விளையாட்டு கழகங்களின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு !





மாளிகைக்காடு செய்தியாளர்   

நாவிதன்வெளி பிராந்தியத்தில் ஒழுக்கமுள்ள நற்பிரஜைகளை உருவாக்குவதில் முதன்மையான கழகங்களாக இருந்து பிரதேச விளையாட்டு மேம்பாட்டுக்கு கணிசமான பங்களிப்பை வழங்கி வரும் விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களைக் கொள்வனவு செய்து கழகத்தினை வளர்ச்சி அடையச் செய்ய திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் முயற்சியால் ஜனாதிபதியின் விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலம் விளையாட்டு கழகங்களின் வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டு கடிதங்கள் இன்று நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் வைத்து கழக நிர்வாகிகளிடம் கையளிக்கப்பட்டது.

அண்மைக்காலமாக எமது நாட்டில் நிலவிவரும் கடின பொருளாதார சூழ்நிலையின் காரணமாக விளையாட்டு கழகங்கள் எதிர்நோக்கிவரும் சிக்கல் நிலையை நிவர்த்திக்கும் விதத்தில் ஜனாதிபதி அவர்களிடம் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் முன்வைத்த வேண்டுகோளுக்கிணங்க இந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாவிதன்வெளி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. தி. கிருபைராஜா தலைமையில் நடைபெற்ற இந்த ஆவணங்களை கையளிக்கும் நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆவணங்களை கையளித்தார். இந்நிகழ்வில் மேலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், பிரதேச அமைப்பாளருமான ஏ.சி.ஏ. நஸார் ஹாஜி, நாவிதன்வெளி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் எம்.பி நவாஸ், பாராளுமன்ற உறுப்பினரின் மக்கள் தொடர்பாடல் செயலாளர் நூருல் ஹுதா உமர், பாராளுமன்ற உறுப்பினரின் நாவிதன்வெளி பிரதேச இணைப்பாளர் எம். நெளபர், பாராளுமன்ற உறுப்பினரின் விளையாட்டு கழகங்களுக்கான இணைப்பாளர் ஏ.எம் நளீம் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், விளையாட்டு கழகங்களின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.