வைத்தியர்களின் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு




 



பாறுக் ஷிஹான்


வைத்தியர்களின் பாதகாப்பினை உறுதிப்படுத்துமாறும்  வைத்தியர்கள் மீதான அடக்குமுறைகள் நிறுத்தப்பட்டு  சுகாதார சேவையில் காணப்படும் குறைபாடுகள் உடனடியாக நீக்கப்பட வேண்டி வைத்திய அதிகாரிகள்  ஒன்றிணைந்து நாடளாவிய ரீதியில் செவ்வாய்க்கிழமை(3)  கவனயீர்ப்பு போராட்டத்தை மதியம் முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் அம்பாரை மாவட்டம் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை முன்பாக  மதியம் ஒன்று கூடிய வைத்தியர்கள் குறித்த போராட்டத்தை  முன்னெடுத்தனர்.

இதன்போது ஊடகங்களுக்கு  கருத்து தெரிவித்த அரச வைத்திய அதிகாரிகள்

 தற்போதைய அரசாங்கம் இதுவரை வைத்தியர்கள் எதிர் நோக்கும் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் ஒன்றுமே நிறைவேற்றப்பட வில்லை அத்துடன் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உடனடியாக மக்களுக்கு கிடைக்க வழி செய்ய வேண்டும் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி முறையற்ற வைத்தியர்களின் இடமாற்றம் வழங்குவதை நிறுத்த வேண்டும் வாழ்வாதாரத்துக்கு ஏற்ற ஊதியங்களை அதிகரிக்க வேண்டும் வைத்தியசாலையில் நிலவும் ஊழியர் பற்றாக்குறையினை உடன் நிவர்த்தி செய்ய வேண்டும் குறிப்பாக சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்தும் தொழிற்சங்கத் தலைவர்களை ஒடுக்கும் நோக்கில் அமுல்படுத்தப்படும் ஒழுக்காற்று விசாரணைகள் மற்றும் ஏனைய நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் இவ்வாறு ஏராளமான பிரச்சனைகள் உள்ளன என குறிப்பிட்டனர்.

மேலும் எதிர்காலத்தில் தாம்  முன் வைத்த கோரிக்கைகளுக்கு சுகாதார அமைச்சினால் எந்தவொரு தீர்வும்  கிடைக்காவிட்டால் நாடு பூராகவும் உள்ள வைத்தியசாலைகளில் அனைத்து சேவைகளையும் நிறுத்தி பணிப்புறக்கணிப்பு ஆர்ப்பாட்டத்தில் குதிப்போம்   என தெரிவித்தனர்.