'தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு' (IT outage), கடந்த இரண்டு நாட்களாக
உலகம் முழுவதும் அதிகம் விவாதிக்கப்பட்ட ஒரு விஷயமாக மாறிவிட்டது. இந்த நவீன யுகத்தில் ஒரு சிறு தொழில்நுட்ப தவறு கூட நமது அன்றாட வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்பதற்கு வெள்ளிக்கிழமை நடந்தவை ஒரு உதாரணம். இதில் அதிகமாக பாதிக்கப்பட்டது விமான சேவைகள் தான்.
அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் வெள்ளிக்கிழமை 1,400 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. 3,000-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் தாமதமாக இயக்கப்பட்டன. வங்கித் துறை, பங்குச் சந்தை மற்றும் மருத்துவத்துறையும் இதனால் பாதிக்கப்பட்டது.
சைபர்-செக்யூரிட்டி நிறுவனமான க்ரவுட்ஸ்ட்ரைக் இந்தச் செயலிழப்புக்குப் பொறுப்பேற்றுள்ளது. இதனால் உலகம் முழுவதும் 85 லட்சம் விண்டோஸ் கணினிகள் செயலிழந்தன என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவிலும் விமான சேவைகள், வங்கிச் சேவைகள் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஹாங்காங் விமான நிலையத்தின் கணினித் திரையில் தோன்றும் 'ப்ளூ ஸ்க்ரீன் எரர்'
கடந்த வெள்ளிக்கிழமை காலை தங்களது கணினிகளை ஆன் செய்த விண்டோஸ் பயனர்கள் பலரும் திரையில் தோன்றிய ப்ளூ ஸ்க்ரீன் எரர் 'Blue Screen of Death (BSOD)' கண்டு சற்று திகைத்துப்போயினர்.
'உங்கள் கணினியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, ரீஸ்டார்ட் செய்ய வேண்டும். நடந்த தவறு தொடர்பான தரவுகளை சேகரித்து வருகிறோம். அதன் பின்னர், ரீஸ்டார்ட் செய்யப்படும்’ என அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.
இந்த தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு ஐ.டி துறையை எவ்வாறு பாதித்தது என்பது குறித்த விவரங்களை தமிழ்நாட்டின் முன்னணி ஐ.டி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பிபிசியிடம் பகிர்ந்துகொண்டனர்.
காக்னிசன்ட் நிறுவனத்தில் பணிபுரியும் அஜய் பேசுகையில், "வெள்ளிக்கிழமை என்றவுடன் சரி சீக்கிரமாக வேலையை முடித்துவிட்டால், இரண்டு நாட்கள் விடுமுறை என்ற எண்ணத்தில் கணினியை ஆன் செய்தேன். எங்கள் கணினி திரைகளில் ப்ளூ ஸ்க்ரீன் எரர் ஏற்படவில்லை, காரணம் நாங்கள் இணைய சர்வர் மூலம் மற்றொரு கணினியில் தான் லாக்-இன் செய்வோம். ஆனால், அவ்வாறு லாக்-இன் செய்வதில் தான் சிக்கல் ஏற்பட்டது. 5 முதல் ஆறு மணி நேரம் வரை எங்களால் பணிபுரிய முடியவில்லை" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "முதலில் எங்களுக்கு மட்டும் தான் இந்த பிரச்னை என்று நினைத்தோம். பின்னர் செய்தியைப் பார்த்த பிறகு உலகம் முழுவதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது புரிந்தது. எங்களது கிளையண்ட் (Client) அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தனியார் சுகாதார நிறுவனம். 5 மணி நேரம் தாமதமானதால் அதற்கு ஈடாக இரவு வரை பணிபுரிந்தோம்." என்றார்.
படக்குறிப்பு,பாங்காக் விமான நிலையத்தில் குவிந்துள்ள பயணிகள்
தங்கள் குழுவுக்கு நஷ்டம் என்று பார்க்கும் போது மனித உழைப்பும், நேரமும் தான் என்கிறார் அஜய்.
