2024 இலங்கை ஜனாதிபதி தேர்தல்: வேட்பாளர்கள் குறித்த முக்கிய தகவல்கள்




 



19 ஆண்டுகளுக்குப் பின்னர் ரணில் போட்டி

இம்முறை தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியிடுகின்றார்.


கடந்த 1999 மற்றும் 2005-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க அந்த இரண்டு சந்தர்ப்பங்களில் தோல்வியை சந்தித்திருந்தார்.


அதனைத் தொடர்ந்து ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடாத நிலையில், இம்முறை மூன்றாவது தடவையாக போட்டியிடுகின்றார்.


எனினும், 2019-ஆம் ஆண்டு தெரிவான கோட்டாபய ராஜபக்ஸ, நாட்டில் ஏற்பட்ட மக்கள் போராட்டத்தை அடுத்து, நாட்டை விட்டு தப்பிச் சென்ற நிலையில், இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றார்.


அதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இலங்கையின் இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க அரசியலமைப்புக்கு அமைவாக நியமிக்கப்பட்டார்.


நாட்டைப் பொருளாதார நெருக்கடியிலிருந்து வழமைக்குக் கொண்டு வந்ததாக கூறப்படுகின்ற நிலையில், ரணில் விக்ரமசிங்க இம்முறை தேர்தலில் 19 வருடங்களின் பின்னர் போட்டியிடுகின்றார்.


இலங்கை ஜனாதிபதி தேர்தல்: இந்திய வம்சாவளி மலையக தமிழர்களை முன்னிறுத்தி தனி வேட்பாளர் ஏன்?

ரணில் விக்ரமசிங்க இம்முறை தேர்தலில் 19 வருடங்களின் பின்னர் போட்டியிடுகின்றார்

இடைக்கால ஜனாதிபதியாகப் பதவி வகித்த ஒருவர் முதல் முறையாக தேர்தலில் போட்டியிடும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த சுமார் 100-க்கும் அதிகமான உறுப்பினர்கள் ஆதரவை வெளியிட்டுள்ளனர்.


இந்த நிலையில், 2019-ஆம் ஆண்டு தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றிக்காக முன்னின்று பணியாற்றிய முக்கிய உறுப்பினர்களில் பலர், இம்முறை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகச் செயற்படும் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒரு தரப்பினர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒரு தரப்பினர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட பல பிரதான கட்சிகளின் ஆதரவு கிடைத்துள்ளது.


இந்த நிலையில், சுயாதீன வேட்பாளராக களமிறங்கியுள்ள ரணில் விக்ரமசிங்கவிற்கு, தேர்தல் ஆணைக்குழுவினால் எரிவாயு சிலிண்டர் (கேஸ் சிலிண்டர்) சின்னம் வழங்கப்பட்டுள்ளது.


சஜித் பிரேமதாஸ

அதேபோன்று, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவாகவும் பலர் அவருடன் இணைந்து வருவதை அவதானிக்க முடிகின்றது.


பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் சஜித் பிரேமதாஸ இரண்டாவது முறையாகப் போட்டியிடுகின்றார்.


2019-ஆம் ஆண்டு முதல் முறையாக கோட்டாபய ராஜபக்ஸவை எதிர்த்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சஜித் பிரேமதாஸ, இரண்டாவது இடத்தை தனதாக்கிக் கொண்டார்.


இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் - மலையக தமிழர், முஸ்லிம் ஆதரவு யாருக்கு?

SAJITH PREMADASA

படக்குறிப்பு,ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் சஜித் பிரேமதாஸ இரண்டாவது முறையாகப் போட்டியிடுகின்றார் (வணக்கம் தெரிவிப்பவர்)

சஜித் பிரேமதாஸவிற்கு மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ரிஷாட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான கட்சிகளின் ஆதரவும் கிடைத்துள்ளது.


ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து கருத்து வேறுப்பாடு காரணமாக 2019-ஆம் ஆண்டு பிரிந்த சஜித் பிரேமதாஸ தரப்பு, ஐக்கிய மக்கள் சக்தி என்ற கட்சியை ஸ்தாபித்திருந்தது.


இந்த நிலையில், சஜித் பிரேமதாஸ தொலைபேசி சின்னத்தில் இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றார்.


அநுர குமார திஸாநாயக்க

மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி சார்பில் இரண்டாவது தடவையாகவும் அநுர குமார திஸாநாயக்க களமிறக்கப்பட்டுள்ளார்.


கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க மூன்றாவது இடத்தை தனதாக்கிக் கொண்டிருந்தார்.


இலங்கையில் இதுவரை காலம் ஆட்சி புரிந்தவர்கள் ஊழல், மோசடிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற அடிப்படையில் தமது பிரசாரத்தை முன்னெடுத்து வரும் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு அலை அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிவதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


இலங்கை: ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்கள் யார்? யாருக்கு இடையே அதிக போட்டி?

8 ஆகஸ்ட் 2024

இலங்கை அதிபர் தேர்தலில் ஒரே வாக்குச்சீட்டில் 3 பேருக்கு வாக்களிக்கலாம் - எப்படி தெரியுமா?

27 ஜூலை 2024

அநுர குமார திஸாநாயக்கபட மூலாதாரம்,ANURA KUMARA DISSANAYAKE

படக்குறிப்பு,கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க மூன்றாவது இடத்தை தனதாக்கிக் கொண்டிருந்தார் (நீல நிற உடை அணிந்திருப்பவர்)

குறிப்பாக பொருளாதார நெருக்கடிக்கு பின்னரான போராட்டத்தை அடுத்தே, தேசிய மக்கள் சக்தி மீதான ஆதரவு அதிகரித்துள்ளது.


பல்கலைக்கழகங்கள், தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பெருந்திரளானோரின் ஆதரவை பெற்றுக்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியுடன் ஏனைய பிரதான கட்சிகள் இதுவரை இணையவில்லை.


தமது கட்சியுடன் பலர் இணைய முயற்சித்த போதிலும், அவர்களின் பின்னணி ஏற்புடையதல்லாமையினால்; அவர்களை தமது கட்சியுடன்; இணைத்துக்கொள்ளவில்லை என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


நாமல் ராஜபக்ஸ

இலங்கையில் இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக பதவி வகித்து, உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு தலைமைத்துவம் வழங்கிய மஹிந்த ராஜபக்ஸவின் மூத்த மகன் நாமல் ராஜபக்ஸ இம்முறை தேர்தலில் முதல் தடவையாக போட்டியிடுகின்றார்.


கோட்டாபய ராஜபக்ஸ பதவி துறந்ததை அடுத்து, இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க ஆட்சியை தொடர்வதற்கு மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாரிய பங்களிப்பை வழங்கியிருந்தது.


இந்தநிலையில், இம்முறை தேர்தலில தமது கட்சி தமது சின்னத்தின் கீழ் போட்டியிட வேண்டும் என்ற நிலைப்பாட்டின் அடிப்படையில் நாமல் ராஜபக்ஸ தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளார்.


யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தினார் என்ற அடிப்படையில் மஹிந்த ராஜபக்ஸ மீது பெரும்பான்மை சிங்கள மக்கள் இன்றும் ஆதரவை வழங்கி வருகின்றனர்.


இந்த ஆதரவை முன்னிலைப்படுத்தி, நாமல் ராஜபக்ஸ இம்முறை தேர்தலில் போட்டியிடுவதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


இலங்கை தேர்தல் தேதி அறிவிப்பு - தமிழர் ஒருவர் ஜனாதிபதி ஆவது எவ்வளவு சாத்தியம்?

26 ஜூலை 2024

குரங்கம்மை பரவல்: சர்வதேச சுகாதார நெருக்கடியாக அறிவித்த உலக சுகாதார நிறுவனம் - எப்படிப் பரவுகிறது?

