பாலத்தீன இளைஞர்களை ஜீப்பின் முன்புறம் கட்டிவைத்து ஓட்டிச் சென்ற இஸ்ரேலிய ராணுவத்தினர்




 


கடந்த வாரம் ஆக்கிரமிப்பு மேற்கு கரையில் நடைபெற்ற ராணுவ தாக்குதலுக்கு ஆளான மேலும் இரண்டு பாலத்தீனியர்கள், இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் அவர்களை வற்புறுத்தி, ஜீப்பின் முன்புறம் ஏற்றிக் கொண்டு மிகவும் வேகமாக, கிராமப்புற சாலைகளில், ஓட்டிச் சென்றதாக பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.


23 வயதான இளைஞரை இஸ்ரேல் ராணுவ ஜீப்பின் முன் பகுதியில் படுக்க வைத்து விரைவாக ஓட்டிச் சென்ற வீடியோ வைரலான சூழலில் இந்த இரண்டு பாலத்தீனியர்கள் தங்களின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.


கடந்த சனிக்கிழமையன்று, ஜெனின் புறநகர் பகுதியான ஜபாரியத்தில் நடைபெற்ற ராணுவ நடவடிக்கையில் இதே போன்று பாதிக்கப்பட்டதாக கூறும் இந்த இரண்டு பாலஸ்தீனியர்களிடம் பிபிசி உரையாடியுள்ளது.


ஜபாரியத் தாக்குதலின் போது, இஸ்ரேல் ராணுவ வீரர்களால் முதுகில் சுடப்பட்டு, தரையில், சில மணி நேரம் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியதாக குறிப்பிடுகிறார் சமீர் தபாயா. 25 வயது மதிக்கத்தக்க சமீர் தற்போது ஜெனினில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


ரத்த வெள்ளத்தில் கிடந்த தாம் உயிருடன் இருப்பதை உணர்ந்த ராணுவத்தினர், ஜீப்பின் முன் பகுதியில் தூக்கிப் போடும் முன், துப்பாக்கி கொண்டு தாக்கியதாக குறிப்பிடுகிறார் ஜமீர்.


"என்னை அவர்கள் அரை நிர்வாணப்படுத்தினார்கள். நான் ஜீப்பை பிடித்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன். ஆனால் அவ்வாறாக செய்யக் கூடாது என்று கூறி ராணுவ வீரர் ஒருவர் என் முகத்தில் தாக்கினார். பின்பு, அவர்கள் ஜீப்பை வேகமாக இயக்கினார்கள்," என்று கூறிய ஜமீர் தன்னுடைய மரணத்திற்காக அன்று காத்திருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.


வாட்ஸ்ஆப்

பாதுகாப்பு கேமராவில் பதிவான, மிகவும் வேகமாக இயக்கப்படும் ஜீப் ஒன்றின் முன்பகுதியில் அரை நிர்வாணமாக அவர் படுத்திருக்கும் காட்சி அடங்கிய வீடியோ ஒன்றை ஜமீர் நம்மிடம் காட்டினார்.


வீடியோவில் இடம் பெற்றிருக்கும் இடம், ராணுவ நடவடிக்கை நடைபெற்ற இடத்தோடு பொருந்திப்போகிறது. எனினும், அந்த வீடியோவில், நாள், நேரம் போன்றவை ஏதும் இல்லை.


இதே போன்ற தாக்குதலுக்கு ஆளான மற்றொரு பாலத்தீனியரான ஹேஷம் இஸ்லெய்ட், இஸ்ரேல் ராணுவத்தினர் தம்மீது இரு முறை துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறுகிறார். ஜபாரியத்தில் நடைபெற்ற ராணுவ நடவடிக்கையில் பாதிக்கப்பட்ட அவரையும் ஜீப்பின் முன் பகுதியில் கிடத்தி ராணுவ வீரர்கள் அதனை வேகமாக இயக்கியதாக கூறினார் ஹேஷம்.


"அனைத்து பக்கத்தில் இருந்தும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது," என்று குறிப்பிட்ட அவர், அந்த இடத்தில் இருந்து தப்பிக்க முயன்ற போது ராணுவத்தினர் அவரை காலில் சுட்டதாக கூறினார். அதன் பிறகு ராணுவத்தினர் அவரையும் மற்றொரு நபரையும் அழைத்துக் கொண்டு சென்றது என குறிப்பிட்டார்.


