101 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இலங்கை அணியை 230 ரன்கள் சேர்க்கவிட்டு, கடைசி 18 பந்துகளில் வெற்றிக்கான 5 ரன்களை அடிக்க முடியாமல் சமன் செய்து வெற்றியை கோட்டை விட்டது இந்திய அணி.
கொழும்பு நகரில் நேற்று பகலிரவாக நடந்த இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் ஆட்டம் எந்த முடிவும் எட்டப்படாமல் சமனில்(டை) முடிந்தது.
முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் சேர்த்தது. 231 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 47.5 ஓவர்களில் 230 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் ஆட்டம் டையில் முடிந்தது.
தவறுகளை திருத்திய இலங்கை அணி
டி20 தொடரில் தொடக்கத்தை சிறப்பாக அளித்த இலங்கை அணி நடுப்பகுதி பேட்டிங் வரிசையிலும், பின் வரிசையிலும் சொதப்பி, மோசமான தோல்விகளைச் சந்தித்தது. ஆனால், ஒருநாள் ஆட்டத்தில் முதல் போட்டியிலேயே அந்தத் தவறை திருத்திக்கொண்டது.
ஒருகட்டத்தில் 101 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இலங்கை தடுமாறிய நிலையில் நடுவரிசை பேட்டர் வெல்லாலகே அரைசதம் அடித்து கவுரவமான ஸ்கோருக்கு உயர்த்தினார். நிதானமாக ஆடி, ரன்களைச் சேர்த்து 230 ரன்கள் வரை இலங்கை அணியின் ஸ்கோர் உயர்வதற்கு வெல்லாலகே முக்கியக் காரணம்.
தமிழ்நாட்டில் இந்தி, தெலுங்கு பேசுபவர்கள் எத்தனை பேர்? புதிய அறிக்கையில் தகவல்
இந்தியா vs இலங்கைபட மூலாதாரம்,GETTY IMAGES
பொறுப்பை உணர்ந்த பந்துவீச்சாளர்கள்
இந்திய அணியின் பந்துவீச்சு நேற்று கட்டுக்கோப்பாகவே இருந்தது. பவர்ப்ளேயில் சிராஜ், அர்ஷ்தீப் சிறப்பாக செயல்பட்டு 45 டாட் பந்துகளை வீசியதால் இலங்கை அணியால் 33 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.
இலங்கை அணியின் நடுவரிசை பேட்டிங்கை குலைத்து 101 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 9 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 46 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
குல்தீப், அக்ஸர் இருவருமே 10 ஓவர்களை நிறைவு செய்து ஓவருக்கு 3.3 ரன் வீதமே வழங்கியதுடன், தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்திய பந்துவீச்சைப் பொருத்தவரை தங்களின் பொறுப்பை உணர்ந்து நேற்று பந்துவீசியதால்தான் இலங்கை அணியை 230 ரன்களுக்குள் சுருட்ட முடிந்தது.
இந்தியா vs இலங்கைபட மூலாதாரம்,GETTY IMAGES
வாய்ப்புகளை தவறவிட்ட இந்திய அணி
டி20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற ஜாம்பவான்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி இந்த ஆட்டத்தில் இடம் பெற்றிருந்தனர். கேப்டன் ரோஹித் சர்மா தனது இருப்பை தனது அதிரடியால் வெளிப்படுத்தி, அரைசதம் அடித்து 58 ரன்களில் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா களத்தில் இருந்தவரை ரன்ரேட் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது, நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துச் சென்றார்.
ஆனால், டி20 தொடரிலும் பெரிதாக ஸ்கோர் செய்யாத வருங்கால கேப்டன் என வர்ணிக்கப்படும் சுப்மன் கில், முதல் ஒருநாள் போட்டியிலும் 16 ரன்களில் ஆட்டமிழந்து பெரிய ஏமாற்றத்தை அளித்தார்.
இந்தியா vs இலங்கைபட மூலாதாரம்,GETTY IMAGES
ஆர்சிபி அணியில் இடம் பெற்றிருந்த இலங்கை சுழற்பந்துவீச்சாளர் ஹசரங்கா, விராட் கோலியின் பலவீனம் என்ன என்பதை நன்கு உணர்ந்திருந்தார். அதனால் கோலி பேட் செய்யத் தொடங்கியதும் ஹசரங்கா பந்துவீச அழைக்கப்பட்டார். தொடக்கத்திலிருந்தே திணறிய விராட் கோலி, அதை வெளிப்டுத்தாமல் பவுண்டரி அடித்தார். ஆனால், ஹசரங்காவின் லெக் ஸ்பின்னுக்கு கோலி 24 ரன்கள் சேர்த்த நிலையில் பலியாகினார்.
