வங்கதேசத்தில் மீண்டும் தீவிரமடையும் மாணவர் போராட்டம், 90 பேர் மரணம்







வங்கதேசத்தில் மீண்டும் தீவிரமடைந்துவரும் போராட்டங்களில் குறைந்தது 90 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். காவல்துறைக்கும், பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி விலகக் கோரி அரசை எதிர்த்துப் போராட்டம் நடத்தி வருவோருக்கும் இடையே மோதல் வெடித்தது.


சமீபத்தில் மாணவர் தலைவர்கள் அரசுக்கு எதிராக ஒத்துழையாமை அறிவித்துள்ளதால், பதற்றம் இக்கட்டான கட்டத்தை எட்டியுள்ளது.


சிராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஒரு காவல்நிலையத்தை ஆயிரக்கணக்கான மக்கள் தாக்கியதாகவும், இதில் 13 காவல் அதிகாரிகள் உயிரிழந்ததாகவும் காவல்துறை கூறியுள்ளது.


வங்கதேசத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க காவலர்கள் கண்ணீர்ப் புகை குண்டு, ரப்பர் தோட்டாக்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் 200-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.


வங்கதேசத் தலைநகர் டாக்காவில் மொபைல் மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இணைய சேவை அளித்துவரும் நிறுவனங்கள், உள்ளூர் ஊடகங்களில் இது அரசின் அறிவிப்பின் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை எனத் தெரிவித்துள்ளனர்.


வங்கதேசத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய (BTRC) அதிகாரி ஒருவர் பிபிசி வங்காள மொழிச் சேவையிடம் பேசுகையில், டாக்கா நகரில் இப்போதைக்கு 4G இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், பிராட்பேண்ட் இணைய சேவைகள் எப்போதும் போலத் தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.


4G மற்றும் 3G சேவை இல்லாமல் மொபைல் போன்களில் மக்களால் இணைய சேவையைப் பயன்படுத்த முடியாது. மேலும், கிடைக்கப்பட்ட தகவலின்படி, இணைய சேவைகள் மீண்டும் எப்போது இயல்பு நிலையில் வழங்கப்படும் என்பது குறித்து தெரியவில்லை.




காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு

வங்கதேசத்தின் வடக்கு மாவட்டங்களான போக்ரா, பாப்னா மற்றும் ரங்பூர் போன்ற ஊர்கள் உட்பட நாடெங்கிலும் இறப்பு மற்றும் காயமடைந்தோர் எண்ணிக்கை பதிவாகி வருகிறது என வங்கதேச ஊடகம் மற்றும் ஏ.எஃப்.பி செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஞாயிறு (ஆகஸ்ட் 4) மாலை 6 மணியளவில் இருந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் செய்திகளில் வெளியான தகவலின் படி, இந்த ஊரடங்கு உத்தரவு காலவரையின்றி நீடிக்கும் எனத் தெரியவருகிறது.


2036-ல் ஆமதாபாத் நகரில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் திட்டத்திற்கு குஜராத் விவசாயிகள் எதிர்ப்பு ஏன்?

4 ஆகஸ்ட் 2024

கங்கை முதல் இலங்கை வரை தமிழர் ஆட்சியை ராஜேந்திர சோழன் விரிவாக்கியது எப்படி?

4 ஆகஸ்ட் 2024

வங்கதேசத்தில் மீண்டும் தீவிரமடையும் போராட்டம், 50 பேர் மரணம்பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என அரசை எதிர்த்துப் போராட்டம் நடத்தி வரும் குழு கோருகிறது

பிரதமர் பதவி விலகக் கோரி போராட்டம்

தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியுள்ளனர். நகரின் பிற பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன.


சில பகுதிகளில், ஆளும் அவாமி லீக் ஆதரவாளர்கள் மற்றும் அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் இடையே மோதல் வெடித்துள்ளது என்று கூறப்படுகிறது.


"ஒட்டுமொத்த நகரும் போர்க்களமாக மாறிவருகிறது," என ஒரு காவலர் கூறுகிறார். ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் பெயர் குறிப்பிட விரும்பாத காவலர், மருத்துவமனைக்கு வெளிய இருந்த இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களைப் போராட்டக்காரர்கள் தீவைத்து எரித்ததாகக் கூறினார்.


பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என அரசை எதிர்த்துப் போராட்டம் நடத்தி வரும் குழு கோருகிறது.


ஒரு குழுவினர் ஞாயிறு துவங்கி நாடு தழுவிய ஒத்துழையாமையை அறிவித்துள்ளனர். மேலும், இவர்கள் குடிமக்களை வரி மற்றும் பயன்பாட்டு கட்டணங்களைச் செலுத்த வேண்டாம் என அறிவுறுத்தி வருகின்றனர். மாணவர்கள் தொழிற்சாலைகள் மற்றும் பொது போக்குவரத்தை மூடவும் அழைப்பு விடுத்துள்ளனர்.



