இந்திய அணியில் மீண்டும் அம்பலமான பலவீனம்




 


2021ம் ஆண்டுக்குப்பின் சர்வதேச அரங்கில் இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக முதல் வெற்றியை இலங்கை அணி பெற்றுள்ளது.


கொழும்பு பிரமதேசா அரங்கில் நேற்று நடந்த 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை அணி.


முதலில் பேட் செய்த இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் சேர்த்தது. 241ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 42.2 ஓவர்களில் 208 ரன்களுக்கு ஆட்டமிழந்து 32 ரன்களில் தோல்வி அடைந்தது.


இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.


கடந்த 11 போட்டிகளாக இலங்கைக்கு எதிராக தோல்வி அடையாமல் இருந்து வந்த இந்திய அணி முதல் தோல்வியைச் சந்தித்துள்ளது.


இந்திய அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக கெளதம் கம்பீர் பொறுப்பேற்றபின் சந்திக்கும் முதல் தோல்வி இதுவாகும்.


வெள்ளிக்கிழமை நடந்த முதல் ஒருநாள் ஆட்டத்தை இலங்கை சமன் செய்தது. சமன் என்பதே ஏறக்குறைய இலங்கை அணிக்கு கிடைத்த மறைமுக வெற்றிதான்.


நேற்றைய போட்டியில் இலங்கை அணி ஒரு கட்டத்தில் 6 விக்கெட் இழப்புக்கு 136 ரன்களுடன் தடுமாறிய நிலையில் 240 ரன்கள் சேர்த்தது. ஆனால் இந்திய அணி 97 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி வலுவாக இருந்தநிலையில், 208 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது.



தனி ஒருவனாக மிரட்டிய பந்துவீச்சாளர்

இந்திய அணி தடுமாறி விழுந்ததற்கு இலங்கை அணியின் ஒரே சுழற்பந்துவீச்சாளர் வான்டர்சே மட்டும்தான் காரணம். 2015-ஆம் ஆண்டு சர்வதேச தளத்தில் அறிமுகமாகிய வான்டர்சே இதுவரை 22 ஒருநாள் போட்டிகளில்தான் விளயைாடியுள்ளார்.


ஹசரங்கா காயம் காரணமாக ஒருநாள் தொடரிலிருந்து விலகியநிலையில் அவருக்குப் பதிலாக வான்டர்சே நேற்று களமிறங்கினார். இந்திய பேட்டர்களை வாரிசுருட்டிய “லெக் ஸ்பின்னர்” ஜெஃப்ரி வான்டர்சே 10 ஓவர்கள் வீசி 33 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.


அதிலும் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, சுப்மான் கில், ஷிவம் துபே, ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல் ஆகியோரின் விக்கெட்டுகளை 29 பந்துகள் வித்தியாசத்தில் வான்டர்சே வீழ்த்தி இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளிவைத்தார்.


இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய 5வது இலங்கை பந்துவீச்சாளர் என்ற பெருமையை வான்டர்சே பெற்றார். இதற்கு முன் முத்தையா முரளிதரன், அஜெந்தா மென்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், அகிலா தனஞ்சயா ஆகியோர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.


9,840 நாள் வரலாறு நிலைக்குமா? இலங்கையிடம் எளிதான வெற்றியை தவறவிட்ட இந்தியா - அர்ஷ்தீப்பை கலாய்க்கும் ரசிகர்கள்


இந்திய அணியின் வீழ்ச்சி தொடங்கியது எப்படி?

இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா (64) அமைத்துக் கொடுத்த அடித்தளத்தை நடுவரிசையில் வந்த பேட்டர்கள் யாரும் பயன்படுத்தவில்லை. சீனியர் பேட்டர்கள் விராட் கோலி, துபே, ஸ்ரேயாஸ், கே.எல்.ராகுல், சுப்மான் கில் என பெரிய படையே இருந்தபோதிலும் 240 ரன்களை சேஸிங் செய்ய முடியாமல் தனி ஒரு பந்துவீச்சாளரிடம் இந்திய அணி கவிழ்ந்துவிட்டது.


இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா மட்டுமே தொடர்ந்து 2வது போட்டியிலும் அரைசதம் அடித்தார். ரோஹித் 44 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா ஆட்டமிழக்காதவரை இந்திய அணி 97 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி பயணித்தது, இந்திய அணியின் வெற்றி 85 சதவீதத்துக்கு மேல் இருந்தது.


ஆனால், வான்டர்சே பந்துவீச வந்தபின் இந்திய அணியின் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டு அடுத்த 50 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அக்ஸர்படேல், வாஷிங்டன் சுந்தர் இருவரும் சேர்ந்து 38 ரன்கள்வரை பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதில் அக்ஸர், சுந்தர் விக்கெட்டுகளை அசலங்கா வீழ்த்தியபின் இந்திய அணியின் தோல்வி உறுதியானது.


தோல்வியால் புரிந்து கொண்டோம்

தோல்விக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில், “போட்டிகளில் வெல்ல வேண்டுமென்றால், தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதை இதில் புரிந்து கொண்டோம், அதனால் இன்று தோல்வி அடைந்தோம். இதுபோன்ற தோல்விகள் வேதனையளிக்கிறது. பேட்டிங் வரிசையில் வலது, இடது பேட்டர்கள் வரிசையில் களமிறங்குவது ஸ்ட்ரைக்கை மாற்ற எளிதாக இருக்கும் என்றாலும், இதற்கு நாம் பழக வேண்டும். ஆனால், இந்த விஷயம் நடக்கவில்லை.''


''இலங்கை அணியினர் உண்மையில் சிறந்த கிரிக்கெட் விளையாடினர். நான் களத்தில் இருந்தவரை விக்கெட் பற்றி யோசிக்காமல் இருந்ததால்தான் 65ரன்கள் சேர்க்க முடிந்தது. நான் சதம் அடிக்கும் ஆட்டம், அரைசதம் அடிக்கும் ஆட்டம், அல்லது டக்அவுட் ஆகும் ஆட்டத்தில் அடுத்துவரும் வீரர்கள் நிலைத்து ஆட வேண்டும். ஆனால், நான் ஆட்டமிழந்தபின் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை விடுவது வேதனையாக இருக்கிறது.''


''இந்த விக்கெட்டின் தன்மையைப் புரிந்து கொண்டபின் அதற்கு ஏற்றபடி ஆட்டத்தை மாற்ற வேண்டும். நடுப்பகுதி ஓவர்களில் ஆடுகளத்தில் பேட் செய்வது கடினமாக இருக்கும். ஆதலால் பவர்ப்ளேயில் ரன்களைக் குவிக்க வேண்டும். அதைதான் நான் செய்தேன். ஆனால், போதுமான அளவு பேட்டர்கள் ரன்களைக் குவிக்கவில்லை. கடந்த காலங்களில் சிறந்த கிரிக்கெட் ஆடியிருக்கிறோம், ஆதால் இதில் எவ்வாறு விளையாடினோம் என்பதை அதிகமாக ஆய்வு செய்ய விரும்பவில்லை. நடுப்பகுதி ஓவர்களில் எவ்வாறு மோசமாக பேட் செய்தோம் என்பது குறித்து நிச்சயமாக ஆய்வு செய்வோம்” எனத் தெரிவித்தார்


பாலின பரிசோதனை சர்ச்சை: 46 விநாடிகளில் போட்டியில் இருந்து வெளியேறிய குத்துச்சண்டை வீராங்கனை ஏஞ்சலா கரினி


இந்திய அணியின் பலவீனம் அம்பலம்

சுப்மான் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், ஷிவம் துபே ஆகிய வலிமையான பேட்டர்களை வைத்திருந்தும், தரமான சுழற்பந்துவீச்சுக்கு முன் இந்திய அணியின் பலவீனம் அம்பலப்பட்டுவிட்டது.


