அலங்கார உற்சவத்தின் தீர்த்தோற்சவம்





 வி.சுகிர்தகுமார்  


 கடலோரத்தில் அமர்ந்து தன்னை நாடிவரும் அடியார்களின் வினைபோக்கி இஸ்ட சித்திகளை வழங்கும் அக்கரைப்பற்று ஸ்ரீ நாகதம்பிரான்  ஆலயத்தில் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்தோற்சவம் (09) நடைபெற்றது.
ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் கடந்த 30ஆம் திகதி வாஸ்த்து சாந்தி கிரியைகளுடன் ஆரம்பமாகி  07ஆம் திகதி வரை இடம்பெற்ற இடம்பெற்ற திருவிழாக்கள்  08ஆம் திகதி இடம்பெற்ற சங்காபிசேகம் நாகசதுர்த்தி நேர்கடன் பொங்கல் வழிபாடுகள் இன்று(09) இடம்பெற்ற தீர்த்தோற்சவம் திருப்பொன்னூஞ்சல்;; ஆகியவற்றுடன் நாளை 10 ஆம் திகதி இடம்பெறும்  வைரவர் பூசையுடனும்; நிறைவுறும்.
இன்று காலை பொற்சுண்ணம் இடிக்கும் கிரியைகளோடு ஆரம்பமான தீர்த்தோற்சவ கிரியைகளை தொடர்ந்து மூலமூர்த்தவரான நாகலிங்கேஸ்வர பெருமானுக்கும் அலங்கார பூஜைகள் நடைபெற்றது.
இதன் பின்னராக நாகலிங்கேஸ்வர பெருமான் அழகிய தேரில் எழுந்தருளி; உள்வீதிவலமாக அடியார்கள் தூக்கிச் செல்லப்பட்டதுடன் வெளிவீதி உலாவும் இடம்பெற்றது.
பின்னர் பக்தர்களின் அரோகரா வேண்டுதலுக்கு மத்தியில் மங்கள வாத்தியம் முழங்க வீதி உலாவாக வங்கக்கடல் நோக்கி புறப்பட்டார்.
வங்கக்கடலோரம் அமர்ந்த எம்பெருமானுக்கு அபிசேக பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து பக்தர்கள் புடைசூழ எம்பெருமான் சமுத்திர தீர்த்தம் ஆடினார்.
ஆலய தலைவர் வி.பாலசுந்தரம்; தலைமையில் இடம்பெற்ற திருவிழாவின்  தீர்த்தோற்வச கிரியைகள் யாவும்; உற்வசகால பிரதமகுரு விக்னேஸ்வர பூஜா துரந்தரர் சிவஸ்ரீ க. குமுதேஸ்வரசர்மா தலைமையில் சிவஸ்ரீ கௌரிசங்கர் குருக்கள் உள்ளிட்ட குருமார்கள் இணைந்து நடாத்தி வைத்தனர்.
வழிபாடுகளில் பெருந்திரளான பக்தர்களும் கலந்து கொண்டனர்.