ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்கள் யார்? யாருக்கு இடையே அதிக போட்டி?




 



இலங்கையில் 9வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.


தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தற்போது கட்டுப்பணம் செலுத்தி வருகின்ற நிலையில், எதிர்வரும் 14ஆம் தேதி நண்பகல் 12 மணியுடன் கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை நிறைவு பெறவுள்ளது.


அதைத் தொடர்ந்து, எதிர்வரும் 15ஆம் தேதி கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்கள், வேட்பு மனுவைத் தாக்கல் செய்யவுள்ளனர். வேட்பு மனுத் தாக்கலுக்குப் பின்னர் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மிகத் தீவிரமாக முன்னெடுக்க கட்சிகள் தீர்மானித்துள்ளன.


இந்த நிலையில், இலங்கையின் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள பின்னணியில், அரசியலில் என்ன நடக்கின்றது என்பது குறித்து இந்தச் செய்தியில் முழுமையாக ஆராயலாம்



தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் நோக்கில், இதுவரை 18 வேட்பாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். இதன்படி, இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இம்முறை தேர்தலில் போட்டியிடுகிறார்.


அத்துடன், பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவும் இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றார். தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக அந்தக் கட்சியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றார்.


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில், மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் நாமல் ராஜபக்ஸவும் இம்முறை தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவுடன், முன்னாள் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸவும் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், முன்னாள் ராணுவ தளபதி ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றார்.


இவர்கள் தவிர, சரத் கீர்த்திரத்ன, ஓசல லக்மால் அனில் ஹேரத், ஏ.எஸ்.பீ.லியனகே, பி.டபிள்யூ.எஸ்.கே.பண்டாரநாயக்க, கே.கே.பியதாஸ, சிறிதுங்க ஜயசூரிய, அஜந்த டி சொய்சா, ஆனந்த குலரத்ன, சரத் மனமேந்திர, பத்தரமுல்லே சீலரத்ன தேரர், அக்மீமன தயாரத்ன தேரர், சிறிபால அமரசிங்க, கே.ஆர்.கிரிஷான் ஆகியோர் இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றனர்.


அத்துடன், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஆட்சியைக் கலைப்பதற்காக நடத்தப்பட்ட காலி முகத்திடல் போராட்டத்தில் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் சார்பில் வழக்கறிஞர் நுவன் போபகே இம்முறை தேர்தலில் போட்டியிடவுள்ளார்.



யார் யாருக்கு இடையில் அதிக போட்டி?

பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸபட மூலாதாரம்,SJB MEDIA

படக்குறிப்பு,பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ

இந்த முறை தேர்தலில் போட்டியிடும் முக்கிய ஐந்து வேட்பாளர்களுக்கு இடையில் கடும் போட்டி காணப்படும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


குறிப்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அநுர குமார திஸாநாயக்க, சரத் பொன்சேகா, விஜயதாஸ ராஜபக்ஸ ஆகியோருக்கு இடையில் கடும் போட்டி நிலவவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


எனினும், மக்கள் போராட்ட முன்னணி சார்பில் களமிறக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் நுவன் போபகே போராட்டக்காரர்களின் ஆதரவுடன் களமிறங்கியுள்ளார்.


போராட்டத்தில் ஈடுபட்ட லட்சக்கணக்கான மக்கள் நுவன் போபகேவிற்கு வாக்களிப்பாளர்கள் எனப் போராட்டக்காரர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ள நிலையில், நுவன் போபகேயின் பெயரும் பேசுபொருளாகக் காணப்படுகின்றது.



ரணில் விக்ரமசிங்க தேர்தல் பிரசாரம்?

இலங்கை அதிபர் தேர்தல் 2024பட மூலாதாரம்,NPP MEDIA

படக்குறிப்பு,தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக அந்தக் கட்சியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க இம்முறை தேர்தலில் போட்டியிடுகிறார்.

இலங்கை 2022ஆம் ஆண்டு பாரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்த நிலையில், அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாட்டைவிட்டுத் தப்பியோடியிருந்தார்.


அதன் பின்னர், இடைக்கால ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்ட ரணில் விக்ரமசிங்க, 2 வருட காலத்திற்குள் நாட்டை வழமை நிலைக்குக் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவித்து தமது தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்துள்ளார்.


எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட பொருட்களைக் கொள்வனவு செய்வதற்குக் காணப்பட்ட வரிகளை இல்லாது செய்து, நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்டெடுத்துள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்து வருகின்றார்.


இந்நிலையில், நாடாளுமன்றத்திலுள்ள சுமார் 100ற்கும் அதிகமானோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.


குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவுடன் ஆட்சியை நடத்தி வந்த ரணில் விக்ரமசிங்க, இம்முறை தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்குவதாக அறிவித்துள்ளார்.


இதற்கிடையே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலுள்ள நூற்றுக்கணக்கானோர் அந்தக் கட்சியிலிருந்து வெளியேறி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.