ஒரு கட்டத்தில் இந்திய அணி 189 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வலுவாக இருந்தது. 12 ஓவர்களில் வெற்றிக்கு 42 ரன்களே தேவைப்பட்டது, 5 விக்கெட்டுகள் கைவசம் இருந்த. 42வது ஓவர் வரை இந்திய அணி வெற்றி பெறவே 83 சதவீதம் வாய்ப்புள்ளதாக கணினி கணிப்புகள் தெரிவித்தன. ஆனால், கடைசி 41 ரன்களுக்கு இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றியைக் கோட்டை விட்டது.
'கோடி ரூபாய் கொடுத்தாலும் ராகுல் காந்தி தைத்த செருப்பை விற்க மாட்டேன்' - உறுதியுடன் கூறும் ஏழைத் தொழிலாளி
2 ஆகஸ்ட் 2024
'பாக்கெட்டில் கை, வெள்ளி பதக்கம்'- துருக்கி துப்பாக்கி சுடும் வீரர் யூசுஃப் டிகெக்கின் பாணி கைதட்டல் பெற்றது ஏன்?
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
இந்தியா vs இலங்கைபட மூலாதாரம்,GETTY IMAGES
கடைசி 18 பந்துகளில் இந்திய அணி வெற்றிக்கு 5 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது, கைவசம் 2 விக்கெட்டுகள் இருந்தன. ஷிவம் துபே களத்தில் இருந்தார். வெற்றியின் விளம்பில் இருந்த இந்திய அணி, 48-வது ஓவரில் அசலாங்கா பந்துவீச்சில் முதல் இரு பந்துகளை கோட்டைவிட்ட ஷிவம் துபே, 3வது பந்தில் பவுண்டரி அடித்து சமன் செய்தார். 4வது பந்தில் துபே கால்காப்பில் வாங்கி 25 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த அர்ஷ்தீப்பும் கால் காப்பில் வாங்கி ஆட்டமிழந்து வெற்றியைக் கோட்டைவிட்டனர்.
ஐபிஎல் தொடரில் சுழற்பந்துவீச்சை வெளுத்து வாங்கக்கூடிய பேட்டர் என்று பெயர் பெற்ற ஷிவம் துபே சர்வதேச தளத்துக்கு வந்தபின் பெரிதாக எந்த போட்டியிலும் தனது சிக்ஸர் அடிக்கும் திறமையை வெளிப்படுத்தவில்லை.
இந்தியா vs இலங்கைபட மூலாதாரம்,GETTY IMAGES
சுழற்பந்துவீச்சு பலம்
இலங்கை அணி அதிகமான சுழற்பந்துவீச்சாளர்களுடன் போட்டியை எதிர்கொண்டது. தீக்சனாவுக்குப் பதிலாக அசலங்கா, ரிஸ்ட் ஸ்பின்னர் ஹசரங்கா, மிஸ்ட்ரி ஸ்பின்னர் அகிலா தனஞ்செயா, இடதுகை சுழற்பந்துவீச்சாளர் துனித் வெலாலகே ஆகியோர் இந்திய அணியை மிரட்டினர்.
இந்திய அணியின் தொடக்கவரிசை, நடுவரிசை பேட்டிங் வலுவாக இருப்பது தெரிந்தாலும், சுழற்பந்துவீச்சுக்கு திணறுகிறார்கள் என்பதை இலங்கை அணி இந்த ஆட்டத்தில் வெளிப்படுத்திவிட்டது. முதல் விக்கெட்டுக்கு ரோஹித் சர்மா, கில் கூட்டணி 75 ரன்கள் சேர்த்து வலுவான தொடக்கத்தை அளித்தனர்.
ஆனால், இடதுகை சுழற்பந்துவீச்சாளர் வெலாலகே 13-வது ஓவரில் சுப்மான் கில்லையும், 15-வது ஓவரில் ரோஹித் சர்மாவையும் ஆட்டமிழக்கச் செய்தார். 4வது நிலையில் வழக்கமாக ஸ்ரேயாஸ், கேஎல் ராகுல் களமிறங்குவர், இந்தஆட்டத்தில் வாஷிங்டன் சுந்தர் களமிறக்கப்பட்டார். ஆனால், தனஞ்செயாவின் சுழற்பந்துவீச்சில் சுந்தர் 5 ரன்களில் கால்காப்பில் வாங்கி விக்கெட்டை பறிகொடுத்தார்.
விராட் கோலியின் பலவீனத்தை அறிந்து ஹசரங்காவை வைத்து அவரை இலங்கை கேப்டன் அசலங்கா வெளியேற்றினார். அது மட்டுமல்லாமல் கேஎல் ராகுல், குல்தீப் யாதவ் விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஹசரங்கா முக்கியத் துருப்புச் சீட்டாக இருந்தார்.