"எங்களை நிற்க வைத்து, நிர்வாணப்படுத்தி, ஜீப்பின் முன் பகுதியில் ஏற வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள்," என்றார் ஹேஷம்.


அந்த ஜீப் மிகவும் சூடாக இருந்தது. நெருப்பில் இருப்பதைப் போல் உணர்ந்தேன் என்று கூறிய ஹேஷம் அதன் பின் நடந்த நிகழ்வுகளை விவரித்தார்.


"ஆடைகள் ஏதுமின்றி, வெறுங்காலில் நின்றிருந்தேன். என்னுடைய கையை ஜீப்பின் மீது வைத்தபோது அது மிகவும் சூடாக இருந்தது. அதை நான் அவர்களிடம் கூறிய போது, நான் சாக வேண்டாம் என்று நினைத்தால் அதில் ஏற வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள்," என்றார் ஹேஷம்.


அமெரிக்க அதிபர் தேர்தல்: நேருக்கு நேர் மோதிய பைடன் - டிரம்ப் - விவாதத்தில் என்ன பேசினர்?

28 ஜூன் 2024

லெஸ்டர்: இந்தியர்கள் அதிகம் வாழும் இந்த பிரிட்டன் நகரில் இந்து-முஸ்லிம் மக்களிடையே இருக்கும் ஆறாத வடு

1 ஜூலை 2024

ஜெனின்

படக்குறிப்பு,ஜெனின் முகாமைச் சுற்றியுள்ள சாலைகளின் கீழ் புதைக்கப்பட்ட வெடிகுண்டுகள், இந்த வார ராணுவ நடவடிக்கையின் போது வெடித்துச் சிதறியது.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து இஸ்ரேல் ராணுவத்திடம் கேட்ட போது, அவை பரிசீலனையில் உள்ளதாக குறிப்பிட்டனர்.


முஜாஹித் அபாதி பாலஸின் வீடியோ குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு பதில் கூறிய இஸ்ரேல் ராணுவம், முஜாஹித் அந்த ஜீப்பில் கட்டப்பட்டிருப்பது 'உத்தரவு மற்றும் நடைமுறைகளுக்கு எதிரானது' என்று குறிப்பிட்டது. மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் பதில் அளித்தது இஸ்ரேல் ராணுவம்.


அந்த வீடியோவில் இருக்கும் ராணுவ வீரர்களின் செயல்பாடுகள் ஐ.டி.எஃப்.- ன் மதிப்புகளுக்கு எதிராக உள்ளது என்றும் எழுத்துப்பூர்வமான பதிலில் குறிப்பிட்டிருந்தது ராணுவம்.


மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முஜாஹித், அந்த தாக்குதலில் இருந்து பிழைப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை என்று பிபிசியிடம் கூறினார். வேகமாக ஓடும் ஜீப்பின் முன்னால் கட்டப்பட்ட நிலையில் இருந்த அவர் தன்னுடைய இறுதி பிரார்த்தனைகளை கூறியதாக குறிப்பிடுகிறார்.


அவரின் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில், இஸ்ரேல் ராணுவ வீரர்கள் அவரை ஜீப்பில் தூக்கி எறியும் காட்சி அடங்கிய ஒரு வீடியோவை பிபிசிக்கு காட்டினார் முஜாஹித்.


அவர்கள் என்னிடம் ஆயுதம் ஏதும் இல்லை என்பதை உறுதி செய்த பிறகு, என்னுடைய முகம், தலை மற்றும் காயம்பட்ட இடங்களில் தாக்கினார்கள். என் கால் மற்றும் கைகளை பிடித்து, இடப்புறம் வலப்புறமாக ஆட்டி கீழே வீசினார்கள். கீழே விழுந்த அவரை மீண்டும் தூக்கி, இவ்வாறாக ஆட்டி கீழே தூக்கிப் போட்ட பின்பு ஜீப்பின் முன்னே வைத்து, ஒரு வீட்டிற்கு, வேகமாக ஓட்டிச் சென்றனர் என்றார் முஜாஹித்.


குற்றவாளிகளை பிடிக்க கடந்த வாரம் ஜபாரியத் சென்றதாக கூறும் இஸ்ரேல் ராணுவம், அங்கு தீவிரவாதிகளின் தாக்குதல்களுக்கு பதில் தாக்குதல் நடத்தியதாக கூறியது.


இந்தியாவுக்கு வங்கதேசம் வழியாக புதிய ரயில் போக்குவரத்து வசதி - எப்படி செயல்படும்? பலன் யாருக்கு?