இந்திய அணியின் பலவீனத்தை அறிந்தவுடன் இலங்கை அணியும் வேகப்பந்துவீச்சாளர்களைக் குறைத்துவிட்டு சுழற்பந்துவீச்சுக்கு முக்கியத்துவம் அளித்தது. அதன் பலனாக அசலங்கா 3 விக்கெட்டுகளையும், வான்டர்சே 6 விக்கெட்டுகளையும் என 9 விக்கெட்டுகளை சுழற்பந்துவீச்சாளர்கள் இருவருமே கைப்பற்றினர். மற்ற சுழற்பந்துவீச்சாளர்களான மென்டிஸ், தனஞ்சயா, வெலாகலே ஆகியோர் கட்டுக்கோப்பாக பந்துவீசினாலும் விக்கெட் கிடைக்கவில்லை.


மீளமுடியாத இந்திய அணி

கடந்த வெள்ளிக்கிழமை நடந்த முதல் ஒருநாள் ஆட்டத்திலும் இதேபோன்று இந்திய அணியின் நடுவரிசை பேட்டிங் திடீரென சரிந்து தோல்வியின் பிடியில் சிக்கியது. அப்போது அக்ஸர் படேல், ஷிவம் துபே ஆகியோர் சேர்ந்து ஆடி, ஆட்டத்தை சமனில் முடித்தனர். ஆனால், இந்த ஆட்டத்தில் அவ்வாறு எந்த பாட்னர்ஷிப்பும் அமையவில்லை. அக்ஸர், சுந்தர் பார்ட்னர்ஷிப் 38 ரன்கள் சேர்த்தாலும் வெற்றி நோக்கி அணியை நகர்த்த முடியவில்லை. கேப்டன் அசலங்கா தனது அடுத்தடுத்த ஓவர்களில் அக்ஸர், சுந்தரை வீழ்த்தினார்.


இலங்கை அணியை மீட்ட வீரர்கள்

இலங்கை அணி ஒரு கட்டத்தில் 136 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால், 7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கமிந்து மென்டிஸ், வெலாலகே இருவரும் 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இலங்கை அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். வெலாலகே தொடர்ந்து 2வது ஆட்டத்திலும் சிறப்பான பேட்டிங்கை கடைசி வரிசையில் வெளிப்படுத்தி அணியை மீட்டார்.


கமிந்து மென்டிஸ் கடைசி நிலையில் களமிறங்கி 40 ரன்கள் சேர்த்தும், பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டார். இருவரின் பேட்டிங்கால்தான் இலங்கை அணி பெரிய சரிவிலிருந்து மீண்டது. இல்லாவிட்டால், இலங்கை அணி 150 ரன்களுக்குள் சுருண்டிருக்கும்.




இந்திய அணி சரிந்தது எப்படி

இந்திய அணிக்கு ரோஹித் சர்மா மட்டும்தான் சிறப்பான தொடக்கத்தை கடந்த இரு போட்டிகளாக அளித்துள்ளார். வருங்காலக் கேப்டன் என்று வர்ணிக்கப்படும் சுப்மான் கில் டி20 போட்டியைத் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளிலும் மந்தமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார்.


சுப்மான் கில் 44 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார், இதில் 3 பவுண்டரிகள் அடங்கும் 79 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி இந்திய அணியின் ரன் ரேட்டை உயர்த்தும் பணியில் ஒத்துழைப்பின்றி செயல்பட்டார். ஆனால், கேப்டன் ரோஹித் சர்மா தொடர்ந்து 2வது ஆட்டத்திலும் தனது அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார்.