ஜூலை மாதம் வெடித்த போராட்டம்

கடந்த மாதம் வங்கதேசக் குடிமைப் பணிகளுக்கு அறிவிக்கப்பட்ட இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் தொடங்கிய மாணவர் போராட்டம், இப்போது அரசுக்கு எதிரான போராட்டமாக உருவெடுத்துள்ளது.


ஜூலை மாதம் நடந்த வன்முறையில் 200-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இவர்களுள் பலர் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூடு காரணமாக உயிரிழந்துள்ளனர்.


கடந்த இரு வாரங்களில் ஏறத்தாழ 10,000 பேரைப் பாதுகாப்புப் படையினர் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர். இவர்களில் எதிர்க்கட்சி ஆதரவாளர்களும், மாணவர்களும் அடங்குவர்.


ஞாயிறு (ஆகஸ்ட் 4) அன்று ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியைச் சேர்ந்தவர்கள் நாடுமுழுவதும் பேரணி நடத்தி வருகின்றனர்.


அடுத்த சில நாட்கள் இருதரப்பினருக்கும் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.



வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாபட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா

'பிரதமர் விசாரிக்கப்பட வேண்டும்'

"ஷேக் ஹசீனா பதவி விலகுவது மட்டுமின்றி, நடந்தேறிய கொலைகள், திருட்டு மற்றும் ஊழலுக்காக விசாரிக்கப்பட வேண்டும்," என மாணவர் தலைவர்களுள் ஒருவரான நஹித் இஸ்லாம் சனிக்கிழமை டாக்காவில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் கூறினார்.


கடந்த ஜனவரி மாதம் நடந்த தேர்தலை வங்கதேசத்தின் பிரதான எதிர்க்கட்சி புறக்கணித்திருந்தது. அதில் தொடர்ந்து நான்காவது முறையாகப் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஹசீனா. அவர்முன், இந்த எதிர்ப்புக்கள் ஒரு முக்கிய சவாலாக உருவெடுத்துள்ளன.


பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த ஹசீனா

1971-இல் பாகிஸ்தானுக்கு எதிரான சுதந்திரப் போரில் ஈடுபட்ட வங்கதேச சுதந்திரப் போர் வீரர்களின் உறவினர்களுக்குப் பல குடிமைப் பணிகளில் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டதை எதிர்த்து மாணவர்கள் கடந்த மாதம் போராட்டத்திம் நடத்தினர்.


ஆளும் கட்சி அரசு, அறிவித்த பெரும்பாலான இடஒதுக்கீடு அளவை குறைத்த போதிலும், போராட்டத்தில் கொல்லப்பட்ட மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


ஆனால், ஹசீனா ராஜினாமா செய்யக்கூடாது என அவரது ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர்.


ஆரம்பத்தில் ஹசீனா மாணவர் அமைப்புத் தலைவர்களிடம் வன்முறையை முடிவுக்கு கொண்டு வர நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்தினார்.


"நான் மோதல்களை விரும்பவில்லை. மாணவர்கள் போராட்ட அமைப்பின் தலைவர்களுடன் அமர்ந்து பேச விரும்புகிறேன்," என ஹசீனா தெரிவித்திருந்தார்.


ஆனால், மாணவர் போராட்டக்காரர்கள் அந்த அழைப்பை நிராகரித்துவிட்டனர்.



ராணுவம் என்ன சொல்கிறது?

கடந்த மாதம் சில காவல்நிலையங்கள் மற்றும் அரசுக் கட்டிடங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் தீவைத்து எரித்த சமயத்தில் ஹசீனா நிலைமையை மீட்டெடுக்க ராணுவத்திற்கு அழைப்புவிடுத்தார்.


வங்கதேச ராணுவப்படைத் தலைவர் ஜெனரல் வேக்கர்-உஸ்-ஜமான் (Waker-Uz-Zaman) இளைய அதிகாரிகளுடன் டாக்காவில் பாதுகாப்பு நிலைமையை மதிப்பிட ஒரு சந்திப்பு நடத்தினார்.


"வங்கதேச ராணுவம் எப்போதும் மக்களுக்கு ஆதரவாகத் தான் நின்றுள்ளது. இனிமேலும், மக்களின் நலனுக்காகவும், நாட்டின் தேவைக்காகவும் எங்கள் ஆதரவு தொடரும்," என ஜெனரல் ஜமான் தெரிவித்ததாக, இன்டர் சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன் டைரக்டரேட் (Inter Services Public Relation Directorate) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


பல நகரங்களில் போராட்டங்கள் மீண்டும் துவங்கப்பட்டுள்ளன. அதிகரித்து வரும் போராட்டக்காரர்களின் கோபத்தை எப்படி பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவருவது என அறியாது அரசு தடுமாறி வருகிறது.


கடந்த மாதம் போராட்டத்தின் போது இறந்தவர்களில் பலர் காவலர்களின் துப்பாக்கி சூடு மூலம் கொல்லப்பட்டனர், மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர் என வங்கதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


காவலர்கள் அவர்களது தற்காப்புக்காகவும், அரச சொத்துக்களைப் பாதுகாப்பதற்காகவும்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அரசுத்தரப்பு வாதிடுகிறது.