அரச கரும மொழித்தேர்ச்சி பயிற்சி வகுப்புக்களின் இறுதிநாள்




 



(வி.சுகிர்தகுமார் )


  இருமொழி அறிவு உடலுக்கு நல்லது என்பதுடன் பன்மொழித்தேர்ச்சியானது உடலளவிலும் மனதளவிலும் அடிப்படையான அனுகூலங்களை அளிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கும் மேலாக அரச உத்தியோகத்தர்கள் இரண்டாம் மொழித்தேர்ச்சி பெறுவது அவசியமானது என அரச சுற்றுநிருபங்கள் தெரிவிக்கின்றது.
இதன் அடிப்படையில்  தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவகத்தின் ஏற்பாட்டில் அரச உத்தியோகத்தர்களுக்கான 150 மணித்தியால அரச கரும மொழித்தேர்ச்சி பயிற்சி வகுப்புக்களின் இறுதிநாள் நிகழ்வு (14) ஆலையடிவேம்பு பிரதேச கலாசார மண்டபத்தில் இன்று இடம்பெற்றன.
பொது நிர்வாக சுற்று நிருபத்திற்கமைவாக அரச உத்தியோகத்தர்கள் பெற்றுக்கொள்ள வேண்டிய அரசகரும மொழித்தேர்ச்சி தொடர்பாக ஆரம்பிக்கப்பட்ட இப்பயிற்சி வகுப்புக்களின் இறுதி நாள் நிகழ்வில் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன.
பயிற்சி வகுப்புக்களில் கலந்து கொண்ட அரச உத்தியோகத்தர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் பிரதேச செயலக கிராம நிருவாக உத்தியோகத்தர் பரிமளவாணி சில்வெஸ்டர் க.சோபிதா மற்றும் வளவாளர்களான ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தர் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவகத்தின் இருமொழி வளவாளர்களான  திருமதி சரோஜா தெய்வநாயகம், மகேசிக்க உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பயற்சி நெறியில் பங்கேற்ற அரச உத்தியோகத்தர்கள் தங்கள் பயிற்சி நெறியில் கற்றுக்கொண்ட விடயங்கள் தொடர்பில் கலை நிகழ்வுகள் மூலமாக வெளிப்படுத்தினர்.
இதேநேரம் இங்கு உரையாற்றிய பிரதேச செயலாளர் மொழி அறிவு அரச உத்தியோகத்தர்கள் மாத்திரமன்றி அனைவருக்கும் தேவையானதொன்றெனவும் மொழியாற்றல் உள்ளவர்கள் உலகில் பல விடயங்களை சாதிக்க முடியும் எனவும் கூறினார்.
ஆகவே அரச உத்தியோகத்தர்களுக்கு அரசும்  தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவகமும் வழங்கியுள்ள இச்சந்தர்ப்பத்தை முறையாக பயன்படுத்தி தமது திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
நிகழ்வில் பிரதேச செயலாளருக்கு பயிற்சி நெறியில் கலந்து கொண்டவர்களால் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.