நூருல் ஹுதா உமர்
நாடு முழுவதிலுமுள்ள பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் கல்விசாரா ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் ஒரு மாதத்தையும் கடந்துள்ள நிலையில் அவர்கள் எதிர்பார்க்கும் கோரிக்கைகளுக்கான உத்தரவாதம் எதனையும் அரசாங்கம் வழங்காத நிலையில் இன்று (2024.06.03) தென்கிழக்கு பல்கலைக்கழக முன்றலில் ஊழியர்கள் கறுப்புப் பட்டிகளை அணிந்தவர் பாரிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்க தலைவர் எம்.ரி.எம். தாஜுடீன் தலைமையில் இடம்பெற்ற குறித்த போராட்டத்தில் ஊழியர்களின் உக்கிர போராட்டத்திற்கு மத்தியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தாஜுடீன்,
நாங்கள் சொகுசு தேவைகளுக்காக போராடவில்லை. எங்களது போராட்டம் ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட நியாயமான கோரிக்கைக்கான போராட்டம். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலவரங்களின் காரணமாக எங்களது ஊழியர்கள் தங்கள் வாழ்வை கொண்டு செல்ல மிகுந்த சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். ஊழியர்களின் போராட்டம் காரணமாக பல்கலைக்கழகங்கள் ஸ்தம்பித நிலையை அடைந்துள்ளன இதனால் மாணவர்களின் கல்விநிலை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இவைகள் தொடர்பில் அரசாங்கமோ அல்லது மாணவர்களோ கவலைப்பட்டதாக தெரியவில்லை. அவ்வாறு அவர்கள் கவலைப்பட்டிருந்தால் எங்களது நியாயமான கோரிக்கைகள் தொடர்பில் கருத்துக்களையாவது வெளியிட்டிருப்பர். என்றும் இன்று இடம்பெறும் அமைச்சர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகளில் கோரிக்கைகள் தொடர்பில் நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
ஊழியர் சங்கத்தின் செயலாளர் எம்.எம். முகமது காமிலின் வழிகாட்டலில் இடம்பெற்ற குறித்த போராட்டத்தின் போதே ஊழியர் சங்கத்தின் தலைவர் எம்.ரி.எம். தாஜுடீன் தெரிவித்தார்.
இங்கு கருத்து தெரிவித்த ஊழியர் சங்கத்தின் செயலாளர் எம்.எம். முகமது காமில், ஒரு மாதத்துக்கு மேலாக எங்களது நியாயமான கோரிக்கைகளை முன்னிறுத்தி சகல பல்கலைக்கழகங்களிலும் ஊழியர்கள் போராடி வரும் சூழலில் குறித்த வேலை நிறுத்த போராட்டத்தின் காரணமாக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தங்களுக்கு சாதகமான பதில் கிடைக்குமாக இருந்தால் உடனடியாக கடமைக்கு திரும்ப தயாராக இருப்பதாகவும் அவ்வாறு இல்லையென்றால் போராட்டத்தை தொடர்வதை தவிர வேறுவழியில்லை என்றும் தெரிவித்தார்.
இன்றைய போராட்டத்தின் போது சம்பள அதிகரிப்பை வழங்கக் கோரியும் தங்களது பல்வேறு கோரிக்கைகளுக்கு அரசாங்கம் தீர்வை தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இங்கு; ஒற்றுமையே பலம், சமத்துவமே எம் தேவை, அரசாங்கமே கண்முளித்துப்பார், 8 வருட ஏமாற்றம் இன்னும் தொடருமா?, வேண்டாம் வேண்டாம் பாகுபாடு வேண்டாம், புத்திஜீவிகளை உருவாக்கும் அரசு ஊழியர்களாகிய நாங்கள் நடுத்தெருவில் என்பன போன்ற கோஷங்களும் எழுப்பப்பட்டன.
Post a Comment
Post a Comment