89 ஆண்டு பழமையான முஸ்லிம் திருமணம், விவாகரத்து பதிவுச் சட்டம் ரத்தாகிறது,அசாமில்




 


அசாம் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து பதிவு சட்டம் 1935 ஐ ரத்து செய்யும் மசோதாவுக்கு அசாம் அமைச்சரவை ஜூலை 18ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. பழைய சட்டத்தை ரத்து செய்வதற்கான மசோதாவை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார்.


முஸ்லிம் சமூகத்தில் குழந்தை திருமணத்தை முடிவுக்கு கொண்டு வருவதுடன், பலதார மணத்தை நிறுத்துவதும் 89 ஆண்டு பழமையான இந்த சட்டத்தை ரத்து செய்வதன் நோக்கம் என்று அசாம் அரசு கூறுகிறது.


இது ஒரு முற்போக்கான நடவடிக்கை என்று அசாம் அரசு கூறுகிறது. ஆனால், இந்த நடவடிக்கையை முஸ்லிம் குடும்பங்கள் அச்சத்துடன் பார்க்கின்றன.


பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.


சுகிடன் நிஷாவின் வயது 55, அவருக்கு திருமணம் முடிந்து 44 ஆண்டுகள் கடந்துவிட்டன. அவர் தனது கணவர் நூருல் இஸ்லாமுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். சுகிடன் நிஷா, அசாமின் போடோலாண்ட் பிராந்தியத்தின் கீழ் உள்ள தமுல்பூர் மாவட்டத்தின் சிராகுந்தி என்ற சிறிய கிராமத்தில் வசிப்பவர். அசாம் அரசின் இந்த நடவடிக்கை குறித்து அவர் தனது கணவரிடமிருந்து தெரிந்துகொண்டார்.


முஸ்லிம் சமூகத்தில் குழந்தை திருமண நடைமுறை பற்றி கேட்டபோது அதற்கு பதிலளித்த சுகிடன், "முந்தைய காலங்களில் குழந்தை திருமணங்கள் நடந்தன. இந்த நடைமுறை முஸ்லிம் சமூகத்தில் மட்டுமல்ல, பிற சமூகத்தினரும் குழந்தை திருமணத்தை செய்திருக்கிறார்கள். ஆனால் இப்போது நம் சமூகத்தில் மக்களின் சிந்தனை மாறிவிட்டது. ஒருவேளை இப்போதும் இதுபோன்ற ஒருசில திருமணங்கள் நடக்கலாம்,” என்று கூறினார்.


முஸ்லிம்களிடையே பலதார மணம் செய்யப்படும் நடைமுறை பற்றிப்பேசிய அவர், “எங்களுக்கு திருமணமாகி நீண்ட காலமாகிவிட்டது. இத்தனை வருடங்களில் என் கணவர் ஒருமுறை கூட இந்த விஷயத்தைப் பற்றி பேசியதில்லை,” என்று குறிப்பிட்டார்.


சுகிடனின் கணவர் நூருல் இஸ்லாம் உள்ளூர் நீதிமன்றத்தில் பணிபுரிகிறார். அரசின் முடிவை அவர் கேள்வி கேட்கவில்லை. ஆனால் குழந்தைத் திருமணம் மற்றும் பலதார மணம் என்று ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தின் மீதும் விரல் நீட்டுவது சரியென்று அவர் கருதவில்லை.


,அசாம் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து பதிவு சட்டம், 1935

மறுபுறம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, வரவிருக்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பழைய சட்டத்தை ரத்து செய்வதற்கான மசோதாவை தாக்கல் செய்யப்போவதாக அறிவித்தார்.


"அசாம் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டம் குழந்தை திருமணத்தை அனுமதிக்கிறது. எனவே இந்த 1935 சட்டத்தையும் அதன் விதிகளையும் ரத்து செய்ய மசோதா கொண்டு வருவோம். அதன் பிறகு புதிய சட்டம் கொண்டு வரப்படும். இதில் முஸ்லிம் திருமணங்கள் சட்டப்படி அரசு அலுவலகங்களில் பதிவு செய்யப்படும்,” என்று முதல்வர் சர்மா கூறினார்.


அசாமில் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து தொடர்பான இந்த சட்டத்தை ரத்து செய்யும் விவகாரம் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அதிகம் பேசப்பட்டு வருகிறது.


