அம்பாரை மாவட்டத்தில் தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியில் நிற்கவில்லையெனில் ஒன்றுமில்லாதவர்களாக ஆக்கப்படுவோம்




 



(வி.சுகிர்தகுமார் )




 அம்பாரை மாவட்டத்தில் தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியில் நிற்கவில்லையெனில் ஒன்றுமில்லாதவர்களாக ஆக்கப்படுவோம் என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சோ.புஸ்பராஜா தெரிவித்தார்.
நடைபெறவுள்ள ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களை பொறுத்தவரை அம்பாரை மாவட்டம் என்பது அரசியல் ரீதியில் வித்தியாசமாக பார்க்கப்படவேண்டியுள்ளது. கடந்த கால தேர்தல்கள் இதனை நன்கு உணர்த்தியுள்ளது. இத்தேர்தல்கள் மூலம்; அம்பாரை மாவட்ட தமிழ் மக்கள் பல பாடங்களை கற்றுள்ளதை மறக்கமாட்டார்கள். பிரிந்து நின்று செயற்பட்டதால் அரசியல் ரீதியாக அடைந்துள்ள பின்னடைவுகளையும் இழப்புக்களையும் ஈடு செய்ய முடியாமல் உள்ளதை உணர்ந்திருப்பார்கள்.
நமது உரிமைகளைக் கூட பெறுவதற்கு பல போராட்டங்களை நடத்தியும் பெறமுடியாதவர்களாக ஆக்கப்பட்டுள்ளதையும் கண்ணெதிரே கண்டிருப்பார்கள்.
ஆகவே அரசியல் ரீதியில் இனியாவது புத்திசாலியாக செயற்படவேண்டியுள்ளதை யாரும் மறுக்கமாட்டார்கள். இதன் அடிப்படையில் இனிவரும் காலங்களிலாவது கட்சி ரீதியாகவோ சுயேட்சையாகவோ ஒரு அணியின் கீழ் ஒன்று திரள்வது காலத்தின் தேவையும் கட்டாயமானதாகவும் உள்ளது. இதற்காக மாவட்டத்தில் உள்ள அனைத்து புத்திஜீவிகளும் சமூக ஆவர்வலர்களும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பொதுமக்களும் இணைந்து அரசியல் தலைவர்களுக்கு அழுத்தத்தை கொடுத்து ஒன்றாய் அணிதிரள நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.
இல்லையேல் அரசியல் அதிகாரமற்றவர்களாக நாம் மாற்றப்படுவதுடன் இன்னும் பல இழப்புக்களையும் பின்னடைவுகளையும் சந்திக்க நேரிடும் என்பதை அனைவருக்கும் நினைவூட்ட விரும்புகின்றேன் என்றார்.