மஹிந்த ராஜபக்ஸவின் மூத்த மகன் நாமல் ராஜபக்ஸ இம்முறை தேர்தலில் முதல் தடவையாக போட்டியிடுகின்றார்

2015-ஆம் ஆண்டு தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ தோல்வியடைந்ததை அடுத்து, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து பிரிந்த மஹிந்த ராஜபக்ஸ தரப்பினர், மொட்டு சின்னத்திலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை ஸ்தாபித்திருந்தனர்.


இந்த மொட்டு சின்னத்தில் 2019-ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ஸ, வரலாற்றில் அதிகப்படியாக வாக்குகளினால் இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவாகியிருந்தார்.


இந்தநிலையில், கோட்டாபய ராஜபக்ஸவின் ஆட்சி இடைநடுவில் கவிழ்ந்ததை அடுத்து, அவர்களின் ஆதரவுடனேயே ரணில் விக்ரமசிங்க ஆட்சி அமைத்திருந்தார்.


எனினும், இம்முறை தேர்தலில் ரணில் விக்ரமசிங்க சுயேட்சையாக களமிறங்கியதை அடுத்து, நாமல் ராஜபக்ஸ மொட்டு சின்னத்தில் போட்டியிடுகின்றார்.


சரத் பொன்சேகா

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் காலப் பகுதியில் ராணுவ தளபதியாக பதவி வகித்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இரண்டாவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றார்.


2010-ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக வரலாற்றில் முதல் தடவையாக பொது ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் அப்போது களமிறக்கப்பட்டார்.


இதன்படி, முதல் தடவையாக 2010-ஆம் ஆண்டு சரத் பொன்சேகா போட்டியிட்டு, இரண்டாவது இடத்தை தனதாக்கிக் கொண்டார்.


விவாகரத்து பெற்ற பெண்களை தங்கள் முன்னாள் கணவரிடம் அனுப்பும் தாலிபன்கள்- காரணம் என்ன?

15 ஆகஸ்ட் 2024

பாகிஸ்தான் சுதந்திரம் பெற்ற நாளில் என்ன நடந்தது- டெல்லியில் இருந்து கிளம்பும்போது முகமது அலி ஜின்னா என்ன செய்தார்?

15 ஆகஸ்ட் 2024

சரத் பொன்சேகாபட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சரத் பொன்சேகா இரண்டாவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றார்

ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சரத் பொன்சேகா, அந்த கட்சியிலிருந்து பிரிந்து இம்முறை தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிடுகின்றார்.


முன்னாள் அமைச்சராக கடமையாற்றிய விஜயதாஸ ராஜபக்ஸ, அமைச்சு பதவியை துறந்த நிலையில் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் முதல் தடவையாக போட்டியிடுகின்றார்.


இலங்கையின் பிரபல தொழிலதிபரான திலித் ஜயவீர இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் முதல் தடவையாக போட்டியிடுகின்றார்.


இடைக்கால ஜனாதிபதியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டதை அடுத்து, அந்த கட்சியிலிருந்து பிரிந்த உறுப்பினர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட அரசியல் கூட்டணியில் திலித் ஜயவீர களமிறக்கப்பட்டுள்ளார்.


முன்னாள் ஜனாதிபதிகளின் புதல்வர்கள்

2024-ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளில் புதல்வர்கள் போட்டியிடுகின்றனர்.


ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 1988-ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய ரணசிங்க பிரேமதாஸவின் புதல்வராக சஜித் பிரேமதாஸ இம்முறை தேர்தல் போட்டியிடுகின்றார்.


அத்துடன், முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வரான நாமல் ராஜபக்ஸ இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றார்.


ஐந்து சிறுபான்மை வேட்பாளர்கள்

இம்முறை தேர்தலில் மூன்று தமிழர்களும், இரண்டு இஸ்லாமியர்களும் போட்டியிடுகின்றனர்.


வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற அடிப்படையில் பா.அரியநேத்திரன் போட்டியிடுகின்றார்.


அத்துடன், இந்திய வம்வாவளித் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் போட்டியிடுகின்றார்.


ரஷ்ய மண்ணில் யுக்ரேனின் அசாத்திய நடவடிக்கை- அடுத்து என்ன நடக்கும், புதின் என்ன செய்ய போகிறார்?

15 ஆகஸ்ட் 2024

சுனிதா வில்லியம்ஸ்: விண்வெளியில் அதிக நாட்கள் தங்குவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?- நாசா கூறிய புதிய தகவல் என்ன?

15 ஆகஸ்ட் 2024

பா.அரியநேத்திரன்பட மூலாதாரம்,ARIYANETHIRAN

படக்குறிப்பு,தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற அடிப்படையில் பா.அரியநேத்திரன் போட்டியிடுகின்றார்

அத்துடன், அருணலு மக்கள் முன்னணி சார்பில் கே.ஆர்.கிரிஷான் போட்டியிடுகின்றார்.


மொஹமட் இல்லியாஸ், மற்றும் அபுபக்கர் மொஹமட் இன்பாஸ் ஆகியோர் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்திப் போட்டியிடுகின்றனர்.


நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஒருவரைத் தேர்வு செய்வதற்காக இதுவரை நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தல்களில் அதிகளவிலான சிறுபான்மை வேட்பாளர்கள் போட்டியிடும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.


யுக்ரேன் தாக்குதலை சமாளிக்க முடியாமல் தடுமாறுகிறதா ரஷ்ய ராணுவம்? 5 கேள்விகளும் பதில்களும்

17 ஆகஸ்ட் 2024

அமெரிக்கா, ஜப்பான் வரிசையில் இந்தியாவும் வளர்ந்த நாடாவது எப்போது?

14 ஆகஸ்ட் 2024

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் பட மூலாதாரம்,THILAGARAJ

படக்குறிப்பு,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் போட்டியிடுகின்றார்

அதிக தடவைகள் போட்டியிடும் வேட்பாளர்

2005-ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஐந்தாவது தடவையாகவும் சிறிதுங்க ஜயசூரிய ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றார்;.


2005, 2010, 2015, 2019 தேர்தல்களில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவிய சிறிதுங்க ஜயசூரிய ஐந்தாவது தடவையாகவும் 2024-ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிடுகின்றார்.


இலங்கை வரலாற்றில் ஜனாதிபதித் தேர்தலில் அதிகளவான தடவைகள் போட்டியிட்ட வேட்பாளராக சிறிதுங்க ஜயசூரிய விளங்குகின்றார்.


பெண் வேட்பாளர்களே இல்லாத தேர்தல்

இலங்கையில் இரண்டாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக 1988-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முதல் தடவையாகப் பெண் வேட்பாளர் என்ற அடிப்படையில் சிறிமாவோ பண்டாரநாயக்க போட்டியிட்டார்.


இந்தத் தேர்தலில் ரணசிங்க பிரேமதாஸ வெற்றியீட்டியிருந்ததுடன், சிறிமாவோ பண்டாரநாயக்க தோல்வியை தழுவினார்.


இன்றும் உலகின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை கொண்டவராக சிறிமாவோ பண்டாரநாயக்க விளங்குகின்றார்.


வங்கதேசத்தில் இந்தியா செய்துள்ள பெரும் முதலீடுகள் என்ன ஆகும்?


படக்குறிப்பு,1994, 1999 தேர்தல்களில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க போட்டியிட்டு ஜனாதிபதியாகத் தெரிவானார்

அதனைத் தொடர்ந்து, 1994-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் புதல்வியான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க போட்டியிட்டு ஜனாதிபதியாகத் தெரிவானார்.


1999-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க போட்டியிட்டு வெற்றியீட்டினார்.


அதன் பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் பெண் வேட்பாளர்கள் களமிறங்கிய நிலையில் வெற்றி பெறவில்லை.