இந்தியா vs இலங்கைபட மூலாதாரம்,GETTY IMAGES
இடதுகை சுழற்பந்துவீச்சாளரான வெல்லாலகே அரைசதம் அடித்தது மட்டுமல்லாமல் பந்துவீச்சிலும் 2 விக்கெட்டுகளைச் சாய்த்து ஆட்டநாயகன் விருது வென்றார்.
கடைசி நேரத்தில் கேப்டன் அசலங்கா தார்மீகப் பொறுப்பேற்று 48-வது ஓவரை வீசி அடுத்தடுத்த பந்துகளில் ஷிவம் துபே, அர்ஷ்தீப் சிங் விக்கெட்டை வீழ்த்தி ஆட்டத்தை டையில் முடிக்க முக்கியக் காரணமாக அமைந்தார். டி20 தொடரில் இந்திய அணியில் சூர்யகுமார் கடைசி நேரத்தில் பந்துவீசி 2 விக்கெட் வீழ்த்திய அதே துணிச்சலை, அசலங்கா இந்த ஆட்டத்தில் வெளிப்படுத்தினார்.
இலங்கை அணியில் வெலாலகே, தனஞ்செயா, அசலங்கா, ஹசரங்கா ஆகிய 4 சுழற்பந்துவீச்சாளர்கள் சேர்ந்து 9 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்த 4 பந்துவீச்சாளர்களும் சேர்ந்து 37.5 ஓவர்கள் வீசி, 167 ரன்கள் அதாவது சராசரியாக ஓவருக்கு 4.3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து இந்திய அணியின் ரன்ரேட்டை கட்டுப்படுத்தி 9 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ரோஹித், கோலி வருகை ஏமாற்றமா?
2023ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்குப் பின் ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் நேற்று களமிறங்கினர். இதில் டி20 போட்டிகளில் இருந்து இருவரும் ஒய்வுபெற்ற நிலையில் இருவரும் விளையாடும் முதல் போட்டி என்பதால் எதிர்பார்ப்பு இருந்தது.
அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்றாற் போல் ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டம் அமைந்திருந்தது. 3 சிக்ஸர், 7 பவுண்டரிகள் என 33 பந்துகளில் அரைசதம் அடித்து ரோஹித் சர்மா தனது ஃபார்மை வெளிப்படுத்தினார். கேப்டன் ரோஹித் களத்தில் இருந்தவரை, இந்திய அணியின் ரன்ரேட் ராக்கெட் வேகத்தில் சென்றது. இந்திய அணி 71 ரன்கள் சேர்த்திருந்தபோது அதில் 54 ரன்கள் ரோஹித் சேர்த்ததுதான்.
கோலியின் பேட்டிங் எதிர்பார்ப்பைவிட சுமாராகவே அமைந்தது. சுழற்பந்துவீச்சுக்கு எளிதாக பலியாகிவிடும் கோலி, இந்த ஆட்டத்திலும் தப்பவில்லை. ஹசரங்காவின் 10 பந்துகளை எதிர்கொண்ட கோலி, அவரிடமே விக்கெட்டையும் இழந்து 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்தியா vs இலங்கைபட மூலாதாரம்,GETTY IMAGES
நடுவரிசை பேட்டர்கள் பொறுப்பு
கேப்டன் ரோஹித் சர்மா, கில் கூட்டணி நல்ல தொடக்கத்தை அளித்துவிட்டு சென்ற நிலையில் அதை காப்பாற்றி எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு நடுவரிசை பேட்டர்களுக்கு இருக்கிறது. ஆனால் கோலி 24 ரன்களில் ஆட்டமிழந்தபின், சுந்தர் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். 230 ரன்கள் இலக்கு என்பது எளிதாக அடைந்துவிடக்கூடியது.
ஆனால், ஸ்ரேயாஸ் அய்யர்(23), கேஎல் ராகுல்(31), அக்ஸர் படேல்(33) ஆகியோர் இன்னும் சிறிது நேரம் நிலைத்து ஆடியிருந்தால், ஆட்டம் இந்திய அணியின் பக்கம் சென்றிருக்கும். இருப்பினும் ஸ்ரேயாஸ் ஆட்டமிழந்தபின், அக்ஸர், கே.எல்.ராகுல் கூட்டணி 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினர்.
ஆனால், கடைசி வரிசையில் களமிறங்கிய ஷிவம் துபே தன்னுடைய ஆட்டத்தில் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 25 ரன்கள் சேர்த்த போதிலும், வெற்றிக்கான ஒரு ரன்னை சேர்க்காதது அனைத்து உழைப்பையும் வீணாக்கிவிட்டதாகவே உணர்த்துகிறது. அர்ஷ்தீப், குல்தீப், சிராஜ் ஆகியோர் டெய்லெண்டர் பேட்டர்கள் என்பதால் அவர்கள் மீது ரன் அழுத்தத்தை திணிக்க முடியாது. ஆல்ரவுண்டராக அணியில் இருக்கும் துபேதான் கடைசிவரை இருந்து ஆட்டத்தை முடித்திருந்திருந்தால் சிறப்பானதாக இருந்திருக்கும்.
