அக்கரைப்பற்று மருது விளையாட்டுக்கழகம் சம்பியன்




 


(சுகிர்தகுமார்)


 அக்கரைப்பற்று மருது விளையாட்டுக்கழக இரவு நேர மின்னொளியின் கீழாக பிரமாண்டமாக நடாத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டித் தொடரில் அக்கரைப்பற்று மருது விளையாட்டுக்கழகம் சம்பியனானது.
அக்கரைப்பற்று தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் கடந்த வாரம் தொடராக மின்னொளியில் இடம்பெற்ற சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியானது நேற்றிரவு (03) இடம்பெற்றது.
இறுதிப்போட்டியில் அக்கரைப்பற்று லோர்ட்ஸ் கழகத்தினை எதிர்கொண்டு அக்கரைப்பற்று மருது விளையாட்டுக்கழகம் 6 விக்கட்டுகளினால் வெற்றி பெற்று சம்பியனானது.
இத்தொடரில் மொத்தமாக 64 அணிகள் கலந்து கொண்டதுடன் இறுதியாக 4 அணிகள் அரை இறுதி ஆட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டன.
 அக்கரைப்பற்று மருது விளையாட்டுக்கழகம்.  ஒலுவில் பவர் ஸ்டார் விளையாட்டுக்கழகம் அக்கரைப்பற்று லோர்ட்ஸ் விளையாட்டுக்கழகம். ஈஸ்ட்றன் வாரியஸ் விளையாட்டுக்கழகம் ஆகியன தெரிவு செய்யப்பட்டன.
விறுவிறுப்பாக இடம்பெற்ற போட்டிகளில் 4 அணிகளும் பலப்பரீட்சை நடாத்தி இறுதி ஆட்டத்திற்கு மருது மற்றும் லோர்ட்ஸ் அணிகள் தெரிவாகின.
இறுதிப்போட்டியில் மருது விளையாட்டுக்கழகம் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது. இதன் அடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய அக்கரைப்பற்று லோர்ட்ஸ் 5 ஓவர்கள் நிறைவினில் 4 விக்கட்டினை இழந்து 38 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மருது விளையாட்டுக்கழகம் 3 ஓவர்கள் நிறைவினில் ஒரு விக்கட்டினை மாத்திரம் இழந்து 39 ஓட்டங்களை பெற்று சம்பியன் கிண்ணத்தை தனதாக்கி கொண்டது.
இச்சுற்றுத்தொடரின் தொடர் ஆட்டநாயகனாக மருது விளையாட்டுக்கழக வீரர் ஜனுஜன் தெரிவு செய்யப்பட்டதுடன் சிறந்த பந்து வீச்சாளராகவும் ஆட்ட நாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டு 3 கிண்ணங்களை பெற்றுக்கொண்டார்.
சிறந்த துடுப்பாட்ட வீரராக அக்கரைப்பற்று லோர்ட்ஸ் அணியின் அம்சத் மற்றும் கவர்ந்த வீரராக மருது விளையாட்டுக்கழகத்தின் கோசித் தெரிவானார்