பவர்ப்ளே ஓவர்கள் முடியும் போது இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 76 ரன்கள் சேர்த்தது, அதில் ரோஹித் சர்மா அரைசதமும் அடித்திருந்தார். ஆனால், சுப்மான் கில் தொடர்ந்து மந்தமாகவே பேட் செய்தார். ஆனால் வான்டர்சே பந்துவீச வந்தபின் இந்திய அணியின் போக்கு மாறியது.


சிறப்பாக பேட் செய்த ரோஹித் சர்மா 64 ரன்கள் சேர்த்திருந்தபோது ஸ்விட்ச் ஸ்வீப் ஷாட் ஆட முயன்று வான்டர்சே பந்துவீச்சில் அசலங்காவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 97 ரன்களுக்கு இந்திய அணி முதல் விக்கெட்டை இழந்தது.


அதன்பின் இந்திய அணியின் ஆட்டத்தை வான்டர்சே தனது லெக்ஸ்பின்னில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைத்த நிலையில், வான்டர்சே பந்துவீச்சிலும் பந்து நன்கு டர்ன் ஆகியது. இதனால், வான்டர்சே வீசிய 18-வது ஓவரில் கில்(35), துபே ஆகியோர் விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது.


அதன்பின் வான்டர் வீசிய ஒவ்வொரு ஓவரிலும் இந்திய பேட்டர்கள் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். வான்டர்சே வீசிய 20வது ஓவரில் விராட் கோலி கால்காப்பில் வாங்கி வெளியேறினார், 22வது ஓவரில் ஸ்ரேயாஸ் கால்காப்பிலும், 24வது ஓவரில் கே.எல்.ராகுல் க்ளீன் போல்டாகியும் மளமளவென விக்கெட்டை பறிகொடுத்தனர்.


கடந்த 2 போட்டிகளாக ஸ்ரேயாஸ், கே.எல்.ராகுல் இருவரும் பெரிதாக பேட்டிங் திறமையை வெளிப்படுத்தவில்லை. அதிலும் இந்திய அணியின் சென்ட்ரல் கான்ட்ராக்டிலிருந்து நீக்கப்பட்டு வந்தபின் ஸ்ரேயாஸ் ஆட்டம் மந்தமாகவே இருக்கிறது.


14-வது ஓவரில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 97 ரன்களுடன் இருந்தது. ஆனால், அடுத்த 10 ஓவர்களில் 50 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.


இலங்கைபட மூலாதாரம்,GETTY IMAGES

ஆல்ரவுண்டர் என்ற பெயரில் ஷிவம் துபேவை டி20 உலகக் கோப்பையிலிருந்து இந்திய அணியில் வைத்துள்ளனர். ஆனால், இதுவரை மேட்ச்வின்னிங் ஆட்டத்தை ஒரு போட்டியில்கூட துபே வெளிப்படுத்தவில்லை.


ஐபிஎல் தொடரில் மஞ்சள் ஆடையில் இருந்தால் சுழற்பந்துவீச்சை வெளுக்கும் துபே, நீல ஆடைக்கு மாறியதும் தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வருகிறார்.


இந்திய அணியின் வெற்றிக்கு 93 ரன்கள் தேவைப்பட்டநிலையில் அக்ஸர், வாஷிங்டன் இருவரும் சேர்ந்து அணியைச் சரிவிலிருந்து மீட்கும் பணியைத் தொடங்கினர். ஆனால் இருவரும் சேர்ந்து 38 ரன்கள் மட்டுமே பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.


அசலங்கா பந்துவீச வந்தபின் அக்ஸர் (44), சுந்தர்(15) இருவரையும் தனது அடுத்தடுத்த ஓவர்களில் வெளியேற்றி இலங்கை அணியை வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். சிராஜ் 4 ரன்களில் கால்காப்பில் வாங்கி அசலங்கா பந்துவீச்சில் வெளியேற, அர்ஷ்தீப் ரன் அவுட் ஆகவே இந்திய அணியின் தோல்வி உறுதியானது.


