எல்லா மத மக்களும் விரும்பும் தலைவனை வெற்றி பெறச் செய்வோம்
மாளிகைக்காடு செய்தியாளர்
ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவை ஆதரித்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளர் முன்னாள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்களின் தலைமையில் பெண்கள் மாநாடு மீராவோடை அமீர் அலி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், முன்னாள் அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றினார். இங்கு உரையாற்றிய அவர்,
நாளுக்கு நாள் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. கூட்டத்தில் பங்கேற்கச் செல்லும் இடங்களில் எல்லாம் முண்டியடித்துக்கொண்டு மக்கள் எங்களை சந்திக்கின்றனர். சிறந்த ஆட்சியை சஜித் பிரேமதாச வால் தான் தர முடியும் என்ற நம்பிக்கை நாட்டின் நாலா திசைகளுக்கும் பரவி வருகிறது. வெற்றி நிச்சயிக்கப்பட்டுள்ளது. பல்லின சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் எம்முடனே உள்ளனர். எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசவின் சேவைகள் விசாலமானவை. ஸ்மார்ட் வகுப்பறைகள், பாடசாலைகளுக்கான பஸ்களை வழங்கி மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளை ஊக்குவித்தார். சுகாதார சேவைக்குள் அரசியல் தலையீடுகள் நுழைந்து, சேவையைச் சீரழித்தபோது, சொந்த நிதியில் மருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு உதவினார்.
பொய் பேசாத, வழங்கிய வாக்குறுதிகளைக் காப்பாற்றுகின்ற நேர்மையான அரசியல்வாதி சஜித். எனவே, நம்பிக்கையோடு வாக்களித்து சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக தெரிவு செய்யுங்கள்" என்று கூறினார்.
இதன்போது, அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், கட்சியின் உயர்பீட உறுப்பினருமாகிய எஸ்.எம். சபீஸ், கட்சியின் உயர்பீட உறுப்பினர் எம்.ஹமீத், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் ஏ.ஆர்.எம்.அமீர், கட்சியின் முக்கியஸ்தர்கள், பெண்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment
Post a Comment