தமிழ் பேசும் மக்களின் தலைமகனின் இழப்பு பேரிழப்பாகும்




 


நூருல் ஹுதா உமர்

இலங்கை அரசியலில் இருந்த மூத்த சிறுபான்மை தலைவர் இரா. சம்பந்தன் ஐயா அவர்கள் காலமான செய்தி அறிந்து மிகவும் கவலை அடைந்தேன். தமிழ் மக்களின் ஆணிவேராக நோக்கப்படும் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் சட்டத்தரணி இரா. சம்பந்தன் அவர்கள் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானதாக அறிந்து மிகவும் கவலை அடைந்தேன் என ஸ்ரீ ல மு கா பிரதித் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் விடுத்துள்ள அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவரது அனுதாப செய்தியில் மேலும், சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினரான அவர் கடந்த 2015 செப்டம்பர் 3 முதல் 2018 டிசம்பர் 18 வரை இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்த அவர் தமிழர்களின் உரிமைகளுக்காக ஜனநாயக ரீதியாக போராடிய மூத்த தலைவராக நோக்கப்படுகிறார். எனது சமூகம் சார்ந்த பிரச்சினைகளின் போதும், சிறுபான்மை மக்களின் உரிமை சார்ந்த பிரச்சினைகளின் போதும் அவருடன் நேருக்கு நேராகவும், தோளோடு தோளாகவும் நின்ற நாட்கள் ஏராளம். தன்னை சார்ந்த இனத்தின் உரிமைகளுக்காக விட்டுக்கொடுப்புக்களோ அல்லது தளர்வுகளோ இல்லாது போராடிய தலைமையை இன்று தமிழ் மக்கள் இழந்திருக்கிறார்கள் என்பதை விட அனுபவமும், ஆற்றலும் கொண்ட சிரேஷ்ட அரசியல் ஆளுமையை இலங்கை தேசம் இழந்திருக்கிறது என்பதே உண்மை.

அவர்கள் திகழ்கிறார்கள். நான் கல்முனை மாநகர முதல்வராக 2010 காலப்பகுதியில் இருந்த போது சம்பந்தன் ஐயா அவர்களுக்கு பெரியளவிலான வரவேற்பொன்றை அளித்து ஆயிரக்கணக்கான கல்முனை மக்கள் முன்னிலையில் தமிழ் பேசும் மக்களின் தலைமகன் ஏற்ற விருதை வழங்கி கௌரவித்த பொழுதுகளை இந்த சந்தர்ப்பத்தில் நினைத்து பார்க்கிறேன்.


தம்பி ஹரிஸ், சிறுபான்மை சமூகமான நாங்கள் பிரிந்துவிடக்கூடாது என பாராளுமன்றத்தில் அடிக்கடி என்னிடம் கூறிவந்த அவர் சிறுபான்மை சமூகம் ஒன்றிணைந்து தான் அதிகாரப்பகிர்வு, முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அதிகாரம், உரிமைகளை பரஸ்பரமாக விட்டுக்கொடுப்புடன் வெல்ல வேண்டும் என்ற கருத்தை அடிக்கடி கூறிவந்தார். முஸ்லிங்களின் அபிலாசைகளையும், சிங்கள மக்களின் உணர்வுகளையும் மதித்த ஒரு தமிழ் தலைமை சம்பந்தன் ஐயா அவர்கள். இவரின் வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது.

சர்வதேச அங்கீகாரத்தை பெற்ற சிரேஷ்ட அரசியல் தலைமையான அவரின் காலத்திலையே இனப்பிரச்சினைக்கு தீர்வு வருமென்று நாங்கள் நம்பியிருந்தோம். இவரின் இழப்பினால் தீர்வு சம்பந்தமான இலக்கினை எவ்வாறு அடையமுடியும் என்ற கேள்வி எழுகிறது. இருந்தாலும் தான் சார்ந்த தமிழ் சமூகத்திற்கு
அவர் செய்த சேவைகள், பங்களிப்புக்கள் வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாக மாறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

அவரது இழப்பினால் துயருற்ற அவரது குடும்பத்தினர், ஆதரவாளர்கள், நண்பர்கள், இலங்கை தமிழரசு கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் எல்லோருக்கும் எனது அனுதாபங்களையும், ஆறுதல்களையும்  தெரிவித்து கொள்கிறேன். - என்று தெரிவித்துள்ளார்.