இலங்கை அதிபர் தேர்தல் 2024பட மூலாதாரம்,SJB MEDIA

படக்குறிப்பு,சஜித் பிரேமதாஸவிற்கு ஆட்சியை ஒப்படைக்கும் பட்சத்தில், மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுப்பதாக சஜித் பிரேமதாஸ கூறுகின்றார்.

பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராக அந்தக் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ களமிறங்கியுள்ளார்.


ராஜபக்ஸ குடும்பம் மற்றும் ஊழல்வாதிகளின் ஆதரவுடன் ஜனாதிபதியாக பதவி வகித்து வரும் ரணில் விக்ரசிங்க, ராஜபக்ஸ குடும்பம் உள்ளிட்ட ஊழல்வாதிகளைக் காப்பாற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதான எதிர்கட்சி குற்றம் சுமத்துகிறது.


நாடு வழமைக்குத் திரும்பியுள்ளதாகக் கூறப்பட்டாலும், நாட்டு மக்கள் வாழ முடியாத நிலையை எதிர்நோக்கி வருவதாக சஜித் பிரேமதாஸ தரப்பினர் கூறி வருகின்றனர்.


இந்தநிலையில், சஜித் பிரேமதாஸவிற்கு ஆட்சியை ஒப்படைக்கும் பட்சத்தில், மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுப்பதாக சஜித் பிரேமதாஸ கூறுகின்றார்.


இலங்கை அதிபர் தேர்தல் 2024பட மூலாதாரம்,PMD SRI LANKA

படக்குறிப்பு,நாடாளுமன்றத்தில் உள்ள சுமார் 100க்கும் அதிகமானோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

அநுர குமார திஸாநாயக்க என்ன சொல்கின்றார்?

நாட்டு மக்களால் விரட்டப்பட்ட ராஜபக்ஸ குடும்பத்துடன் கைகோர்த்து, ராஜபக்ஸ மற்றும் அவர் சார்ந்த ஊழல்வாதிகளை ரணில் விக்ரமசிங்க காப்பாற்றி வருவதாக தேசிய மக்கள் சக்தி கூறுகின்றது.


அத்துடன், பொருளாதார வளர்ச்சி என அரசாங்கம் காண்பிக்கின்ற போதிலும், நாடு தொடர்ச்சியாகக் கடன் சுமையிலேயே இருந்து வருவதாக அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் குறிப்பிடுகின்றனர்.


பொருட்களின் விலை குறைந்துள்ளதாக அரசாங்கம் கூறுகின்ற போதிலும், பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.


மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் ஆட்சி பீடத்தில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்ற வகையிலேயே தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் பிரசாரத்தை முன்னெடுக்கின்றது.


ஏனைய வேட்பாளர் என்ன சொல்கின்றார்கள்?

சரத் பொன்சேகா, விஜயதாஸ ராஜபக்ஸ, நுவன் போபகே உள்ளிட்ட ஏனைய வேட்பாளர்கள் இதுவரை தமது தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மும்முரமாக ஆரம்பிக்கவில்லை.


வேட்பு மனுத் தாக்கலின் பின்னர் ஏனையோரின் தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் இதுவரை ஆட்சி பீடம் ஏறிய பிரதான கட்சிகளாக ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியன தற்போது பிளவடைந்துள்ளன.


ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், ரணில் விக்ரமசிங்கவிடம் இருந்து பிரிந்து ஐக்கிய மக்கள் சக்தி என்ற பெயரில் சஜித் பிரேமதாஸ ஆரம்பித்திருந்தார்.


ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திய பெரும்பாலான உறுப்பினர்கள் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியுடன் கைக்கோர்த்துள்ளனர். அத்துடன், இலங்கையின் பிரதான கட்சியாக விளங்கிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இன்று முழுமையாகப் பிளவடைந்துள்ளது.


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் கட்சியின் பல உறுப்பினர்களுக்கு நீதிமன்றம் பல்வேறு தடைகளை விதித்துள்ளது. இந்த நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒரு குழு சஜித் பிரேமதாஸவுடனும், மற்றுமொரு குழு ரணில் விக்ரமசிங்கவுடனும் கைகோர்த்துள்ளனர்.


அத்துடன், கட்சியின் முன்னாள் தலைவர் மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி வேட்பாளரான விஜயதாஸ ராஜபக்ஸவிற்கு ஆதரவு வழங்கியுள்ளார்.


இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து வெளியேறிய ராஜபக்ஸ குடும்பம் தலைமையிலான உறுப்பினர்களால் உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று பாரிய பிளவைச் சந்தித்துள்ளது.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய உறுப்பினர்கள் பலர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ள நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமக்கான வேட்பாளரைக் களமிறக்கியுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஸ போட்டியிடுகிறார்.


,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஸ போட்டியிடுகின்றார்.

தமிழ் கட்சிகளின் நிலைப்பாடு என்ன?

