"மார்க்க விழுமியங்களில் பிசகாது பெண்கள் எந்தத் துறையிலும் முன்னேற முடியும்"








(நூ ருல் ஹுதா உமர்)w2


இன்றைய சூழலில் பெண்கள் தங்கள் திறமைகளை எல்லாத் துறைகளிலும் முன்னிலை படுத்தி  வருகின்றனர். திறமைகளை அடையாளப்படுத்துவதில் பெண்கள் காட்டிவரும் அர்ப்பணிப்பானது பாராட்டத்தக்கது. தங்களது மார்க்க விழுமியங்களில் பிசகாது பெண்கள் எந்தத் துறையிலும் முன்னேற முடியும் என்று தென்கிழக்கு பல்கலைக்கழக பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் தெரிவித்தார்.

தென்கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் தமிழ் சங்கம் மற்றும் சமூகவியல் சங்கம் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த புத்தளம் புழுதிவயல் பைஸானா பைரூஸ் எழுதிய ‘டுவன்டி ப்ளஸ் 20+’ கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு, கலை கலாசார பீடத்தின் கேட்போர் கூடத்தில் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில் தலைமையில்  2024.08.28 ஆம் திகதி இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போது தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மட்டுமல்லாது ஏனைய நிறுவனங்களிலும் பெண்களின் பங்கேற்ப்பு அதிகரித்து வருகின்றது. இவர்கள் பல்வேறு துறைகளில் தாங்களது திறமைகளை காட்டிவருகின்றனர். இந்த வகையில் இலக்கிய துறையில் கலை கலாச்சார பீட மாணவியான பைஸானா பைரூஸ் ‘டுவன்டி ப்ளஸ் 20+’ என்ற பெயரின் கவிதை நூல் ஒன்றை எழுதியுள்ளார். இவரது முயச்சியை பாராட்டாமல் இருக்க முடியாது. இவ்வாறான செயற்பாடுகளில் ஏனைய மாணவர்களும் தங்களது தடங்களைப் பதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வுக்கு இலக்கிய அதிதிகளாக சிரேஷ்ட பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ், பேராசிரியர் எஸ்.எம். ஐயூப், கலாநிதி எப். எச்.ஏ. ஷிப்லி மற்றும் விரிவுரையாளர் எம். அப்துல் றஸ்ஸாக் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

கௌரவ அதிதிகள் வரிசையில் புவியல் துறை தலைவர் கே. நிஜாமிர், பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் துறை தலைவர் எஸ். சந்திரகுமார், தகவல் தொழில்நுட்ப துறை தலைவர் எம்.எஸ். பாத்திமா பயாஷா ஆகியோரும் விஷேட அதிதிகளாக எம்.டி. தஸ்னீம் முகம்மட் (நளீமி), உஸ்தாத் மின்ஹாஜ் (இஸ்லாஹி), ஏ. மொஹம்மட் இன்ஷாப் மற்றும் ஜெ. மொஹம்மட் இஹ்ஷான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் வரவேற்புரையை   எஸ்.எம். சஹான் நிகழ்த்தினார். நூல் மற்றும் நூலாசிரியர் பற்றிய அறிமுகத்தை  விரிவுரையாளர் எம். அப்துல் றஸ்ஸாக்கும் நூல் பற்றி சிரேஷ்ட பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் அவர்களும் உரையாற்றினர்.