சமூகமயமாக்கலும் பாடசாலை இணைந்த கலைத்திட்டமும்





கல்வி என்பது சுயசெயற்பாடு எனும் கூற்றிற்கு இணங்க பரீட்சையை மாத்திரம் மையமாகக் கொண்டு மாணவர்களுக்கு கல்வி வழங்கப்படகூடாது என்பதற்கிணங்க அவர்களுடைய சமநிலை ஆளுமையை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு இணைப்பாடவிதான செயல்பாடுகளின் மூலமாக அவருடைய திறன்களை வளர்த்துக் கொள்வதற்கான பல்வேறு நிகழ்வுகள் பாடசாலை மட்டத்தில் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.எடுத்துக்காட்டாக பாடசாலை தமிழ் தின போட்டி, ஆங்கிலத்தினப்போட்டி மாணவர்களின் அறிவு மேம்படுவதுடன் போட்டி போட்டு செயல்படும் விதத்தை அறிந்து கொள்ள, சமூகத்தில் பிற மாணவர்களுடன் சேர்ந்து பழகும் வாய்ப்பு நற்குணங்களை வளர்த்துக்கொள்ள, தோல்வியை ஏற்றுக் கொள்ளல், வெற்றி பெற்றவர்களை பாராட்டும் பண்பு என சமூகமயமாக்கல் பண்பு வளர்க்கப்படுகின்றது.

