"முஸ்லிம்களுக்கு எதிரான அநியாயங்களுக்கு பயந்து ஒடுங்குபவர்களாக இருக்க மாட்டோம்"





 நூருல் ஹுதா உமர்


முஸ்லிம்களின் பெருந்தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப் எனும் சிங்கத்தின் ஆளுமைகளை கண்டு அவரின் பாசறையில் வளர்ந்த நாங்கள் இப்போது நடக்கின்ற சில்லறை அரசியலை பார்த்து, முஸ்லிம்களுக்கு எதிரான அநியாயங்களுக்கு பயந்து ஒடுங்குபவர்களாக இருக்க முடியாது. இருக்கவும் மாட்டோம்.  அப்படியான ஒரு வீர தலைவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை உருவாக்கியது தலைவரின் குடும்பத்திற்கு சொத்து சேர்க்க வேண்டும் அல்லது தலைவரின் மகனை அமைச்சராக்க வேண்டும் என்று அல்ல. அப்படியான கொள்கையில் அவர் வாழவும் இல்லை. இந்த மண்ணில் நாங்கள் அடிமைகளாக எங்களுடைய உயிர்களையும் சொத்துக்களையும் இழந்து, நிம்மதியாக வாழ்வதற்கான பயத்தில் இருந்த போது தான் ஒரு பாதுகாப்பு கேடயமாக முஸ்லிம் காங்கிரஸ் உருவாகியது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், கடந்த காலங்களில் நாட்டின் நாலா பக்கங்களிலும் முஸ்லிம்கள் அடிக்கப்பட்டு, கொல்லப்பட்டுக் கொண்டிருந்த போது அப்போது இருந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் ஆளும் தரப்புக்கு ஆதரவாக ஆட்சியாளர்களின் பங்காளிகளாக மாறி மௌனமாக இருந்தபோது தலைவர் அஷ்ரப் மட்டும் சாதாரணமான சட்டத்தரணியாக இருந்து கொண்டே முஸ்லிம்களுக்காக உரிமைக் குரல் கொடுத்தார். அந்த நாட்களில் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட போது முஸ்லிம்களுக்காக தலைவர் அஷ்ரபின் அர்ப்பணிப்பு மிக்க போராட்டத்தையும், ஆளுமையையும்  தலைவனுடைய அம்மன் கோயில் வீதிக்கு முன்பாக வசித்தவன் என்ற ரீதியில் அவருக்கு பக்கத்தில் இருந்து பார்த்துள்ளேன்.

அவருடைய எண்ணங்களையும், முஸ்லிம் சமூகம் நாட்டில் எவ்வாறு கௌரவமாக வாழ வேண்டும் என்பதையும் அவர் தெளிவாக முன்வைத்துள்ளார். நான் அவரை எட்டு - ஒன்பதாவது வயதிலிருந்து பார்த்து வளர்ந்திருக்கிறேன். அவரை நீங்கள் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக பார்த்திருப்பீர்கள், ஒரு அமைச்சராக பார்த்திருப்பீர்கள், ஒரு தலைவராக பார்த்திருப்பீர்கள். ஆனால் நான் அவரை கண்டது ஒரு நல்ல நியாயவாதியாக. சமூக நீதிக்கு முதன்மையான மகன் ஒரு ஆள் இருப்பாரானால் இந்த நாட்டில் அது தலைவர் அஸ்ரப் தான். அம்பாறை மாவட்டத்தில் அவருடைய குடும்பம் ஒரு செல்வந்த, கல்வி கற்ற குடும்பம். காரியப்பர் குடும்பம் என்பது மிகவும் உயர்ந்த குடும்பமாக கௌரவமாக நோக்கப்பட்டவர்கள். அந்த குடும்பத்தில் ஒரு வாரிசாக அஷ்ரப் அவர்கள் இருந்தாலும் எளிய மக்களின் தோழனாகவே அவர் வாழ்ந்தார்.

தலைவர் அஷ்ரப் அவர்கள் பாராளுமன்றம் நுழைவதற்கு முன்பே சமூகப் பிரச்சினைகளை கங்கணம் கட்டிக்கொண்டு தீர்வு கொடுத்தவர். துறைமுக அமைச்சராக இருந்த அவருக்கு கிட்டத்தட்ட துறைமுக நிலம் தலைவரின் சொந்த இடம் போலவே இருந்தது. ஆனால் தலைவர் அஸ்ரப் அதை வைத்து மற்றவர்களிடம் பணம் கேட்கும் மனப்பான்மை கொண்டிருக்கவில்லை. 10 சதமேனும் தனக்காக பெறாத நமது தலைவரை பற்றி ஏனைய நாடுகளின் தொழிலதிபர்கள் பேசி கேட்டிருக்கிறோம். சுத்தமான பொதுநல அரசியலையே முன்னெடுத்தார். பல  ஆயிரம் கோடி ரூபாய் பெறுமதியான துறைமுகத்தை உருவாக்கினார். பல தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்திருக்கிறார். இப்படியான தலைவரின் பாசறையில் பயின்ற நாங்கள் மக்களின் பிரச்சினைகளுக்கு எதை இழந்தேனும் தீர்வை பெற்றுக் கொடுப்போம். உரிமைகளை யாருக்கும் விட்டுக்கொடுக்க தலைவர் அஸ்ரப் எங்களை பயிற்றுவிக்க வில்லை என்றார்