புறாமலை தீவுக்கு சென்ற உள்ளூர் பயணிகள் மீது தாக்குதல் தொடுத்தவர்களுக்கு, விளக்கமறியல்




 


திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறாமலை தீவுக்கு சென்ற உள்ளூர் பயணிகள் மீது தாக்குதல் நடத்திய படகு சேவை உரிமையாளர்கள் மூவரை கைது செய்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

 

கொழும்பு, தெஹிவளை பகுதியிலிருந்து புறா தீவுக்கு சுற்றுலா செல்லவிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்திய படகு உரிமையாளர்கள் மூவரையே இவ்வாறு பொலிஸார் தெரிவித்தனர்.

 

குறித்த தாக்குதலில் சுற்றுலாப் பயணி ஒருவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அவர் நிலாவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

இச்சம்பவம் கடந்த 27ஆம் திகதி சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதுடன் இது தொடர்பான நடவடிக்கையை 28ஆம் திகதி எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கைது செய்யப்பட்டவர்களை 29ஆம் திகதி திங்கட்கிழமை காலை திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதாகவும் ஆஜர்படுத்தியவர்களில் ஒருவர் கடுமையான இருதய நோயாளி என தெரிவித்து அவருக்கு சரீரப் பிணை வழங்கப்பட்டுள்ளதுடன் மற்றும் இருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

 

(ஹஸ்பர் - கிண்ணியா செய்தியாளர்)