கிழக்கு மாகாணம் முதலிடம்!




 



( வி.ரி. சகாதேவராஜா)


அகில இலங்கை முஸ்லிம் கலாசாரப் போட்டியில் கிழக்கு மாகாணம் முதலாம் இடத்தை பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

இத் தேசிய மட்ட போட்டி கடந்த சனி மற்றும் ஞாயிறு தினங்களில் (2024.09.07,08)
கொழும்பு ஸாஹிரா கல்லூரியில் நடைபெற்றது .

கல்வி அமைச்சின் சுற்றறிக்கையின் அடிப்படையில் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்தி கிளையின் கல்விப்பணிப்பாளர் மேஜர் என்.ரீ.நசுமுதீனின் வழிகாட்டலில் தேசிய மட்ட போட்டிகள் நடைபெற்றன.

முஸ்லிம் சமய கலாசார அழகியல் பெறுமானங்களின் ஊடாக மாணவர்களின் ஆளுமை பண்புகளை விருத்திசெய்து அதனூடாக தேசிய மற்றும் சர்வதேச தொடர்புகளை மேம்படுத்தி நற்பிரஜைகள் உருவாக்குவதற்கு பங்களிப்பு செய்தல் எனும் பிரதான நோக்கத்தில் இப்போட்டி நடைபெற்றன.

தேசிய மட்டத்தில் நடைபெற்ற 28 நிகழ்ச்சியில் கிழக்கு மாகாணம் பதினாறு முதலாம் இடத்தையும் மூன்று இரண்டாம் இடத்தையும் நான்கு மூன்றாம் இடத்தையும் பெற்று அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தை பெற்று வரலாற்றுச் சாதனையை பதிவு செய்தது.

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் தலைமையில் மாகாண உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ். ஷஹீட் வழிகாட்டலில் இச்சாதனை நிகழ்த்தப்பட்ட மை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இச் சாதனைக்கு வழிவகுத்த அனைவரையும் கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் பாராட்டியுள்ளார்.

இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய மாகாண கல்வி பணிப்பாளர், மாகாண  கல்வித் திணைக்களத்தின் அனைத்து உத்யோகத்தர்கள், வலயக் கல்வி பணிப்பாளர்கள் மற்றும் இஸ்லாம் பாடத்திற்கு பொறுப்பான உதவி கல்வி பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலை அதிபர்கள் மற்றும் மாணவர்களுக்கும் வாழ்த்துக்களையும் கிழக்கு மாகாண இஸ்லாம் பாட உதவிக் கல்விப் பணிப்பாளர்  எஸ்.ஷஹீட்  நன்றிகளை தெரிவித்தார்.