முன்னதாக, முதலமைச்சர் சர்மா, ”திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயது 18 மற்றும் 21 வயது ஆகவில்லையென்றாலும் குழந்தை திருமணத்தை பதிவு செய்ய அனுமதிக்கும் விதிகள் இந்த சட்டத்தில் உள்ளன," என்று கூறியிருந்தார்.


அசாம் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டம் 1935ஐ ரத்து செய்ததோடு கூடவே மாநிலத்தில் 94 முஸ்லிம் திருமணப் பதிவாளர்கள் அதாவது அரசு காஜிகளின் செயல்பாட்டையும் மாநில அரசு ரத்து செய்துள்ளது.



சட்ட நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

அசாம் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து பதிவு சட்டம், 1935பட மூலாதாரம்,DILIP KUMAR SHARMA/BBC

படக்குறிப்பு,அசாமில் முஸ்லிம் திருமண சட்டத்தை ரத்து செய்வது முஸ்லிம் பெண்களின் பிரச்னைகளை அதிகரிக்கும் என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர்.

முஸ்லிம் சமூகத்தில் குழந்தைத் திருமணத்தை ஒழிப்பதே இந்த சட்டத்தை ரத்து செய்வதன் பின்னணியில் இருக்கும் நோக்கம் என்று முதலமைச்சர் சர்மா வாதத்தை முன்வைத்தாலும், அவரது அரசியலைக் உற்றுநோக்கும் வல்லுநர்கள் அவரது நடவடிக்கையை பிளவுவாத அரசியலுடன் தொடர்புபடுத்துகிறார்கள்.


"சட்டத்தில் குறைபாடுகள் இருந்தால் அதைத் திருத்தியிருக்கலாம். ஆனால் முஸ்லிம் சமூகத்தில் குழந்தைத் திருமணத்தை சுட்டிக்காட்டி இத்தனை ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த சட்டத்தை ரத்து செய்திருப்பது அரசின் நோக்கம் குறித்து சந்தேகத்தை எழுப்புகிறது,” என்று குவஹாத்தி உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர். பூயான் கூறினார்.


முஸ்லிம் தனிநபர் (ஷரியத்) விண்ணப்பச் சட்டம் 1937 பற்றிக் குறிப்பிட்ட வழக்கறிஞர் பூயான் "ஷரியத் சட்டத்தின் 2வது பிரிவு, இந்தியாவில் ஷரியத் சட்டத்தின் எந்தெந்த விஷயங்கள் அங்கீகரிக்கப்படும் என்று கூறுகிறது. இதில் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்தும் அடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது," என்று தெரிவித்தார்.


"நாடாளுமன்ற சட்டங்கள் ஷரியா சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன. ஷரியா சட்டத்தில் ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் தொடங்கும் போது அவள் வயது வந்தவளாக கருதப்படுகிறாள். ஆனால், இந்த விஷயத்தில் பல கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஒரு முஸ்லிம் பெண்ணின் திருமணத்திற்கு பொருத்தமான வயது என்ன என்பது தொடர்பான வழக்கும் உச்சநீதிமன்றத்தில் பரிசீலனையில் உள்ளது.” என்றார்.


வழக்கறிஞர் பூயான் பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத்தின் வழக்கையும் குறிப்பிடுகிறார். இதில் பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி பெஞ்ச் ஜூன் 2022இல் ஒரு முக்கிய தீர்ப்பில், 18 வயதுக்குட்பட்ட ஒரு முஸ்லிம் பெண் தனது விருப்பப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியது.


அசாம் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து பதிவு சட்டம், 1935பட மூலாதாரம்,DILIP KUMAR SHARMA/BBC

படக்குறிப்பு,அசாமில் முஸ்லிம் திருமணச் சட்டத்தை ரத்து செய்வதால் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறை அதிகரிக்கலாம் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

"மாதவிடாய் தொடங்கிய பிறகு திருமணம் செய்து கொள்ள முஸ்லிம் பெண் முடிவெடுத்தால் அது குழந்தை திருமணம் என்று அழைக்கப்படாது, அதுபோன்ற நிலையில் போக்ஸோ சட்டமும் பொருந்தாது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் அசாம் அரசு முஸ்லிம் பெண்களின் திருமண வயதை 18 ஆக உயர்த்த முடிவு எடுத்துள்ளது,” என்று வழக்கறிஞர் ஏ.ஆர். பூயான் கூறினார்.


