பண்ணிசை ஒதும் போட்டி





வி.சுகிர்தகுமார்  


 அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட மாணவர்களுக்கிடையிலே நடாத்தப்பட்ட பஞ்சபுராண வித்தகர் விருதுக்கான பஞ்சபுராணம் பண்ணிசை ஒதும் முதலாம் கட்ட போட்டி இந்து இளைஞர் மன்ற ஒன்று கூடல் மண்டபத்தில் நேற்று (29) இடம்பெற்றது.
இந்து இளைஞர் மன்றத்தின் தலைவரும் விபுலானந்தா சிறுவர் இல்லத்தின் ஸ்தாபகரும் இறைபணிச்செம்மலுமான த.கயிலாயபிள்ளை தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அருளாளராக ஸ்ரீமத் சுவாமி நித்தியானந்தா சரஸ்வதி மகராஜ் கலந்து கொண்டார்.
நிகழ்வில் முன்னிலை மேலாளர்களாக ஆலையடிவேம்பு கோட்டக்கல்விப்பணிப்பாளர் கே.கமலமோகனதாசன் அம்பாரை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி இராமகிருஸ்ண தேசிய பாடசாலை அதிபர் க.ஐயந்தன் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தலைவர் பி.தணிகாசலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நடுவர்களாக இசைக்கலைமாமணி க.வரதராஜன் இசைக்கலைமாமணி திருமதி புவனேஸ்வரி ஐயகணேஸ் வைசப்புலவர் யோ.கஜேந்திரா சைவப்புலவர் தெ.தயமுக சர்மா ஆகியோர் கலந்து கொண்டதுடன் அவதானக்குழுவினராக இசைத்துறை ஆசிரியர்களான கு.சாத்வீகாசினி; பூ.சந்திரிக்கா சு.சாமினி லோ.ஜனக்குமாரி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
கீழ்ப் பிரிவு மத்திய பிரிவு மேற்பிரிவு என மூன்று பிரிவுகளாக இடம்பெற்ற பஞ்சபுராண பண்ணிசை போட்டி நிகழ்வுகளில் 56 மாணவர்கள் பங்கேற்றதுடன் பிரிவு ரீதியாக 7 மாணவர்கள் எனும் அடிப்படையில் இறுதிப்போட்டிக்கு 21 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
இறுதிப்போட்டிகள் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் முதலாம் இரண்டாம் மூன்றாம் இடங்களை பெறுகின்றவர்களுக்கு முறையே 20 அயிரம் 15 ஆயிரம் 10 ஆயிரம் பணப்பரிசுடன் பஞ்சபுராண வித்தகர் விருதும் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழும் வழங்கப்படவுள்ளது.
மாணவர்களிடையே பஞ்சபுராணம் பண்ணிசை ஒதும் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையிலும் ஆன்மீகத்துடனான ஒழுக்கமுள்ள மாணவர்களை உருவாக்கும் வகையிலும் இப்போட்டி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் முதல் சுற்றில் தெரிவு செய்யப்பட்ட 21 மாணவர்களும் கலந்து கொண்ட அதிதிகளினால் பாராட்டப்பட்டனர்.