இணைந்த கலைத்திட்ட செயல்முறைகளாக கல்வி சுற்றுலா, விளையாட்டுப் போட்டி, முதலுதவி,சாரணியம், மாணவர் மன்றம்,  விழாக்கள்,பெருங்காட்சி மற்றும் கண்காட்சி பல்வேறு மன்றங்கள் அல்லது கழகங்களின் செயல்பாடுகள் போன்றவற்றை குறிப்பிடலாம். இவ்வாறு பாடசாலைகளில் இடம்பெறும் இணைப்பாடவிதான செயல்பாடுகளின் மூலமாக மாணவர்கள் எவ்வாறு சமூகமயமாக்கப்படுகின்றார்கள் என்பதனை பின்வருமாறு ஆராயலாம்.இதன்படி கல்வி சுற்றுலாவை எடுத்துக் கொள்வோமானால் பாட நூல்களில் அல்லது ஆசிரியர் கை நூல்களில் காணப்படும் இடங்கள் அல்லது பிரசித்தி பெற்ற இடங்களை நேரில் சென்று பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பாக இக்கல்வி சுற்றுலா அமைகின்றது மேலும் விழுமிய பண்புகளை வளர்த்துக் கொள்ளவும் ஒரு மேடையாக இச்செயல் முறையானது காணப்படுகின்றது.
அதாவது கல்வி சுற்றுலாக்களின் மூலமாக தேவாலயங்கள், விகாரைகள், கோயில்கள், பள்ளிவாசல்கள் போன்ற பல்வேறு மத ஸ்தலங்களுக்கு மாணவர்களை அழைத்துச் செல்வதனால் அங்கு எவ்வாறான விழுமிய பண்புகள் காணப்படுகின்றது என்பது தொடர்பாக அறிந்து பல்வேறு மதம் தொடர்பான அறிவினையும் மாணவர்கள் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படுகிறது. இதன் மூலமாக சமூகமயமாக்கம் மாணவர்கள் மத்தியில் இடம்பெறக்கூடியதாக உள்ளது எனலாம்.
மேலும் விளையாட்டுப் போட்டிகள் மூலமாக மாணவர்கள் ஏனைய பாடசாலை மாணவர்களோடு போட்டியிடுவதற்கான வாய்ப்புகளும் தொடர்பு கொள்வதற்கான வாய்ப்புகளும் ஏற்படுவதனால் ஏனைய பாடசாலைகள் தொடர்பான சட்டதிட்டங்கள், விழுமியப்பன், விதிகள்,நடைமுறைகள் என பல்வேறு விடயங்களையும் அம்மாணவர்கள் தொடர்பு கொள்வதன் மூலமாக அறிந்து கொள்ளக் கூடியவர்களாக உள்ளனர்.அதே நேரம் ஏனைய பாடசாலை மாணவர்களுடன்  நட்புறவும் மாணவர்களுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே விளையாட்டு போட்டிகள் மூலமாக சிறந்த சமூகமயமாக்கல் தன்மையை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது.
சாரணிய இயக்க செயற்பாடுகளின் மூலமாக சாரணியர் பாடல், சர்வதேச சமய வழிபாடு, உடற்பயிற்சி, விளையாட்டு போட்டி,  முதலுதவி சிகிச்சை, மனக்கட்டுப்பாடு, ஒழுக்க பண்பு, சேவை மனப்பான்மையை வளர்த்தல், தலைமை பண்பு, பிறருக்கு உதவுதல், கூடாரம் அமைத்தல், தீயணைப்பு போன்ற பல்வேறு செயல்பாடுகள் விருத்தி பெற சாரணிய இயக்கம் உதவுகின்றது. ஏனைய பாடசாலை மாணவர்களோடு தொடர்பு கொள்வதற்கான வாய்ப்புகளை சாரணிய இயக்கம் ஏற்படுத்திக் கொடுப்பதனால் மாணவர்கள் மத்தியில் சமூகமயமாகும் தன்மை விருத்தி அடைகின்றது.
பாடசாலைகளில் ஒளிவிழா, சரஸ்வதி பூஜை, மீலாத்து நபி விழா போன்ற பல்வேறு விழாக்கள் பாடசாலைகளில் இடம்பெறுவதனால் ஒவ்வொரு மதத்தை சார்ந்த விடயங்கள் கலை கலாச்சார அம்சங்கள், பண்பாடுகள் தொடர்பான விடயங்களை அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு மாணவர்கள் மத்தியில் ஏற்படுகின்றது. அத்தோடு மாணவர்கள் ஏனைய மதத்தவர்களுடைய விழாக்களில் இணைந்து நிகழ்வுகளில் பங்குபெற்றுதல், அவர்களுடைய விழாக்களுக்கான உதவி வேலைப்பாடுகளை செய்தல் போன்றவற்றின் மூலமாக சமூகமயமாக்கல்   மாணவர்கள் மத்தியில் இடம்பெறக்கூடியதாக உள்ளது. இதற்காக இணைபாடவிதான செயல்பாடுகளாக காணப்படும் பாடசாலை மட்டத்தில் இடம்பெறுகின்ற இவ்வாறான விழாக்கள் மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றது என்று கூறலாம்.
மாணவர் மன்ற  செயற்பாடுகள்  மூலமாக பாடசாலைகளில் இடம்பெறும் தமிழ் இலக்கிய கலாமன்றம்,  சமய சமூகம் சார்ந்த மன்றங்கள் நடத்தப்படுவதனால் மாணவர்கள் பல்வேறு நிகழ்வுகளில் ஆர்வத்துடன் பங்கு பற்றுவதோடு அவர்களுடைய திறமைகளையும் வெளிக்காட்டுவதற்கான களமாக அமைகின்றது. இதன் மூலமாக சமூகத்தின் மத்தியில் தங்களுடைய திறமைகளை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதாக அமைகின்றது. இதன் மூலமாக ஆசிரியர் மாணவர் தொடர்பும்,மாணவர் மாணவர் தொடர்பு என்பன சிறந்த முறையில் ஏற்பட்டு மாணவர்கள் மத்தியில் சமூகமயமாக்கல் தன்மையானது மேலும் விருத்தி அடைவதற்கு மாணவர்மன்ற செயல்பாடுகள் முக்கியமானதாக அமைகின்றது எனலாம்.
கல்வி என்பது வாழ்கைக்கான பொருத்தப்பாடு என்பதற்கு இனங்க மாணவர்கள் மத்தியில் தன்னம்பிக்கை, சுயகௌரவம், சுயதிறன் விருத்தி என்பவை ஏற்படுவதோடு தலைமைத்துவ பண்பு, பிறருக்கு உதவும் மனப்பான்மை, குழு முயற்சி, கூட்டுறவு பண்பு, நம்பிக்கை, தேசிய ஐக்கியம், தேசிய ஒருமைப்பாடு, தமது சுற்றாடலை பேண வேண்டும் என்ற உணர்வு போன்ற சமூகமயமாக்கல் தன்மைகள் மாணவர்கள் மத்தியில் ஏற்படக்கூடியதாக அமைகின்றது அவ்விதத்திலேயே இணைந்த கலைத்திட்டமானது பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ளது எனலாம்.
அந்த விதத்தில் விளையாட்டு போட்டிகளாக இருக்கட்டும், சுற்றுலாவாக இருக்கட்டும், சாரணியம், விழாக்கள், கழகங்கள் போன்றவற்றில் மாணவர்கள் பங்கு கொள்வதினால் தங்களுடைய பிள்ளைகளின் கல்வி செயல்பாடுகள் சீரழிய வாய்ப்பு உள்ளது என பெற்றோர்கள் எண்ணுகின்றனர். இதன் மூலமாக மாணவர்கள் சமூகமயமாகும் தன்மையானது குன்றி குறுகிய வட்டத்துக்குள்ளேயே மாணவர்கள் புத்தகப் பூச்சிகளாக உருவாக்கப்படுகின்றனர். எனவே இணைந்த கலைத்திட்டம் தொடர்பான தெளிவான அறிவினை பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் சரியான விதத்தில் வழங்குதல் வேண்டும்.
ஆனால் மாணவர்கள் இதில் பங்கு கொள்ளும் விதமானது மிகவும் குறைவாகவே உள்ளது. இதன் மூலமாக மாணவர்களுக்கு தோல்வியை கண்டு துவண்டு விடும் பண்பு, மற்றவர்களிடம் கருத்துக்களை பரிமாறிக் கொள்வதில் உள்ள அச்சம், பயம், கூச்சம் போன்ற விடயங்களின் மூலமாக பல்வேறு சிக்கல்களுக்கு மாணவர்கள் உள்ளாக நேரிடக் கூடியதாக உள்ளது. சிறந்த சமூகமயமாக்கல் தன்மை மாணவர்கள் மத்தியில்  இல்லாத காரணத்தினால்  இன்றைய காலகட்டங்களில் பல மாணவர்கள் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளனர்  என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.  இவ்வாறான நிலைமைகளிலிருந்து  மாணவர்களை விடுவித்து ஒரு சுமுகமான வாழ்க்கையை வாழ்வதற்கு சமூக மயமாக்கல் என்பது மிகவும் முக்கியமானதாக உள்ளது என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை எனலாம்.

காராளசிங்கம் ஷயந்தினி,
நான்காம் வருட கல்வியியல் சிறப்புக்கற்கை மாணவி,
கல்வி பிள்ளை நலத்துறை,
கிழக்குப் பல்கலைக்கழகம்,
வந்தாறுமூலை.