இந்தியா vs இலங்கைபட மூலாதாரம்,GETTY IMAGES
14 பந்துகளில் ஒரு ரன் அடிக்க முடியவில்லை
ஆட்டம் சமனில் முடிந்தது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் “ இந்த ஸ்கோர் எளிதாக அடைந்துவிடக்கூடியதுதான். பேட்டர்கள் சிறப்பாக ஆடினார்கள் என்றாலும் நிலையான ஆட்டத்தை யாரும் வெளிப்படுத்தவில்லை. சிறப்பான தொடக்கத்தை அளித்தோம், ஆனால், சுழற்பந்துவீச்சு வந்தபின்புதான் உண்மையான ஆட்டம் தொடங்கும் என்பது எங்களுக்குத் தெரியும். தொடர்ச்சியாக சில விக்கெட்டுகளை கடைசியில் இழந்து தவறு செய்தோம். 14 பந்துகள் கைவசம் இருந்த நிலையில் ஒரு ரன்னை எடுக்க முடியாதது வேதனையாக இருக்கிறது.
இந்த போட்டித் தொடர் நாங்கள் உலகக் கோப்பைக்கோ அல்லது சாம்பியன்ஸ் டிராபிக்கு எங்களைத் தயார்படுத்தும் ஆட்டம் அல்ல. இது பயிற்சிக்கான மைதானமும் அல்ல. இது சர்வதேச ஆட்டம். நாம் எதை அடையப்போகிறோமோ அதை மனதில் வைத்து விளையாட வேண்டும். நல்ல கிரிக்கெட்டை விளையாட இங்கு வந்துள்ளோம். சிறந்த தொடராக மாற்றுவோம்” எனத் தெரிவித்தார்
இந்தியா vs இலங்கைபட மூலாதாரம்,GETTY IMAGES
முதல் ‘டை’ ஆட்டம்
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் எந்த முடிவும் இன்றி 0-0 என்ற கணக்கில் இருக்கிறது. கொழும்பு பிரமதேசா மைதானத்தில் இதுவரை 149 சர்வதேச ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளதில் இதில் ஒரு ஆட்டம்கூட சமனில் முடிந்தது இல்லை. மைதானத்தின் வரலாற்றிலேயே முதல் போட்டியாக இந்த ஆட்டம் டையில் முடிந்துள்ளது.
9,840 நாட்கள் வரலாறு
அடுத்துவரும் 2 போட்டிகளையும் இந்திய அணி வென்றால்தான் ஒருநாள் தொடரை கைப்பற்றி வரலாற்றைத் தக்கவைக்க முடியும். இல்லாவிட்டால், 9,840 நாட்களாக காப்பாற்றி வைத்திருந்த வரலாற்றை இந்திய அணி இழக்க நேரிடும்.
தாய்ப்பால் கொடுத்தால் மார்பகங்கள் தளர்ந்துவிடுமா?மருத்துவர்கள் சொல்வது என்ன?
2 ஆகஸ்ட் 2024
பாலின பரிசோதனை சர்ச்சை: 46 விநாடிகளில் போட்டியில் இருந்து வெளியேறிய குத்துச்சண்டை வீராங்கனை ஏஞ்சலா கரினி
2 ஆகஸ்ட் 2024
இந்தியா vs இலங்கைபட மூலாதாரம்,GETTY IMAGES
அதாவது, கடைசியாக 1997ம் ஆண்டு நடந்த ஒருநாள் தொடரில் இந்திய அணியை வென்று 3-0 என்ற கணக்கில் இலங்கை அணி வென்றுள்ளது. ஏறக்குறைய 27 ஆண்டுகளாக இந்திய அணிக்கு எதிராக எந்த ஒருநாள் தொடரையும் இலங்கை அணி கைப்பற்றவில்லை.
இந்த முறை இலங்கையிடம் இந்திய அணி ஒருநாள் தொடரை ஒருவேளை இழந்தால், 27 ஆண்டுகளாக தக்கவைத்திருந்த வரலாற்றை இழக்க நேரிடும்.
அது மட்டுமல்லாமல் இந்த முறை இலங்கை பயணத்தில் 2வது முறையாக ஆட்டம் டையில் முடிந்துள்ளது. டி20 தொடரில் 3வது ஆட்டம் டையில் முடிந்து சூப்பர் ஓவர் முறையில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி வென்றது. ஒருநாள் தொடரில் முதல் போட்டியே சமனில் முடிந்துள்ளது.
Post a Comment
Post a Comment