பொத்துவிலில் இரா.சம்பந்தனுக்கு இரங்கல் அஞ்சலி நிகழ்வும் உலருணவு விநியோகமும்




 


( வி.ரி.சகாதேவராஜா)


பொத்துவிலில் மறைந்த தமிழ்த் தலைவர் இரா.சம்பந்தனுக்கு இரங்கல் அஞ்சலி நிகழ்வும் உலருணவு விநியோகமும் நேற்று 
முன்னாள் பொத்துவில் பிரதேச சபையின் உப தவிசாளர் பெருமாள் பார்த்திபன் தலைமையில் நடைபெற்றது.


முன்னதாக தமிழ் தேசியத்தின் கொள்கைக்காய் குரல் கொடுத்தவரும்  தமிழ் தேசிய கூட்டமைப்பின்  தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் அவர்களின் மறைவிற்கு  அஞ்சலி செலுத்தும் நிகழ்வானது இடம் பெற்றது.
அதன்போது மக்கள் பெருமளவில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இந்நாளில் சுமார் 75 பின்தங்கிய குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி சகிதம் உலருணவுப்பொதியை பார்த்தீபன் வழங்கினார். 
திருமலையில் நடைபெறும் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள ஆதரவாளர்களை அழைத்து செல்லும் தனது சொந்த நிதியை இப்பணிக்காக முன்னாள் தவிசாளர் பெருமாள் பார்த்தீபன் பயன்படுத்தினார்.

இ.த.அ.கட்சி பிரதேச தலைவரும் பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் உபதவிசாளருமான பார்த்தீபனின் இம் முன்மாதிரியான முயற்சியை மக்கள் பாராட்டினார்கள்.
 
இந்நிகழ்வில் குண்டுமடு ஆலையடிப் பிள்ளையார் ஆலய தலைவர் எஸ்.கந்தசாமி 
உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டு இரங்கலுரை நிகழ்த்தினர்.

 பொதுமக்கள்  பலரும்  கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் சம்பந்தன் ஐயாவின் திருவுருவ படத்திற்கு  மலர் அஞ்சலி செலுத்தி மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

ஏற்பாட்டாளர் பார்த்தீபன் தனது இரங்கல் உரையில்
"தமிழ் மக்களின் உரிமைக்காக போராடிய பெருந்தலைவரை அனைவரும் இழந்து நிற்கின்றோம் அதுமட்டுமன்றி அரசியலுக்கு உள்நுழைந்த காலமுதல் தனது 91வயது வரை அகிம்சை வழியில் போராடி இராஜதந்திர நுட்பங்களை கையாண்ட தலைவர் சம்பந்தன் ஐயா என்றும் ஐயாவின் வெற்றிடத்தை இனி எவராலும் ஈடு செய்ய முடியாது என்ற கருத்தையும் தெரிவித்தார்.