டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு – நேரில் கண்டவர்கள் கூறுவது என்ன?





பென்சில்வேனியாவில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மேடையில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் முகம் சுளித்தபடி, அவரது வலதுபுற காதில் கை வைத்திருப்பதை சம்பவத்தின் காணொளிக் காட்சிகள் காட்டுகின்றன. டிரம்பின் இந்த பொதுக்கூட்டத்தின் போது பலமுறை துப்பாக்கிச் சத்தம் கேட்டுள்ளது.

டிரம்ப் தரப்பிலிருந்து அவர் நலமாக உள்ளதாகவும் உள்ளூர் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டவுடனே அவர் விரைவில் அமெரிக்க ரகசிய சேவை ஏஜென்டுகளால் சூழப்பட்டார். அங்கிருந்து உடனடியாக அவருக்காகக் காத்திருந்த வாகனத்திற்கு விரைந்து கொண்டு செல்லப்பட்டார். காரில் ஏற்றப்பட்டபோது அவர் தனது முஷ்டியை வெளியே உயர்த்திக் காட்டினார்.

அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு – நேரில் கண்டவர்கள் கூறுவது என்ன?பட மூலாதாரம்,GETTY IMAGES
டிரம்ப் உடல்நிலை எப்படி இருக்கிறது?
டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் என்ற சமூக ஊடக தளத்தில் இட்டிருந்த பதிவில், தனது வலது காதின் மேல் பகுதியில் தோட்டா ஒன்று துளைத்துச் சென்றதாகக் கூறியுள்ளார். அதற்கு முன்னதாக அவரது செய்தித் தொடர்பாளர், டிரம்ப் “நலமாக இருப்பதாகவும்” உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார்.

“ஏதோ தவறு இருப்பதாக நான் உடனடியாக அறிந்தேன். அப்போது உச்ச ஸ்துதியில் விசில் போன்ற சத்தமும் துப்பாக்கிச்சூடு சத்தமும் கேட்டது. இதைத்தொடர்ந்து உடனடியாக தோட்டா ஒன்று என் தோலைக் கிழித்துச் சென்றதை உணர்ந்தேன்,” என்று டிரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “ரத்தப்போக்கு அதிகமாவதைக் கண்டவுடன், என்ன நடக்கிறது என்பதை உணர்ந்துவிட்டேன்,” என்றும் எழுதியுள்ளார்.

பாதுகாப்பு அதிகாரிகள் டிரம்பை சூழ்ந்து அழைத்துச் செல்லும்போது அவரது காது மற்றும் முகத்தில் வடிந்திருந்த ரத்தம் தெளிவாகத் தெரிந்தது.

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் சம்பவ இடத்திலேயே அமெரிக்க ரகசிய சேவை ஏஜென்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அந்தோணி குக்லீல்மி தெரிவித்துள்ளார். அதோடு, “துப்பாக்கிச் சூட்டில் பொதுக்கூட்டத்தில் பங்கெடுத்த பார்வையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாகவும்” அவர் குறிப்பிட்டார்.

படுகாயமடைந்த இருவரின் உடல்நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள ஆல்லிஜெனி பொது மருத்துவமனையின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சட்ட அமலாக்க வட்டாரங்கள் பிபிசியின் அமெரிக்க தொழில் கூட்டாளியான சிபிஎஸ் நியூஸிடம், “இந்தத் தாக்குதலை நடத்திய ஆண் துப்பாக்கி ஏந்தியிருந்ததாகவும், மைதானத்திற்கு வெளியே சில நூறு மீட்டர் தொலைவிலுள்ள உயரமான அமைப்பிலிருந்து சுட்டதாகவும்” கூறியுள்ளனர். அதோடு, இந்தத் தாக்குதல் ஒரு படுகொலை முயற்சியாகவே கருதப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

டிரம்ப் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவரது பாதுகாப்பிற்கான நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு உள்ளதாகவும், இந்தச் சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் டிரம்பின் செய்தித் தொடர்பாளர் குக்லீல்மி கூறினார்.

அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு – நேரில் கண்டவர்கள் கூறுவது என்ன?
துப்பாக்கிச்சூடு எப்படி நடந்தது?
நவம்பர் மாதம் நடக்கவிருக்கும் அமெரிக்க அதிபருக்கான தேர்தலில், வெற்றியைத் தீர்மானிக்கும் மாகாணங்களில் ஒன்றான பென்சில்வேனியாவில் அமைந்திருக்கும் பட்லர் என்ற பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரான டிரம்ப் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றத் தொடங்கிய சில நிமிடங்களுக்கு உள்ளாகவே இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்தது.

