சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக்கழக வீரர்களுக்கு கௌரவிப்பு




 


மாளிகைக்காடு செய்தியாளர்


கிழக்கு மாகாண அம்பாறை மாவட்ட முன்னணி விளையாட்டுக்கழகங்களில் ஒன்றான சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக்கழக வீரர்கள் கிழக்கு மாகாண முன்னணி விளையாட்டுக்கழகங்களை வீழ்த்தி தொடர்ச்சியாக மூன்று சம்பியன் பட்டங்களை பெற்றமையை பாராட்டி வீரர்களுக்கு கௌரவமளிக்கும் நிகழ்வு கழக முகாமையாளர் எம்.எம். பஸ்மீரின் நெறிப்படுத்தலில் கழகத் தலைவரும், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை உத்தியோகத்தருமான எம்.பி.எம். பாஜிலின் தலைமையில் சாய்ந்தமருது அல்- ஜலால் வித்தியாலய கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை (05) இரவு நடைபெற்றது.

கழக தவிசாளரும், ஓய்வுபெற்ற பிரதியதிபருமான ஏ.எம். நிஸாரின் ஆரம்ப உரையுடனும், கழக ஊடக செயலாளரும், கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு உறுப்பினருமான நூருல் ஹுதா உமரின் அறிமுக உரையுடனும் ஆரம்பமான இந்த பாராட்டு விழாவில் கல்முனை அபிவிருத்தி குழுத்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வீரர்களை பாராட்டி கௌரவித்ததுடன் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக் கழகத்திற்கு தேவையான விளையாட்டு உபகரணங்களையும் வழங்கி வைத்தார்.

இதன்போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப், அம்பாறை மாவட்ட கிரிக்கட் வீரர்களை தேசிய அணியில் இடம்பிடிக்கச்செய்ய தேவையான வேலைத்திட்டங்களை தான் இனிவரும் காலங்களில் முன்னெடுக்க தயாராக உள்ளதாகவும் கடந்த காலங்களில் நாட்டின் நிலை மோசமானதாக இருந்ததாலும் கொரோனா தொற்றின் காரணமாக நாடு சிக்கலில் இருந்ததால் இது தொடர்பில் சிந்திக்க நேரம் இருந்திருக்கவில்லை என்றார்.

இந்த நிகழ்வில் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன், சாய்ந்தமருது அல்- ஜலால் வித்தியாலய அதிபர் எம்.எஸ்.எம். ஸைபுதீன், பிரதியதிபர் ரீ.கே.எம். சிராஜ் உட்பட பிரதேச கல்விமான்கள், தொழிலதிபர்கள், பிராந்திய முக்கியஸ்தர்கள், கழக நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.