அம்பாரை மாவட்டம் 70 வீதமான வாக்குப் பதிவு





 வி.சுகிர்தகுமார்  


 நாட்டின் நிறைவேற்று அதிகாரம்கொண்ட 9ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலுக்கான வாக்களிப்பு 4 மணியுடன் நிறைவுற்றது.
இன்று காலை 7 மணிமுதல் வாக்களிப்பு ஆரம்பமான நிலையில் அம்பாரை மாவட்டத்தை பொறுத்தவரையில் 70 வீதமான வாக்கு அளிக்கப்பட்டுள்ளதுடன் அமைதியான முறையில் எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி வாக்களிப்பு இடம்பெற்றதாக அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும் உதவி தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருமான எஸ்.ஜெகராஜன் தெரிவித்தார்.
நான்கு தேர்தல் தொகுதியினை கொண்ட அம்பாரை மாவட்டத்தில் வாக்களிக்க ஒட்டுமொத்தமாக 555432 பேர் தகுதி பெற்றுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.
இதன் அடிப்படையில் அம்பாரை தேர்தல் தொகுதியில் 188222 வாக்காளர்களும் சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 99727 வாக்காளர்களும் கல்முனை தேர்தல் தொகுதியில் 82830 வாக்காளர்களும் பொத்துவில் தேர்தல் தொகுதியில் 184653 வாக்காளர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மாவட்டத்தை பொறுத்தவரையில் அம்பாரை தேர்தல் தொகுதியில் 184 வாக்களிக்கும் நிலையங்களும் சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 93 வாக்களிக்கும் நிலையங்களும்  கல்முனை தேர்தல் தொகுதியில் 74 வாக்களிக்கும் நிலையங்களும்   பொத்துவில் தேர்தல் தொகுதியில் 177 வாக்களிக்கும் நிலையங்களும் 528 வாக்களிக்கும் நிலையங்களும்   அமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பி;ட்டார்
இதேநேரம் விண்ணப்பிக்கப்பட்ட 27645 தபால்மூலமான வாக்குகளில் 867 வி;ண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதுடன் 26778 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன் தபால் மூல வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைவாக ஆலையடிவேம்பு திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் காலை வேளை வாக்களிப்பு மந்தகதியில் இடம்பெற்று வந்தாலும் பிற்பகல் கூடுதலான வாக்களிப்பு ஆலையடிவேம்பில் இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் 65.94 வீதமான வீதமான வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் கபே அமைப்பு உள்ளிட்ட தேர்தல் கண்காணிப்பு குழுவினர் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிப்பு தொடர்பில் அவதானித்தனர்.
பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுவருவதுடன் ரோந்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அம்பாரை ஹாடி உயர்தொழிநுட்ப கல்லூரி வாக்கெண்ணும் நிலையமாக செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அம்பாரை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரனும் தனது வாக்கினை அக்கரைப்பற்று இராமகிருஸ்மிசன் மகாவித்தியாலயத்தில் அளித்தார்.