"ஆனால் வங்கித்துறை, பங்குச் சந்தைகள் போன்றவற்றில் ஒவ்வொரு நொடியும் பணம் சார்ந்தது. எனவே வேலை சரியான நேரத்தில் நடக்கவில்லை என்பதால் அதில் தான் நிதி சார்ந்து அதிக பாதிப்பு ஏற்பட்டது" என்கிறார்.
"வழக்கமாக வெள்ளிக்கிழமை அதிக வேலை இருக்கும், பரபரவென்று அலுவலகம் ஓடிக்கொண்டிருக்கும். ஆனால் அன்று காலை முழுவதும் வேலையில்லாமல் இருந்தது, பள்ளிக்கூடத்தில் கணக்கு வாத்தியார் வரமால் போனால் கிடைக்கும் ஒரு நிம்மதி உணர்வு தோன்றியது. அதேவேளை பொது மக்கள் பலரும் இந்த தகவல் தொழில்நுட்ப செயலிழப்பால் அவதிப்பட்டதை செய்திகளில் கண்டபோது வருத்தமாகவும் இருந்தது" என்கிறார் அஜய்.
சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்யும் சிவசங்கர் இந்த தகவல் தொழில்நுட்ப செயலிழப்பால் தங்களது நிறுவனத்தின் 20 சதவீத பணிகள் மட்டுமே பாதிக்கப்பட்டதாகக் கூறினார்.
"காரணம் எங்கள் நிறுவனம் பெரும்பாலும் லினக்ஸ் இயங்குதளத்தை சார்ந்து உள்ளது. அதற்கு எந்த பாதிப்பும் இல்லை. அந்த மென்பொருளை இலவசமாக தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். ஆனால் மைக்ரோசாப்ட் விண்டோஸ் போல பயன்படுத்த எளிதாக இருக்காது" என்று கூறுகிறார்.
சைபர்-செக்யூரிட்டி நிறுவனமான கிரவுட்ஸ்ட்ரைக் (Crowdstrike) இந்தச் செயலிழப்புக்குப் பொறுப்பேற்றுள்ளது. மைக்ரோசாஃப்ட் வின்டோஸில் செயல்படும் கணினி உள்ளிட்ட கருவிகளில் வைரஸ் தொற்று ஏற்படுவதைத் தடுக்க உருவாக்கப்பட்ட 'ஃபால்கன் ஆண்டி-வைரஸ்' (Falcon antivirus software) மென்பொருளைப் புதுப்பித்த போது (update) இந்தச் செயலிழப்பு நிகழ்ந்துள்ளது என்கிறது அந்த நிறுவனம்.
"அந்த ஆண்டி-வைரஸ் மென்பொருள் அடிக்கடி தானாகவே புதுப்பிக்கப்படும். கடைசி அப்டேட் (Update) வியாழன் இரவு வந்தது. வெள்ளிக்கிழமை காலை எல்லா கணினிகளிலும் ப்ளூ ஸ்க்ரீன் எரர் தோன்றியவுடன் பிரச்னை புரிந்துவிட்டது. ஏனென்றால் எங்களது கிளையண்ட் ஒரு பிரபலமான வெளிநாட்டு வங்கி, ஒவ்வொரு நிமிடமும் நடக்கும் பல நிதிப் பரிவர்த்தனைகள் இதனால் பாதிக்கப்பட்டன." என்று கூறுகிறார் மென்பொறியாளர் மனோஜ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் மனோஜ், இந்த தகவல் தொழில்நுட்பச் செயலிழப்பால் தங்களது நிறுவனத்திற்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் ஆனால் அதன் முழுமையான விவரங்கள் இனி வரும் வாரங்களில் தான் தெரியவரும் என்றும் கூறினார்.
மைக்ரோசாஃப்ட் விண்டோஸில் கிரவுட்ஸ்ட்ரைக் ஆன்டி-வைரஸ் மென்பொருளை பயன்படுத்தும் வெளிநாட்டு வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் சார்ந்த பணிகளை செய்த ஐ.டி. நிறுவனங்களில் மட்டுமே பாதிப்பு இருந்ததாக அவர் கூறினார்.
படக்குறிப்பு,ஐ.டி. செயலிழப்பின் காரணமாக கிரவுட்ஸ்ட்ரைக்கின் பங்குகள் 21% வரை வீழ்ச்சி அடைந்தன.
