புதிய நீர் இணைப்புக்காக சேதம் செய்யப்பட்ட வீதிகளை சீரமைக்க கல்முனை மாநகர சபை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு காரணம் என்ன?




 


(எஸ்.அஷ்ரப்கான்)


கல்முனை மாநகர சபை பகுதியில் புதிய நீர் இணைப்புக்காக மாநகர சபையின் அனுமதி பெற்று சேதமாக்கப்பட்ட கொங்கிரீட் வீதிகள் இன்னும் சீர் செய்யப்படாததால் மக்கள் பல்வேறு அசோகரிகங்களுக்ககுள்ளாகி வருகின்றனர் என்று இலங்கை நீதிக்கான  மய்யம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்க்ப்பட்டுள்ளது.

நீதிக்கான மய்யத்தின் தலைவர் சட்டத்தரணி ஸஹ்பி எச்.இஸ்மாயில் இது விடயமாக மேலும், குறிப்பிடும் போது

இவ்வாறான புதிய நீர் மின் இணைப்பினை பெறும் விண்ணப்பதாரர்கள் கல்முனை மாநகர சபைக்கு ஏற்கனவே புதிய நீர் இணைப்புக்காக சேதம் செய்யப்படும் பாதையினை செப்பம் செய்வதற்கான கட்டணத்தை கட்டிய பின்னரே நீர் இணைப்புக்காக அனுமதியை பெற்றுக்கொள்கின்றனர். ஆனால் கல்முனை மாநகர சபை ஆள்புல எல்லைக்குள்  நீர் இணைப்பு வேலைகள் முடிவடைந்த பின்னரும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் சேதம் செய்யப்பட்ட பாதைகள் மாநகர சபையினால் செப்பம்  செய்யப்படாமல் நெடுங்காலமாக காணப்படுகின்றது. இது மாநகர சபை கட்டளை சட்டத்தினை மீறும் ஒரு செயற்பாடாகும். மாநகர சபை கட்டளைச் சட்டத்தின் 46 மற்றும் 47 ஆவது பிரிவின்படி, வீதிகளை நிர்மாணிப்பதும் பராமரிப்பதும் மாநகர சபையின் அடிப்படைப் பொறுப்புகளாகும். இந்த அடிப்படை கடமைகளை நிறைவேற்றத் தவறுவது, மாநகர சபையின் பிரயோசன தன்மையை கடுமையான கேள்விக்கு உட்படுத்துகிறது.
ஒரு குறிப்பிட்ட சேவையினை வழங்கவென நிதி அறவிடப்பட்டு பின்னர் சேவையை வழங்காதிருப்பது ஒரு நிதி மோசடி ஆகும் என நீதிக்கான மய்யம் சுட்டிக்காட்டி உள்ளது.

நீதிக்கான் மய்யம் மாநகர சபை ஆணையாளருக்கு அனுப்பி வைத்த கடிதத்தில் செப்பெனிடும் பணியை  ஆரம்பிக்குமாறு வேண்டுகோள் விடுத்ததோடு  மாநகர சபை நடவடிக்கை எடுக்காது போனால் மாநகர சபைக்கு எதிராக ஒரு சட்ட நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்க தயாராகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.