இலங்கை தேர்தல் தேதி அறிவிப்பு




 


பல்வேறு குழப்பங்களுக்கிடையே இலங்கையின் 2024-ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் தேதி இன்று (வெள்ளி, ஜூலை 26) அறிவிக்கப்பட்டுள்ளது.


ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21-ஆம் தேதி நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல் தொடர்பில் வெளியிட்டுள்ள விசேஷ வர்த்தமானியில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன், ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி ஏற்றுக் கொள்ளப்படும் என தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், தமிழர் பொது வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


தமிழ் ஜனாதிபதி பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது குறித்து தமிழ் தரப்பிற்கு இடையிலேயே மாறுப்பட்ட கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.


இந்த நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதை முன்னிலைப்படுத்தி, தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்களுக்கு இடையில் உடன்படிக்கையொன்று ஜூலை 22-ஆம் தேதி கைச்சாத்திடப்பட்டது.


மொத்தம் 9 புரிந்துணவர்களை ஏற்றுக்கொண்ட தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்கள், யாழ்ப்பாணத்தில் இந்த உடன்படிக்கையில் நேற்று கைச்சாத்திட்டிருந்தனர்.


தமிழ்த் தேசிய கட்சிகள், தமிழ் மக்கள் பொதுச்சபை ஆகியன இணைந்து இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொண்டன.


இந்த உடன்படிக்கையில், தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிழ் மக்கள் கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) தமிழ் தேசிய கட்சி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) தமிழ் தேசிய பசுமை இயக்கம் மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகள் கைச்சாத்திட்டுள்ளனர்.


இலங்கையின் முக்கிய தமிழ் கட்சிகளான இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடவில்லை.


அமெரிக்காவின் ரகசிய ராணுவ தளத்தில் சிக்கிக் கொண்ட இலங்கைத் தமிழர்கள் - என்ன நடக்கிறது?


முதல் தடவையாக தமிழ் ஜனாதிபதி பொது வேட்பாளர்

இலங்கையில் 1978-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் பிரகாரம், கொண்டு வரப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகளை தெரிவு செய்வதற்காக இதுவரை 8 தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன.


இதன்படி, நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான முதலாவது தேர்தல் 1982-ஆம் ஆண்டு நடைபெற்றதுடன், இந்த தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் ஜி.ஜி.பொன்னம்பலம் போட்டியிட்டிருந்தார்.


1982-ஆம் ஆண்டுக்கு பின்னர் 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலேயே தமிழ் வேட்பாளர் ஒருவர் களமிறங்கியிருந்தார்.


இதன்படி, சுயேட்சை வேட்பாளராக எம்.கே.சிவாஜிலிங்கம் 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டிருந்தார்.


அதன்பின்னர், 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சுந்தரம் மகேந்திரன் போட்டியிட்டதுடன், இறுதியாக 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் சுப்ரமணியம் குணரத்னம் ஆகியோர் போட்டியிட்டிருந்தனர்.


இலங்கையில் இதற்கு முன்னர் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் தமிழ் வேட்பாளர்கள் சுயேட்சையாக களமிறங்கியிருந்த நிலையில், பொது வேட்பாளராக இன்று வரை எவரும் களமிறக்கப்படவில்லை.


இந்த நிலையில், 2024-ஆம் ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும், அந்த பொது வேட்பாளர் யார் என்பது குறித்து இதுவரை தகவல் வெளியிடப்படவில்லை.

இலங்கையில் தமிழ் ஜனாதிபதி பொது வேட்பாளரை தென்னிலங்கை தமிழ் கட்சிகள் நிராகரிக்க காரணம் என்ன?

தமிழ் பொது வேட்பாளருக்கு தெற்கில் ஆதரவு உண்டா?

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகளின் முயற்சியிலேயே தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுகின்ற நிலையில், தென் பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்க முன்வரவில்லை.


இலங்கையில் தமிழர் ஒருவர் ஜனாதிபதியாவதற்கான சாத்தியம் இல்லை என்ற நிலையில், வெற்றி பெறும் வேட்பாளருக்கு ஆதரவு வழங்கி, மக்களுக்கான உரிமையை வென்றெடுப்பதே காலத்திற்கு பொறுத்தமானது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் பிபிசி தமிழுக்கு குறிப்பிட்டார்.


''என்னுடைய தனிப்பட்டக் கருத்து, ஒரு தமிழர் வேட்பாளர் ஜனாதிபதியாவது என்றால், முதலில் வேட்பாளரை நாங்களே நிறுத்த வேண்டும். ஆனாலும், இலங்கையில் தமிழ் ஒருவர் ஜனாதிபதியாவதற்கான சாத்தியகூறு இல்லை என்கின்ற பட்சத்தில் அடுத்த கட்டமாக யார் ஜனாதிபதியாக போகின்றார்களோ அவர்களுக்கு ஆதரவு வழங்கி, எமது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பது தான் காலத்திற்கு பொறுத்தமானது என நான் நம்புகின்றேன்,” என்றார்.


"எனினும், கட்சியின் நிலைப்பாடு என்று பார்க்கும் போது, நான் கட்சியின் தலைவராக இருந்தாலும், கட்சியின் தேசிய சபையில் எடுக்கும் முடிவை மாத்திரமே அறிவிக்க முடியும். தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் கட்சியின் தேசிய சபை இதுவரை முடிவெடுக்கவில்லை," என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவிக்கின்றார்.



தென்னிலங்கை தமிழ் கட்சிகளின் நிலைப்பாடு என்ன?

இந்திய வம்சாவளித் தமிழர்களிடம், தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தில் உடன்பாடு கிடையாது என ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் தெரிவிக்கின்றார்.


''தமிழ் பொது வேட்பாளர் விஷயத்தில் மூன்று விஷயங்கள் காணப்படுகின்றன. இந்திய வம்சாவளித் தமிழர்களுக்குத் தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் உடன்பாடு வராது. வடக்கு, கிழக்கு மக்களுக்கும் பெரும்பாலும் அந்த விடயத்தில் உடன்பாடு இல்லை. சிங்கள வேட்பாளருடன் தான் போக வேண்டும்,” என்றார்.


"தென்னிலங்கையிலுள்ள அனைத்து தமிழ் கட்சிகளும் அந்த நிலைப்பாட்டிலேயே இருக்கின்றன. தமிழ்ப் பொது வேட்பாளர் களமிறங்குவதை நாம் பிழை எனச் சொல்லவில்லை. ஜனநாயக ரீதியில் யார் வேண்டுமானாலும் போட்டியிட் முடியும். தமிழ் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதன் ஊடாக, தமது பேரம் பேசும் சக்தியை தமிழர்கள் இழக்கின்றார்கள். அதைவிட சிங்கள வேட்பாளர்களிடம் சென்று பேரம் பேசி எதையாவது சாதித்தால் அது நல்லது என நினைக்கின்றேன்," என ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் தெரிவிக்கின்றார்.


இந்த நிலையில், தென்னிலங்கையிலுள்ள தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பாலான தமிழ் அரசியல்வாதிகள் தமிழ்ப் பொது வேட்பாளரை நிராகரிக்கின்றமை காண முடிகின்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மாத்திரமே தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரத்தில் அதிக கவனம் செலுத்திவருகின்றன.


ஆனால், இலங்கையில் சிங்களர்கள் பெரும்பான்மையாக இருப்பதால், தமிழர் ஒருவர் ஜனதிபதியாக தெரிவாவத்றகான சாத்தியம் மிகமிகக் குறைவு என மலையகத் தமிழ்க் கட்சியினர் கருதுகின்றனர்.