லெபனானில் உள்ள ஹெஸ்புலா இலக்குகள் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல்





இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவுவதற்கான நகர்வுகளைக் கண்டறிந்த நிலையில், லெபனானில் உள்ள ஹெஸ்புலா இலக்குகள் மீது தங்கள் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.


“இந்த அச்சுறுத்தல்களைக் களைவதற்கான தற்காப்பு நடவடிக்கையாக, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் பயங்கரவாத இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக” இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார்.




இரானால் ஆதரவளிக்கப்படும் ஷியா முஸ்லிம் குழுவான ஹெஸ்புலா இயங்கும் பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு லெபனான் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.


ராக்கெட்டுகள் குறித்து மக்களை எச்சரிக்கும் சைரன்கள் வடக்கு இஸ்ரேல் முழுவதும் கேட்கப்பட்டன.


இத்தாக்குதலில் யாரேனும் காயமடைந்தனரா, உயிரிழப்புகள் ஏதும் உள்ளதா என்பது குறித்த விவரங்கள் இன்னும் தெரிய வரவில்லை.


இந்நிலையில், அரசின் பாதுகாப்பு அமைச்சரவையின் அவசரக் கூட்டம் கூட்டப்பட உள்ளதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.


காஸாவில் ஹமாஸ் உடன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் போர் தொடங்கியதில் இருந்து இஸ்ரேல், லெபனானை தளமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஹெஸ்புலாவுடன் மாறி மாறித் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.