நூருல் ஹுதா உமர்
அடுத்த மாதம் 21ம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் கலாநிதி அன்வர் எம். முஸ்தபா தலைமையிலான ஸ்ரீலங்கா ஜனநாயகக் கட்சி நாட்டை சிறப்பாக வழிநடத்தும் அறிவும், அனுபவமும் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தனது பூரண ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளது என்று அக்கட்சியின் பிரசார செயலாளர் ஏ.எல்.ஏ.ஹுபைல் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, ஜனாதிபதி பணிக்குழாமின் பிரதானியும், முன்னாள் அமைச்சருமான சாகல ரத்நாயக்க, கட்சியின் செயலாளர், ஜனாதிபதியின் முக்கிய முகாமைத்துவக் குழு மற்றும் ஏனைய முக்கிய பங்குதாரர்களுடன் பிரதமர் அலுவலகத்தில் நேற்று இரவு நடைபெற்ற ஆக்கபூர்வமான கலந்துரையாடல் மற்றும் பேச்சுவார்த்தையின் பின்னரே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த முக்கியமான கலந்துரையாடலின் போது, ஸ்ரீலங்கா ஜனநாயகக் கட்சி முன்வைத்த முக்கிய கோரிக்கைகளை ஜனாதிபதியின் சார்பிலான பிரதிநிதிகள் ஏற்றுக்கொண்டதாகவும், நாளை பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ஸ்ரீலங்கா ஜனநாயகக் கட்சி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக கிழக்கு மாகாணத்திலும், களுத்துறை, கண்டி மற்றும் வன்னி ஆகிய பிரதேசங்களில் விடாமுயற்சியுடன் செயற்படுவதற்கு ஸ்ரீலங்கா ஜனநாயகக் கட்சி உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Post a Comment
Post a Comment