சாவகச்சேரி வைத்தியசாலையை முற்றுகையிட்ட பொது மக்கள்!





 -யாழ். நிருபர் பிரதீபன்-

சாவகச்சேரி வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகரை அங்கிருந்து அகற்றுவதற்கான முயற்சி எடுக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று இரவு பொதுமக்கள் வைத்தியசாலையை முற்றுகையிட்டுள்ளனர்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பதில் வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றும் இராமநாதன் அர்ச்சுனாவை அங்கிருந்து இடமாற்றம் செய்ய உத்தரவிடும் சுகாதார அமைச்சகத்தின் கடிதம் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் சமன் பத்திரண நேற்று இரவு குறித்த கடிதத்தை பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவிடம் வழங்க முற்பட்டபோது, அதனை ஏற்க மறுத்துள்ள வைத்திய அத்தியட்சகர், இது அலுவலக நேரம் அல்ல என தெரிவித்துள்ளார்.

இதேவேளை வைத்தியசாலை பதில் அத்தியட்சகரை கைது செய்யும் வகையில் வைத்தியசாலையில் சாவகச்சேரி பொலிஸார் குவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை தான் மட்டுமே வைத்தியசாலையில் கடமையில் நிற்பதால் தன்னை கைது செய்து அழைத்துச் சென்றால், அந்த சமயத்தில் வைத்தியசாலையில் எதாவது உயிரிழப்பு ஏற்பட்டால் தானே பொறுப்பு என பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வளாகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

இன்றைய தினம், சாவகச்சேரி வைத்தியசாலை முன்பாக பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் போராட்டம் நடைபெறவுள்ள நிலையில், இரவோடு இரவாக வைத்திய அத்தியட்சகரை அங்கிருந்து அகற்றுவதற்கான முயற்சி எடுக்கப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்னர் குறித்த விடயம் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, வட மாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலை வைத்தியர்கள் இன்று ஒரு நாள் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சாவச்சேரி ஆதார வைத்தியசாலையில் புதிதாக  தற்காலிகமாக நியமிக்கப்பட்ட வைத்திய அத்திட்சகாரினால் அங்கு கடமையாற்றும் வைத்தியர்களின்  பாதுகாப்பிற்கு ஏற்படுத்தப்பட்ட  அச்சுறுத்தலுக்கு எதிராகவும், அவருடைய தாபன விதி கோவைகளுக்கு எதிரான நடைமுறைகளுக்கு எதிராகவும், அவரின் அப்பட்டமான விதிமுறை மீறல்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க தவறியமைக்காகவும், பாதிக்கப்பட்டுள்ள  வைத்தியசாலை வைத்தியர்களுக்கு சார்பாகவும் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இன்று காலை (08) 8.00 மணியிலிருந்து நாளை காலை 8:00 மணி வரை வைத்தியர்கள்  உயிர் காக்கும் அவசர சிகிச்சைகளில் மாத்திரமே ஈடுபடுவர்கள் என  அரசவைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.



-யாழ். நிருபர் பிரதீபன்-