"இது குர்ஆன் மற்றும் முஸ்லிம் தனிநபர் சட்டத்தில் நேரடி தலையீடு. இந்த அரசு வெறும் அரசியல் செய்கிறது. முஸ்லிம் பெண்களை நாங்கள் பாதுகாக்கிறோம் என்று பிரசாரம் நடத்தப்படுகிறது, அதேசமயம் இந்த சட்டம் ரத்து செய்யப்பட்ட பிறகு முஸ்லிம் பெண்களின் பிரச்னைகள் அதிகரிக்கும்" என்றார் அவர்.


நவ் தகுரியா கடந்த இரண்டு தசாப்தங்களாக பல செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதி வருகிறார்.


அசாம் அமைச்சரவையின் இந்த முடிவின் பேரில், அரசு புதிய சட்டத்தை கொண்டு வரலாம் என்றும் அதில் எந்த பிரச்னையும் இல்லை என்றும் அவர் கூறுகிறார். அப்படி ஒரு முடிவை எடுப்பது அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்று குறிப்பிட்ட அவர் அதை அவர்கள் செய்வதாகவும் கூறினார்.


"அரசு அதன் அதிகார வரம்பிற்குள் நடவடிக்கைகளை எடுத்து வருவதால், தற்போதுள்ள சட்டத்தை ரத்து செய்வதையும், புதிய சட்டத்தை கொண்டு வருவதையும் தவறு என்று கூறமாட்டேன். ஆனால் அத்தகைய முடிவு கண்டிப்பாக அரசியல் ஆதாயம் தேடுவதற்கானது என்ற விவாதமும் வரலாம்," என்று அவர் குறிப்பிட்டார்.


குவஹாத்தியில் வசிக்கும் 28 வயதான மனிஷா பேகம், முஸ்லிம் பெண்களின் விஷயங்களில் நடக்கும் அரசியலைப் பற்றி கவலைப்படுகிறார்.


முஸ்லிம்களின் திருமணம் மற்றும் விவாகரத்து தொடர்பான பழைய சட்டத்தைப் பற்றிப்பேசிய அவர், "அரசு குழந்தை திருமணத்தைப் பற்றி பேசும் போதெல்லாம் அது முஸ்லிம்களின் பெயரை மட்டுமே குறிப்பிடுகிறது. அதே சமயம் மற்ற சமூகங்கள் மற்றும் பழங்குடியினரிடையே குழந்தை திருமணம் நடைபெறுகிறது" என்று அவர் கூறுகிறார்.


மேலும், "இந்த அரசு குழந்தை திருமணத்தின் பெயரால் ஒரு பிரச்னையை உருவாக்குகிறது. குழந்தை திருமண பிரச்னையை தீர்ப்பது அரசின் நோக்கமாக இருந்தால், அது ஒரு சமூகத்தை மட்டும் குறிவைத்திருக்காது." என்கிறார்.


இந்து யாத்திரைக்காக கடைகளில் முஸ்லிம்கள் பணிநீக்கம் - உத்தரபிரதேசத்தில் என்ன நடக்கிறது?

22 ஜூலை 2024

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பதவி நீக்கம் செய்ய திட்டமா? பாஜகவில் என்ன நடக்கிறது?

21 ஜூலை 2024

'வெறுப்பு அரசியலே அரசின் நோக்கம்' - காங்கிரஸ்

'வெறுப்பு அரசியலே அரசின் நோக்கம்' - காங்கிரஸ்பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த சட்டத்தை ரத்து செய்வதன் பின்னணியில், வெறுப்பு அரசியலே இருப்பதாக குவஹாத்தி உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரும்,காங்கிரஸ் தலைவருமான ஹஃபீஸ் ரஷீத் அகமது செளத்ரி கூறினார்.


"இந்த சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக அரசு உணர்ந்திருந்தால் அதைத் திருத்தியிருக்கலாம். இந்த சட்டத்தின்படி குழந்தைத் திருமணம் நடந்திருந்தால், காஜி மீது அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த சட்டம் தொடர்பாக அரசு உருவாக்கி கொண்டிருக்கும் சூழ்நிலை அவர்களின் மத அரசியல் நோக்கத்தை காட்டுகிறது," என்று ஹஃபீஸ் ரஷீத் கூறினார்.


