கணிப்பீட்டு பரீட்சையில் 9A, 8A சித்திகளை பெற்ற மாணவிகள் பாராட்டி கெளரவிப்பு !




 


நூருல் ஹுதா உமர்


அண்மையில் இடம்பெற்று முடிவடைந்த க.பொ.த (சா/த) - 2024 தொகுதி மாணவர்களுக்கான கிழக்கு மாகாண மட்ட கணிப்பீட்டு பரீட்சையில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) சார்பாக தோற்றிய மாணவிகளில் அனைத்து பாடங்களிலும் 09"A" மற்றும் 08"A சித்திகளை பெற்றவர்களை கெளரவித்து முன்னேற்ற அறிக்கை வழங்கி வைக்கும் நிகழ்வு பகுதித்தலைவி எம்.ஜ. ஸிபா தெளபீக் தலைமையில் சேர் ராஸிக் பரீட் மண்டபத்தில் இடம் பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கல்லூரியின் முதல்வர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் கலந்து கொண்டு எதிர்கால இலக்குகள், இறை நம்பிக்கையுடன் கல்வி, கல்லூரியின் ஒழுக்கம், பொதுப் பரீட்சையில் வெற்றி கொள்வதற்கான அவசியம் தொடர்பான சிறப்புரை ஆற்றியிருந்தார்.

மாகாண மட்ட கணிப்பீட்டு பரீட்சையில் 38 மாணவிகள் 09"A" சித்திகளையும் 19 மாணவிகள் 08"A" சித்திகளையும் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர். பகுதிவாரியான முதல் மூன்று நிலைகளை பெற்ற தமிழ் மொழி மற்றும் இருமொழி மாணவிகளுக்கு அதிபரினாலும் ஏனைய 09"A", 08"A" பெற்ற மாணவிகளுக்கு பிரதி, உதவி அதிபர்கள், பகுதித்தலைவி, ஆசிரியர்கள் ஆகியோரினால் சான்றிதழ் மற்றும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

தரம் - 11 பிரிவு மாணவிகள் அண்மையில் இடம்பெற்ற மாகாண மட்ட விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டி,
சைபர் லோவட பியாபத் நிகழ்ச்சித் திட்டத்தில் இணைய வடிவமைப்பு, தேசிய வாசிப்பு மாதம், வலய மட்ட ஆங்கில மொழி மற்றும் நடகம் போன்ற போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் கல்லூரியின் ஒழுக்காற்று சபையினால் வகுப்பு, பகுதிவாரியான "Exit Card" வழங்கி வைக்கப்பட்டன.

பகுதிவாரியாக ஏனைய மாணவிகளை ஊக்கமளித்தல், கற்றலைத் தூண்டும் நோக்கிலும் மாணவிகளின் கலை கலாசார, ஆங்கில மற்றும் தமிழ் மொழிகளில் மேடை நிகழ்ச்சிகள் இந்நிகழ்வில் ஒழுங்குபடுத்தப்பட்ட இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் பிரதி அதிபர் ஹாஜியானி எஸ்.எஸ்.எம். சமதா மசூது லெவ்வை, உதவி அதிபர் என்.டி. நதீகா, பகுதித் தலைவர்கள், மற்றும் வகுப்பாசிரியர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.