செந்தில் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன், வியாழேந்திரன், வடிவேல் சுரேஷ் உள்ளிட்ட தமிழ் கட்சிகளைச் சேர்ந்தோர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகின்றனர்.


மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி, ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகின்றன.


தேசிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்குப் பிரதான தமிழ் கட்சிகள் இதுவரை தமது ஆதரவை வெளியிடவில்லை.


தமிழ் பொது வேட்பாளர்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளனர்.


எனினும், தமிழ் பொது வேட்பாளர் யார் என்பது குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை.


தமிழ் பொது வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் கடந்த காலங்களில் தொடர்ந்து நடத்தப்பட்டிருந்தன.


வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் கட்சிகளால் களமிறக்கப்படவுள்ள பொது வேட்பாளருக்கு, மலையகம் உள்ளிட்ட நாட்டின் தென் பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் தமது ஆதரவை வழங்கவில்லை.



'கட்சிகளை நம்பி இல்லை. நபர்களை நம்பிய தேர்தலாகவே இம்முறை இருக்க போகிறது" என சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர்.யசி தெரிவிக்கின்றார்.


''நாடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு பாரிய சவால்களைச் சந்தித்த பின்னர் நடைபெறும் முதல் தேர்தல் இது. இந்தத் தேர்தலில் பிரதான கட்சிகள் என அடையாளப்படுத்தக்கூடிய அனைத்துக் கட்சிகளும் உடைந்து போட்டியிடுகின்றன. ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாஸ, அநுர குமார திஸாநாயக்க, நாமல் ராஜபக்ஸ என யாராக இருந்தாலும் சரி எல்லோரும் தனித்து நிற்கின்றார்கள். கடந்த தேர்தல்களைப் பார்தால், இரண்டு அணிகள் மிகவும் பலமான அணிகளாகப் போட்டியிட்டன. பிரதான இரண்டு வேட்பாளர்கள் பலமான வேட்பாளர்களாக இருந்தனர். ஆனால், இன்று அந்த நிலைமை இல்லை. உண்மையில் இந்தத் தேர்தல் நடக்கனுமா என்ற கேள்வி அரசியல் கட்சிகளுக்கு உள்ளேயே இருக்கிறது," என்றார்.


எனினும், தேர்தல் நடைபெற வேண்டும் என்ற தேவை பிரதான எதிர்கட்சிகளுக்கு இருக்கின்றது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் எவருக்குமே பெரும்பான்மை கிடைக்காது என்பது தெரிகின்றது. மக்களின் வாக்குகளை ஆளும் தரப்பு சிதரடிக்கச் செய்கிறார்கள். இதில் தனித்து நிற்கின்ற பிரதான எதிர்கட்சி அல்லது போராட்டங்களை நடத்தி வரும் புரட்சிகர கட்சிகளுக்கு வாய்ப்பு காணப்படுகின்றது. காரணம், ஆளும் தரப்பு தனித்து உடைந்து உடைந்து தேர்தலில் போட்டியிடுகின்றமையாலேயே இந்த நிலைமையைப் பார்க்க முடிகின்றது, என்றும் மேற்கோள்காட்டினார்.


"இது ஆரோக்கியமான நிலைமை இல்லை. நாடு வங்குரோத்து நிலையை அடைந்த நேரம், அப்போதைய ஜனாதிபதி நாட்டை விட்டுப் போகும் நேரம், பிரதமர் கைவிட்ட நேரத்தில் யாராவது அரசாங்கத்தை எடுக்குமாறு கூறியபோது பிரதான எதிர்கட்சி அரசாங்கத்தை எடுத்து நடத்தியிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அதைச் செய்யவில்லை. ஜே.வி.பி போன்ற கட்சிகளும் அதிகாரத்தைக் கையில் எடுத்துச் செய்து காட்டவில்லை. அந்தச் சந்தர்ப்பத்தில் எந்த கட்சியின் ஆதரவும் இல்லாமல் நாடாளுமன்றத்தில் இருந்த ரணில் விக்ரமசிங்க தனித்து வந்து இரண்டு ஆண்டுகளில் நாட்டை வழமைக்குக் கொண்டு வந்துள்ளார்," என்றார் ஆர்.யசி.


"ஒரு கட்சியால் நெருக்கடியைச் சமாளிக்க முடியவில்லை என்பது தெரிகிறது. அந்தச் சந்தர்ப்பதில் பல கட்சிகளில் இருந்தவர்களை ஒன்றிணைத்துக்கொண்டு ஜனாதிபதியின் அதிகாரத்தை வைத்து ரணில் விக்ரமசிங்க நாட்டைச் சரிசெய்தார். இந்த ஜனாதிபதித் தேர்தல் எப்படி இருக்கப் போகின்றது என்றால், கட்சிகளை நம்பி இல்லை. நபர்களை நம்பிய தேர்தலாகவே இருக்கப் போகின்றது" என சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர்.யசி தெரிவிக்கின்றார்.