அசாம் அரசு எந்தவித ஆய்வும் இன்றி முஸ்லிம்களின் திருமணம் மற்றும் விவாகரத்துக்கான புதிய சட்டங்களை கொண்டு வருவது குறித்து பேசி வருகிறது என்று அசாம் சட்டப்பேரவையில் காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் தேவ்ரத் சைகியா குறிப்பிட்டார்.


"குழந்தை திருமணம் என்பது முஸ்லிம்களின் பிரச்னை மட்டுமே இல்லை. தேயிலைத் தோட்ட பழங்குடியினர் உட்பட பழங்குடியின மக்களிடையேயும் குழந்தை திருமணம் நடக்கிறது. ஆனால் இந்த அரசு முஸ்லிம்களுக்கு எதிராக அதிக நடவடிக்கை எடுக்கிறது. குழந்தை திருமணம் முஸ்லிம்களிடையே மட்டுமே பரவலாக உள்ளது என்று ஒரு பெரிய பிரிவை நம்ப வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இவை அனைத்தும் அரசியல் ஆதாயங்களுக்காக மட்டுமே செய்யப்படுகின்றன,” என்று அவர் குறிப்பிட்டார்.


"80 சதவிகித குழந்தைத் திருமணங்கள் சிறுபான்மை சமூகங்களிலும், 20 சதவிகிதம் பெரும்பான்மை சமூகங்களிலும் நடக்கிறது. ஆனால் எங்களுக்கு பிரச்னை மதம் அல்ல, சமூகம் தொடர்பானது" என்று முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறுகிறார்.


புள்ளிவிவரம் கூறுவது என்ன?

புள்ளிவிவரங்கள் என்ன சொல்கின்றனபட மூலாதாரம்,DILIP KUMAR SHARMA/BBC

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, அசாமில் உள்ள மொத்த மக்கள் தொகையான 3.12 கோடியில் 1.06 கோடி பேர் முஸ்லிம்கள். இது மொத்த மக்கள் தொகையின் 34 சதவிகிதம் ஆகும்.


ஆனால் தற்போது மாநிலத்தில் முஸ்லிம்களின் மக்கள் தொகை 1 கோடியே 40 லட்சம் என்று முதல்வர் சர்மா கடந்த சில நாட்களாக ஊடகங்களிடம் கூறி வருகிறார். அதேசமயம் 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்குப் பிறகு அத்தகைய தரவு எதுவும் வெளிவரவில்லை.


முதலமைச்சரின் கூற்றுப்படி பார்த்தால் மாநிலத்தில் முஸ்லிம்களின் மக்கள் தொகை ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் 16 சதவிகிதம் அதிகரித்து வருகிறது.


"அசாமில் ஒவ்வொரு 10 ஆண்டுகளிலும் முஸ்லிம் மக்கள் தொகை 22 லட்சம் அதிகரித்து வருகிறது. இந்த வகையில் 2041இல் மாநிலத்தில் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் எண்ணிக்கை சமமாகி, 2051இல் அசாம் முஸ்லிம் பெரும்பான்மை மாநிலமாக மாறும்,'' என்று முதல்வர் கூறுகிறார்.


அசாமில் நடக்கும் அரசியலை குறிப்பாக வங்காள வம்சாவளியைச் சேர்ந்த முஸ்லிம்கள் குறித்து உன்னிப்பாக கவனித்து வரும் மூத்த பத்திரிகையாளர் சமீர் கே புர்கயஸ்தா, “உண்மையில், கடந்த மக்களவைத் தேர்தலில், அசாம் மாநிலத்தில் காங்கிரஸை விட பா.ஜ.க குறைந்த வாக்குகளையே பெற்றது. இது தவிர இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள ஜோர்ஹாட் தொகுதியில் ஏற்பட்ட தோல்வி எதிர்ப்பு அலையை பிரதிபலிக்கிறது," என்று கூறினார்.


"ஐந்து சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. எனவே இந்த சட்டத்தின் போர்வையில் வெறுப்பு அரசியல் என்ற பழைய ஃபார்முலாவை முதல்வர் பின்பற்றுகிறார்," என்றார் அவர்.


தமிழ்நாட்டில் சோழர் ஆட்சியில் சமண மதத்தின் நிலை என்ன? ஆண் தேவரடியார்கள் என்ன செய்தனர்?

21 ஜூலை 2024

உலகம் முழுவதும் 85 லட்சம் கணினிகள் முடக்கம் - தமிழ்நாட்டில் ஐ.டி. நிறுவனங்களில் என்ன பாதிப்பு?