இந்த ஆட்டத்தில் மட்டும் இந்திய பேட்டர்கள் 5 பேர் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தனர். இதில் வான்டர்சே பந்துவீச்சில் மட்டும் கோலி, துபே, ஸ்ரேயாஸ் ஆகிய 3 முழுநேர பேட்டர்கள் ஆட்டமிழந்தது ஆய்வுக்குரியதாகும்.


தரமான சுழற்பந்துவீச்சுக்கு முன் காலை நகர்த்தி ஆடாமல் இருந்தது, பந்தை கணிக்காமல் ஆடியதன் பலனாக விக்கெட்டுகளை இழந்துள்ளனர். அதேபோல பின்வரிசையில் சிராஜ், சுந்தர் இருவரும் கால்காப்பில் வாங்கி விக்கெட்டை இழந்தனர். இதன் மூலம் இந்திய பேட்டர்கள் பந்துவீச்சின் தன்மை, பந்தை சரிவர கணிக்காமல் ஆடியது விக்கெட் சரிவில் தெரியவந்துள்ளது.


இலங்கையை மீட்ட பேட்டர்கள்

இலங்கை அணி சிராஜ் வீசிய முதல் ஓவர் முதல் பந்திலேயே நிசங்கா விக்கெட்டை வீழ்த்தி அதிர்ச்சி அடைந்தது. ஆனால் 2வது விக்கெட்டுக்கு குஷால் மென்டிஸ், பெர்னான்டோ இருவரும் சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டு 74 ரன்கள் சேர்த்தனர். ஆனால் அடுத்த 66 ரன்களுக்குள் இலங்கை அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 136 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து 150 ரன்களைக் கடக்குமா என்ற கேள்வி எழுந்தது.


7-வது விக்கெட்டுக்கு வெலாலகே, மென்டிஸ் இணைந்தபின்புதான் இலங்கை அணி மீண்டும் உயிர்மூச்சு பெற்றது. இருவரும் மெல்ல இலங்கை அணியை சரிவிலிருந்து மீட்டனர். இலங்கை அணிக்கு முதல் இரு சிக்ஸர்களையுமே வெலாலகேதான் அடித்தார். சுந்தர், குல்தீப், அக்ஸர் பந்துவீச்சை நன்கு கணித்து ஆடிய இருவரும் நிதானமாக ரன்களைச் சேர்த்தனர்.


குல்தீப் பந்துவீச்சில் 39 ரன்கள் சேர்த்தநிலையில் வெலாலகே விக்கெட்டை இழந்தார். 7-வது விக்கெட்டுக்கு இருவரும் 72 ரன்கள் சேர்த்ததுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக மாறியது. கடைசி நேரத்தில் மென்டிஸ்(40), தனஞ்செயா(15) கேமியோ ஆடி இலங்கை அணியை கவுரமான ஸ்கோருக்கு கொண்டு வந்தனர். அர்ஷ்தீப் வீசிய கடைசி ஓவரில் மென்டிஸ், தனஞ்செயா இருவருமே ரன்அவுட் ஆகினர்.



அரைசதம் இல்லாவிட்டாலும் வெற்றி

இலங்கை அணியில் ஒரு பேட்டர் கூட அரைசதம் அடிக்கவில்லை. ஆனாலும், சரிவிலிருந்து மீண்டு 240 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியில் ரோஹித் சர்மா தொடர்ந்து 2-ஆவது அரைசதம் அடித்தபோதிலும், இந்திய அணியால் வெல்ல முடியவில்லை.


இந்திய அணிக்கு ஆறுதலான அம்சம், குல்தீப், வாஷிங்டன் இருவரின் பந்துவீச்சுதான். இருவரும் 20 ஓவர்கள் வீசி, 2மெய்டன்கள், 63 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 7-வது பந்துவீச்சாளராக ரோஹித் சர்மாவும் நேற்று 2 ஓவர்களை வீசினார்.