அலி ஸாஹிர் மௌலானாவுக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை




 





நூருல் ஹுதா உமர்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் கடிதத்தை ஜனாதிபதி சட்டத்தரணியும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளருமான எம் நிசாம் காரியப்பர் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ள விடயமானது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் வேண்டுகோளின் பிரகாரம் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்படுவதாகவும், கடந்த ஆகஸ்ட் 4, 2024 அன்று நடைபெற்ற கட்சியின் உயர்பீடக் குழுக் கூட்டத்தில், நீண்ட விவாதங்களுக்குப் பிறகு, ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அவர்களை கட்சி ஆதரிக்க தீர்மானித்திருந்ததாகவும், நீங்கள் (அலி சாஹிர் மௌலானா) கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றாலும், நீங்கள் எனக்கு ஒரு வரமுடியாமை செய்தியை அனுப்பியுள்ளீர்கள்:

“அந்த வரமுடியாமை செய்தியில், இன்றைய கூட்டத்தில் நான் உடல்ரீதியாக கலந்து கொள்ளவில்லை என்றாலும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக எமது கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் கௌரவத் தலைவர் மற்றும் உயர் பீடம் எடுக்கும் எந்த தீர்மானத்துடன் நான் நிற்பேன் என உறுதியளிக்கிறேன். மேலும் எனது உணர்வுகளையும் எங்கள் கட்சி மீதான எனது விசுவாசத்தையும் மீண்டும் தெரிவிக்கிறேன், நான் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாமைக்கு மன்னிக்கவும் செயத் அலி ஸாஹிர் மௌலானா- என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த உறுதிமொழிக்கு முற்றிலும் மாறாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை நீங்கள் ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதாக நீங்கள் எடுத்த தீர்மானம் கட்சியின் தீர்மானத்தையும், பிரதித்தலைவர்களில் ஒருவராக நீங்கள் 22 ஜூன் 2024 அன்று நடைபெற்ற கட்சியின் உயர் பிரதிநிதிகள் மாநாட்டில் தெரிவு செய்யப்பட்ட போது நீங்கள் வழங்கிய உறுதிமொழியையும் முற்றிலும் மீறும் செயலாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் உங்களுக்குத் தெரிவிக்கின்றார்.

எனவே, எனக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் வழங்கிய பணிப்புக்கு இணங்க கட்சியில் உங்கள் உறுப்புரிமை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது என்பதைத் தெரிவிக்கிறேன். ரணில் விக்கிரமசிங்கவுக்கு நீங்கள் வழங்கிய ஆதரவை பற்றிய ஊடகங்களின் செய்தி தவறானதாக இருந்தால் அல்லது கட்சியின் முடிவுகளை மீறுவதற்கு சரியான மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணம் இருந்தால், கடிதம் மூலமாக அல்லது வாட்சப் மூலமாகவும் இந்த கடிதத்திற்கு நீங்கள் உடனடியாக பதிலளிக்கலாம். இந்த கடிதம் கிடைத்த ஒரு வாரத்திற்குள் உங்கள் பதில் கிடைக்க வேண்டும். இந்த மாதம் உங்கள் பதில் அல்லது இந்தக் கடிதத்திற்கு நீங்கள் பதிலளிக்கத் தவறியது குறித்து உயர்பீடத்தில் அறிவித்து முடிவு செய்ய படவுள்ளதாகவும், அவசரத் தேவையைக் கருத்தில் கொண்டு, 2024 செப்டம்பர் 21 ஆம் தேதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதால், பதிலளிப்பதற்கான கால அவகாசம் எதுவும் கட்சியால் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.