21 ஜூலை 2024

'குழந்தை திருமணத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதே நோக்கம்' - பா.ஜ.க

மௌலானா ஃபக்ருதீன் அகமதுபட மூலாதாரம்,DILIP KUMAR SHARMA/BBC

படக்குறிப்பு,அனைத்து அசாம் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து பதிவாளர் மற்றும் காஜி சங்கத்தின் தலைவர் மௌலானா ஃபக்ருதீன் அகமது.

அசாம் அரசு இந்த ஆண்டு பிப்ரவரியில் சட்டத்தை ரத்து செய்ய முடிவு செய்த பின்னர் மாவட்ட ஆணையர் மூலம் மாநிலத்தில் 94 முஸ்லிம் திருமணப் பதிவாளர்களால் பராமரிக்கப்படும் பதிவுகளை தன் வசம் எடுத்துக் கொண்டுள்ளது.


சட்டம் ரத்து செய்யப்பட்ட பிறகு முஸ்லிம் திருமணப் பதிவாளர்களின் (அரசு காஜிகள்) மறுவாழ்வுக்காக தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக அரசு உறுதியளித்துள்ளது. இருப்பினும், அத்தகைய கூற்றுகள் குறித்தும் சந்தேகம் எழுப்பப்படுகிறது.


அசாம் அரசால் நியமிக்கப்பட்ட முஸ்லிம் திருமண-விவாகரத்து பதிவாளரும், காஜியுமான மௌலானா ஃபக்ருதீன் அகமது கடந்த 25 ஆண்டுகளாக அரசு காஜியாக பணியாற்றி வந்தார்.


"இந்த சட்டத்தை ரத்து செய்யும் அரசின் முடிவால் நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன். குழந்தை திருமணத்தைப் பொருத்தவரை, திருமணப் பதிவின் போது பிறப்புச் சான்றிதழிலிருந்து எல்லா ஆவணங்களையும் நாங்கள் சரிபார்க்கிறோம்," என்று அவர் குறிப்பிட்டார்.


"கிராமத்தில் உள்ளவர்கள் காஜியின் முன் வெளிப்படையாக பேசுவார்கள். ஆனால் இப்போது திருமணங்களை பதிவு செய்வதில் மக்கள் அதிக சிரமப்படுவார்கள். இப்போது மாவட்ட ஆணையர் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும். இது பதிவு செய்வதற்கான நீண்ட செயல்முறையின் ஒரு பகுதியாக இருக்கும்,” என்றார் அனைத்து அசாம் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து பதிவாளர் மற்றும் காஜி சங்கத்தின் தலைவர் மௌலானா அகமது.


"இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அரசு எங்கள் வேலையை முடக்கிவிட்டது. இரண்டு லட்சம் இழப்பீடுக்கு பதிலாக திருமணம் மற்றும் விவாகரத்து வழக்குகளில் உள்ளவர்களுக்கு உதவ எங்களை திருமணப் பதிவாளர் அலுவலகத்தில் அரசு நியமிக்க வேண்டும்," என்று அவர் கேட்டுக்கொண்டார்.


குழந்தை திருமணம் தொடர்பான கைதுபட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,குழந்தை திருமணம் தொடர்பாக இதுவரை பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் (கோப்பு படம்)

இந்த சட்டத்தை ரத்து செய்யும் போர்வையில் வகுப்புவாத அரசியல் செய்வதாகக் கூறப்படும் எல்லா குற்றச்சாட்டுகளையும் அசாம் பிரதேச பாஜக மூத்த தலைவர் விஜய் குமார் குப்தா மறுத்துள்ளார்.


"குழந்தை திருமணம் போன்ற தீய பழக்கங்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதே எங்கள் அரசின் முன்னுரிமை. முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் கல்வி கற்று சமூகத்தில் முன்னேற வேண்டும். இது தவிர, மக்கள் தொகையையும் கட்டுப்படுத்த வேண்டும்," என்று இதுகுறித்து விஜய் குமார் குப்தா கூறினார்.


"பலர் பலதார மணம் செய்கிறார்கள், மக்கள்தொகையை அதிகரிப்பதில் ஈடுபட்டுள்ளனர், இதனால் இந்தியாவின் வடகிழக்கு பகுதி முஸ்லிம் மாநிலமாக மாறும். இதை அரசு அனுமதிக்காது. குழந்தை திருமணம், பலதார மணம் மற்றும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த மட்டுமே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.” என்றார்.