தொடர்ந்து பேசிய அவர், "பொதுவாக ஒரு நிறுவனத்தில் 1000 மென்பொருள் பொறியாளர்கள் இருந்தால், அவர்களது கணினிகளை பராமரிப்பதற்கான குழு ஒன்று இருக்கும். ஆனால் அதில் 20 முதல் 25 நபர்கள் மட்டுமே இருப்பார்கள். வெள்ளிக்கிழமை நூற்றுக்கணக்கில் கணினிகள் பழுதானதால் அவர்கள் தான் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டார்கள். ஆனால் ஒரு நல்ல விஷயம் இது வெள்ளிக்கிழமை ஏற்பட்டது தான்.
பெரும்பாலும் சனி மற்றும் ஞாயிறுகளில் வங்கிகள் மற்றும் பங்குச் சந்தைகள் விடுமுறை என்பதால் இதை இந்த இரண்டு நாட்களில் முழுமையாக சரிசெய்ய முயற்சிப்பார்கள். நிச்சயமாக இது மிகப்பெரிய எச்சரிக்கை. பெரும்பாலான முன்னணி நிறுவனங்கள் விண்டோஸை தான் பயன்படுத்துகிறார்கள். எனவே மைக்ரோசாப்ட் நிறுவனம் இது போல மீண்டும் நடக்காதவாறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" என்று கூறினார்.
விண்ோஸ் வெளிநாட்டு வங்கிகள்
படக்குறிப்பு,நியூயார்க்கில் உள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவன அலுவலகம்
இதுகுறித்து பேசிய மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா, "அண்மையில் கிரவுட்ஸ்ட்ரைக் வெளியிட்ட அப்டேட் உலக அளவில் தகவல் தொழில்நுட்ப துறையை முடக்கியுள்ளது. இந்த சிக்கலை நாங்கள் அறிவோம். அதோடு இதற்கு தீர்வு காணும் வகையில் பணியாற்றி வருகிறோம்.
வாடிக்கையாளர்களின் ஆன்லைன் இயக்கத்தை மீட்டெடுக்கும் வகையில் கிரவுட்ஸ்ட்ரைக் உடன் மைக்ரோசாப்ட் இயங்கி வருகிறது. இதிலிருந்து மீள வாடிக்கையாளர்களுக்கு வேண்டிய வழிகாட்டு செயல்முறையை வழங்கி வருகிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், "மைக்ரோசாப்டிலோ அல்லது விண்டோஸிலோ எந்தப் பிரச்னையும் இல்லை. ‘கிரவுட்ஸ்ட்ரைக்’ அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்களால் தான் மைக்ரோசாப்ட் மென்பொருளில் குளறுபடி ஏற்பட்டது" என மைக்ரோசாப்ட் நிறுவனம் முன்னர் விளக்கம் அளித்திருந்தது.
வெள்ளிக்கிழமை நடைபெற்றது சைபர் தாக்குதல் அல்ல. இந்தச் செயலிழப்பு தங்களின் தவறால் ஏற்படவில்லை என்பதையும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உடனடியாகச் சுட்டிக்காட்டியது.
வாடிக்கையாளர்கள் மீண்டு வர உதவும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது ஒரு வலைப்பதிவில் "கிரவுட்ஸ்ட்ரைக் அப்டேட் காரணமாக உலகம் முழுவதும் விண்டோஸ் பயன்படுத்தும் 85 லட்சம் கணினிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிட்டுள்ளோம்." என்று குறிப்பிட்டுள்ளது.
நிறுவனத்தின் துணைத் தலைவரான டேவிட் வெஸ்டன், "இந்த எண்ணிக்கை உலகெங்கிலும் உள்ள அனைத்து விண்டோஸ் கணினிகளிலும் 1% க்கும் குறைவுதான். ஆனால். பரந்த அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் சமூக தாக்கங்கள் முக்கிய சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் க்ரவுட்ஸ்ட்ரைக் மென்பொருளை பயன்படுத்துவதைப் பிரதிபலிக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.
Post a Comment
Post a Comment