27 ஜூன் 2024

பொலிவியா: ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சி முறியடிப்பு, சதி செய்த ராணுவத் தலைவர் கைது

27 ஜூன் 2024

ஹேஷம்

படக்குறிப்பு,தன்னை துப்பாக்கியால் சுட்டு பின்னர் ஜீப்பின் முன்னால் கட்டியதாகக் கூறுகிறார் ஹேஷம்.

ஹேஷமும் முஜாஹிதும் ஹேஷமின் நண்பரும், பக்கத்து வீட்டுக்காரருமான மஜித் அல்-அஸ்மிக்கு சொந்தமான வீட்டில் தங்கியிருந்ததாக கூறுகின்றனர் அவர்கள். கடந்த வாரம் நடைபெற்ற ராணுவ நடவடிக்கையின் போது மஜீத் கைது செய்யப்பட்டு இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளார்.


பாதிக்கப்பட்ட மூன்று நபர்களிடமும் ஆயுதங்கள் ஏதும் இல்லை என்றும், சோதனைக்குப் பிறகு ராணுவத்தினர் அவர்களை விடுவித்தனர் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.


இஸ்ரேல் மனித உரிமைகள் அமைப்பான பெத்சேலம் (Btselem) இந்த வழக்குகளை பின் தொடர்ந்து வருகிறது.


அதன் செய்தித்தொடர்பாளர், ஷாய் பர்னேஸ் இது குறித்து பேசும் போது, அக்டோபர் 7 ஹமாஸ் தாக்குதலுக்கு பிறகு, மேற்கு கரையில் இருக்கும் பாலத்தீனியர்கள் மீது இஸ்ரேல் ராணுவத்தினர் மற்றும் குடியேறிகள் நடத்தும் வன்முறைகள் புதிய அளவை எட்டியுள்ளது என்று குறிப்பிட்டார்.


இந்த வன்முறைகள் தீவிரமானவை, கொடூரமானவை, மிகவும் மோசமானவை என்று கூறிய அவர், "அக்டோபர் 7ம் தேதிக்குப் பிறகு, 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 500க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் பாலஸ்தீனிய நகரங்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன" என்றும் குறிப்பிட்டார்.


ஜெனின்பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அக்டோபர் 7ம் தேதிக்குப் பிறகு இஸ்ரேல் ராணுவத்தினரின் தொடர் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளது ஜெனின் நகர்

அக்டோபர் 7ம் தேதிக்குப் பிறகு இஸ்ரேல் ராணுவத்தினரின் தொடர் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளது ஜெனின் நகர். குடிமக்கள் மற்றும் கலக அமைப்புகளை சேர்ந்தவர்கள் என 120க்கும் மேற்பட்டோர் இஸ்ரேல் ராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளனர்.


ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் அமைப்புகளின் ஆதரவுகளை பெற்ற கலகக்காரர்கள் உள்ள ஜெனின் முகாமில் ஆயுதமேந்திய ராணுவத்தினர் தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கே வாழும் மக்கள், போர் முடிவுக்கு வருவதற்கான ஒரு சமிக்ஞையும் இல்லை என்று வருத்தம் தெரிவிக்கின்றனர்.


"எதிர்ப்பு மனதில் விதைக்கப்பட்டுள்ளது என்பது ராணுவத்தினருக்கு தெரியவில்லை. இந்த போர் முடிவுக்கு வராது. ஒருவர் கொல்லப்பட்டால் அவரின் இடத்தை ஐந்து பேர் நிரப்புவார்கள்" என்று ஜெனினை சேர்ந்த பாலஸ்தீனியர் ஒருவர் கூறினார்.


ஜெனின் முகாமைச் சுற்றியுள்ள சாலைகளின் கீழ் புதைக்கப்பட்ட வெடிகுண்டுகள், இந்த வார ராணுவ நடவடிக்கையின் போது வெடித்துச் சிதறியது. அதில் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்த நிலையில் 16 பேர் காயம் அடைந்தனர்.


இந்தச் சண்டைகள் காஸா போருக்கு முன்பே துவங்கி விட்டன. போர் ஏற்பட்ட பிறகு அதன் உத்திகள் மட்டுமே மாறத் துவங்கியுள்ளன.


காஸாவோடு ஒப்பிடும் போது இது மிகவும் வேறுபட்ட பிராந்தியம். ஆனால் பரந்துபட்ட போரில் ஒரே எதிரிகள்தான்.


(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)