நாடு முழுவதும் தொழில் முயற்சிகளை உருவாக்குதல் போன்றன முக்கிய சிலவாகும். 

மேலும், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி, புத்தாக்க ஆய்வுகூடங்கள், புலமைச்சொத்து பாதுகாப்புக்கான ஒத்துழைப்பு, தேசிய தொழில்நுட்ப பரிமாற்றம், பல்கலைக்கழகம் மற்றும் கைத்தொழில் நிறுவனங்களுக்கு இடையிலான ஆராய்ச்சி ஒருங்கிணைப்பை ஊக்குவித்தல், வணிக முயற்சிகளுக்கான தொழிநுட்ப ஆலோசனை சேவைகளை நடைமுறைப்படுத்தல், வணிக முயற்சிகளுக்கான பயிற்சி மற்றும் செயன்முறைகளை ஏற்பாடு செய்தல், இணைந்து பணியாற்றக்கூடிய இடவசதிகளை வழங்குதல், அலுவலக இடவசதிகளைப் பகிர்ந்து கொள்ளல், கூட்டங்கள் மற்றும் மாநாடுகளை நடாத்துவதற்கான இடவசதிகளை வழங்குதல், முப்பரிமான அச்சு, லேசர் மூலம் வெட்டுதல், ஆய்வுகூட பகுப்பாய்வு சேவைகள் உள்ளிட்ட சேவைகளை இந்த வளாகம் வழங்கவுள்ளது.


இந்நிலையில், புத்தாக்க ஆய்வுகூடம், மாநாட்டு வசதிகள், இத் தொழில்நுட்ப வளாகமானது அலுவலக வசதியை பகிர்ந்து கொள்ளல் அல்லது குறைந்த செலவில் வாடகைக்கு வழங்கல், தொழில் முயற்சி செலவினங்களை குறைக்கும் பொருட்டு இயந்திரங்கள் மற்றும் ஆய்வுகூட வசதிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கல், வணிக வாண்மைத்துவ ஒத்துழைப்பு அல்லது ஆலோசனை வழங்கல், உள்ளக மற்றும் வெளி தொடர்பாடல் வசதிகளை வழங்கள் ஆகிய நான்கு கூறுகளில் இந்த தொழிநுட்ப வளாகம் கவனம் செலுத்தி பணிகளை முன்னெடுத்துச் செல்லவுள்ளது.


இத் தொழில்நுட்ப வளாகம் தொழில் முயற்சியாளர்களின் வருமானத்தை அதிகரிக்கவும், சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களின் வருமானத்தை நிலைபேறானதாக மேம்படுத்தும் ஒரு காப்பகமாகவும் செயற்படும்.


ஜே.கே.யதுர்ஷன் 

பிராந்திய செய்தியாளர்