சம்பவத்தை நேரில் கண்டவர்கள் பிபிசியிடம் பேசியபோது, டிரம்ப் பேசிய மேடையின் வலதுபுறத்தில் உள்ள ஒரு கட்டடத்தின் மாடியிலிருந்து துப்பாக்கிக் குண்டுகள் வந்திருக்கலாம் எனத் தெரிவித்தனர்.

சம்பவத்தை நேரில் கண்ட கிரெக், டிரம்ப் மேடையில் ஏறுவதற்கு சுமார் ஐந்து நிமிடங்களுக்கு முன்பு கட்டடத்தின் கூரையில் சந்தேகத்திற்கிடமான தோற்றத்தில் ஒரு நபர் “கரடி போல் தவழ்ந்து சென்றதை” கண்டதாக பிபிசியிடம் கூறினார். அந்த நபரை காவல்துறையிடம் சுட்டிக் காட்டியதாகவும் அவர் தெரிவித்தார்.

“அந்த நபரின் கையில் துப்பாக்கி இருந்தது. அவர் துப்பாக்கியுடன் இருப்பதை எங்களால் தெளிவாகக் காண முடிந்தது. அதை நாங்கள் சுட்டிக்காட்டியபோது போலீசார் அங்குமிங்கும் ஓடத் தொடங்கினார்கள். அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பது புரியவில்லை,” என்று கிரெக் கூறினார்.

இதை நேரில் கண்ட மற்றொரு நபரான ஜேசன், பிபிசியிடம் ஐந்து முறை துப்பாக்கிச்சூடு சத்தத்தைக் கேட்டதாகக் கூறினார்.

“டிரம்பை பாதுகாக்க ரகசிய சேவை ஏஜென்டுகள் மேடையில் குதிப்பதை நாங்கள் கண்டோம். கூட்டத்தில் இருந்த அனைவரும் மிக வேகமாகக் கீழே இறங்கினார்கள். சில நிமிடங்களுக்குப் பிறகு டிரம்ப் எழுந்து நின்று தனது முஷ்டியை மேலே தூக்கிக் காட்டினார்,” என்றார் அவர். மேலும் அங்கு தோட்டா சத்தம் கேட்டதும் குழப்பம் நிலவியதால் அனைவரும் தரையில் படுக்கத் தொடங்கியதாகவும் ஜேசன் தெரிவித்தார்.

பொதுக்கூட்டத்தில் இருந்த டிம் என்பவர் பேசியபோது, சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் சத்தத்தைக் கேட்டதாக கூறுகிறார்.

"அதிபர் டிரம்ப் கீழே விழுந்ததைத் பார்த்தோம். என்ன செய்வதென்று யாருக்கும் புரியாததால் உடனே எல்லோரும் தரையில் படுக்கத் தொடங்கினார்கள்." என்றார் டிம்.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்த வாரன் மற்றும் டெபி, குறைந்தது நான்கு முறை துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக பிபிசியிடம் கூறினார்கள். சத்தம் கேட்டவுடன் தரையில் படுத்துவிட்டதாகவும், கூட்டத்தினூடாக மேடைக்கு வந்த ரகசிய சேவை ஏஜென்டுகள், மேடையில் இருந்தவர்களை கீழே இறங்குமாறு கூச்சலிட்டனர் என்றும் கூறினார்.

அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு – நேரில் கண்டவர்கள் கூறுவது என்ன?பட மூலாதாரம்,GETTY IMAGES
அதிபர் ஜோ பைடன் கூறியது என்ன?
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டிரம்ப் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறார் என்பதை அறிந்து நிம்மதி அடைந்ததாக” தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்காவில் இதுபோன்ற வன்முறைக்கு இடமில்லை என்று தெரிவித்த பைடன், “நாம் ஒரு தேசமாக ஒற்றுமையாக இருக்க வேண்டும். இந்தச் சம்பவத்தை நாம் கண்டிக்க வேண்டும்,” என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், டொனால்ட் டிரம்புடன் அதிபர் ஜோ பைடன் பேசியதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆனால், இருவரும் என்ன பேசினார்கள் என்பதை வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவிக்கவில்லை.

ஜோ பைடன் பென்சில்வேனியா ஆளுநர் ஜோஷ் ஷாபிரோ, பட்லர் நகரத்தின் மேயர் பாப் டாண்டோய் ஆகியோருடனும் பேசியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.