இறுதியாக 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பெண் வேட்பாளராக அஜந்தா டி சொய்சா போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.


இந்த நிலையில், இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு பெண் வேட்பாளரும் களமிறங்கவில்லை.


தேர்தலில் இரண்டு பௌத்த பிக்குகள்

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு பௌத்த தேரர்கள் பிக்குகள் போட்டியிடுகின்றனர்.


அம்மீமன தயாரத்ன தேரர், பத்தரமுல்லே சீலரத்ன தேரர் ஆகியோர் இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றனர்.


போராட்டக் குழு சார்பில் வேட்பாளர்

2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய கோட்டாபய ராஜபக்ஸவிற்கு எதிராக 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற மாபெரும் போராட்டத்தில் கலந்துகொண்டு போராட்டத்தை நடத்திய குழு சார்பில் வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டுள்ளார்.


இதன்போது, காலி முகத்திடல் போராட்டத்தை முன்னின்று நடத்திய குழு சார்பில் நுவன் சஞ்ஜீவ போபகே களமிறக்கப்பட்டுள்ளார்.


போராட்டத்தை நடத்திய இளைஞர், யுவதிகளின் ஆதரவுடன் நுவன் சஞ்ஜீவ போபகே களமிறங்கியுள்ளார்.


அதிகளவான வேட்பாளர்கள் போட்டியிடும் முதல் சந்தர்ப்பம்

இலங்கை வரலாற்றில் ஜனாதிபதித் தேர்தலில் அதிகளவிலான வேட்பாளர்கள் போட்டியிடும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். கடந்த ஆண்டு 35 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், இம்முறை 39 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.


இதையடுத்து, இலங்கையில் முதல் தடவையாக அதிகளவிலான வேட்பாளர்களுடனான வாக்குச்சீட்டு இம்முறை அச்சிடப்படவுள்ளது.


இதன்படி, வாக்குச்சீட்டை அச்சிடும் விதம் குறித்து தமது ஆணைக்குழு, அரச அச்சகத் திணைக்களத்துடன் கலந்துரையாடித் தீர்மானிக்கும் என ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவிக்கின்றார்.


தேர்தல் ஆணைக்குழு தலைவர் சொல்வது என்ன?

2024-ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்காக இம்முறை வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக 1,000 கோடி ரூபாய் (10 பில்லியன் ரூபாய்) கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவிக்கின்றார்.


இந்த 10 பில்லியன் ரூபாயில் போலீஸ் திணைக்களம், அரச அச்சகத் திணைக்களம் மற்றும் தபால் திணைக்களம் ஆகியவற்றுக்கான செலவீனங்களையும் செய்ய வேண்டியுள்ளதாக அவர் கூறுகின்றார்.


அதிகளவிலான ஜனாதிபதி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றமையினால், பாரிய பிரச்னைகளைத் தாம் எதிர்நோக்கியுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.


அதிகளவிலான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றமையினால் அரசாங்கத்தின் நிதி தேவையற்ற விதத்தில் வீண்விரயமாவதாகவும் அவர் கூறுகின்றார்.


அத்துடன், தொழில்நுட்ப ரீதியாகவும், செயற்பாட்டு ரீதியாகவும் தாம் பல்வேறு சவால்களை எதிர்நோக்கியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிடுகின்றார்.


குறிப்பாக, வாக்கு பெட்டிகளைத் தயாரித்தல், வாக்குகளை எண்ணுதல் போன்ற செயற்பாடுகளின் போது தாம் பாரிய சவால்களை எதிர்நோக்குவதுடன், வாக்காளர்களும் இதனால் பாரிய பிரச்னைகளை எதிர்நோக்குவார்கள் என அவர் சுட்டிக்காட்டுகிறார்.


இவ்வாறான நிலையில், வேட்பாளர்களின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இனிவரும் காலங்களில் தீவிரமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கமைய, தேர்தல் 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் ஒரு கோடியே 71 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.