கிழக்கில் இரும்புச்சத்தடங்கிய பிஸ்கட்








கிழக்கு மாகாணத்தில் நமக்கெல்லாம் தேவையான இரும்புச் சத்து அடங்கிய பிஸ்கட் ஒன்று  விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.

 இவ்வாறு காரைதீவில் இடம் பெற்ற ஆயுர்வேத மத்திய மருந்தக பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய சுதேச மருத்துவ திணைக்களத்தின் கிழக்கு மாகாண ஆணையாளர் டாக்டர் எம்.ஏ. நபீல் தெரிவித்தார்.

காரைதீவு ஆயுர்வேத மத்திய மருந்தகத்தின் பரிசளிப்பு விழாவும் நூல் வெளியீடும் மருந்தக பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியசூரி டாக்டர் எம் சி எம். காலித் தலைமையில் காரைதீவு இராமகிருஷ்ண சங்கம பெண்கள் பாடசாலையில் நேற்று  (28) புதன்கிழமை நடைபெற்றது .

 கௌரவ அதிதிகளாக கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் டாக்டர் சகிலா ராணி இஸ்ஸதீன்  நிந்தவூர் ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்பி.அப்துல் வாஜித் உதவி கல்விப் பணிப்பாளர் வி.ரி. சகாதேவராஜா பிரதேச சபை செயலாளர் அ.சுந்தரகுமார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்..
குறித்த பிஸ்கட் தற்சமயம் தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான தொழில்நுட்ப பீடத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றது . அதற்கான முடிவு வந்ததும் கல்முனையில் வைத்து அதனை அறிமுகப்படுத்தி அனைவருக்கும் வழங்க வைத்திருக்கின்றோம் என்ற செய்தியை மக்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன். 

 வைத்தியகலாநிதி டாக்டர் காலித் ஆயுர்வேதத்திற்கு கிடைத்த சிறந்த ஒரு பொக்கிஷம்.அவர் எழுதிய நூலை நாங்கள் அச்சிட்டு வெளியிட தயாராக இருக்கின்றோம் என்றார்.

மாகாண ஆணையாளராக அண்மையில் பதவியுயர்வு பெற்ற டாக்டர் நபீல் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

மத்திய மருந்தகம் நடத்திய மாணவர்கள் இடையிலான ஆயுள்வேதம் பற்றிய வினா விடை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன .

கூடவே டாக்டர் காலித் எழுதிய "சுற்றாடலும் சுக வாழ்வும்" என்ற சிறுசஞ்சிகை அங்கே இலவசமாக அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டது.