இன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தான் இன்றும் என்றும் ஜனாதிபதி . அதில் சந்தேகமில்லை. எனவே தமிழ் மக்கள் பொன்னான வாக்குகளை வீணாக்காமல் வெற்றி பெறும் குதிரைக்கு வாக்களித்து பங்காளராகுங்கள்.
இவ்வாறு ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேச இணைப்பாளர் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் முருகேசு இராஜேஸ்வரன் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து நேற்று (03) நற்பிட்டிமுனையில் இடம்பெற்ற பிரச்சார முன்னோடி கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும். சிலவேளை ரணில் விக்கிரமசிங்க தோல்வியடைந்தால் முழு நாடும் தோல்வியடையும். மீண்டும் வரிசை யுகம் உருவாகும் என்றார்.
ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் பணிமனை வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்படவிருப்பதை ஒட்டி மாதர் சங்கங்கள் கிராம அபிவிருத்தி சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து அவரது இல்லத்தில் முன்னோடிக் கூட்டத்தை நடாத்தினார்.
அவர் மேலும் கூறுகையில்,
எமது மக்களின் அமோக ஆதரவுடன் அவர் ஜனாதிபதி ஆவார்.
எமது மாவட்டத்தில் உள்ள தமிழ் பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. அதனை சீர் செய்ய வேண்டும்.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவான பிறகு வரிசை யுகத்துக்கு முடிவுகட்டினார். பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டங்களை வகுத்தார். இன்று ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வருகிறது. பொருட்களின் விலைகளும் குறைந்துள்ளன. சுற்றுலாப்பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. எமது அரச தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வும் வழங்கப்படவுள்ளது.
எனவே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்நாட்டை ஆளவேண்டியது கட்டாய தேவையாகும். இன்னும் ஐந்தாண்டுகளுக்கு அவரின் தலைமைத்துவம் இருந்தால் இந்நாடு நிச்சயம் முன்னேறும். சிலவேளை ரணில் விக்கிரமசிங்க தோற்றால் அது தனிமனிதனுக்குரிய தோல்வி அல்ல, நாட்டின் தோல்வியாகும். அதுமட்டுமல்ல, மீண்டும் வரிசை யுகம் உருவாகும்.
இது தேர்தல் காலம் என்பதால் சில ஜனாதிபதி வேட்பாளர்கள் அதை வழங்குவேன், இதை வழங்குவேன் என உறுதிமொழி வழங்கலாம். ஆனால் எதுவும் நடக்கப்போவதில்லை. நடைமுறைக்கு சாத்தியமான உறுதிமொழிகளை ஜனாதிபதி வழங்கியுள்ளார். எனவே, அவர் எமது மக்களுக்கு வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவார் என்றார்.
எதிர் வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் எனது பூரண ஆதரவினை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு வழங்குவதாக முடிவெடுத்துள்ளேன் என்றும் அவர் கூறினார்.
மேலும் தெரிவிக்கையில் அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் படும் துன்பங்கள் கொஞ்சநஞ்சம் அல்ல தொடர்ச்சியாக எமது மக்களை ஏமாற்றிக்கொண்டு ஒரு சில அரசியல்வாதிகள் தங்களுடைய சுயலாபங்களை அடைந்தவையே மிச்சம். எல்லா மாவட்டங்களிலும் ஒப்பிடும் பொழுது அம்பாறை மாவட்ட தமிழ்ப்பிரதேசங்கள் அனைத்தும் பின் தங்கியே காணப்படுகின்றது.எதிர்காலத்தில் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களை அங்கு வசிக்கின்ற மக்களே ஆள வேண்டும் அவர்களுக்கான சகல விதமான முடிவுகளையும் அவர்களே எடுக்க வேண்டும் எதிர்கால சிந்தனை(எதிர்வர இருக்கின்ற தேர்தல்கள் ) அவ்வாறு இருந்தால் மாத்திரமே இளைஞர்களின் தொழில் வாய்ப்புகளும் சரி அபிவிருத்தியிலும் சரி கொள்கையிலும் சரி எந்தவிதமான குறுக்கீடுகளும் இல்லாமல் சிறந்த முடிவுகள் எட்டப்படும். ஆகவே இவற்றைக் கருத்தில் கொண்டு நமது மக்களுக்கான வாய்ப்பாக நடைபெறுகின்ற ஜனாதிபதி தேர்தலை பயன்படுத்துவதை எதிர்பார்க்கின்றேன் என்றார்.
Post a Comment
Post a Comment